Friday, 24 May 2019

ஒரே வீட்டில் ஏக ராசிக்காரர்களாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

ஒரே வீட்டில் ஏக ராசிக்காரர்களாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?


ஒரு குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருக்கலாமா? ஒருவேளை அப்படி இருந்தால் என்ன ஆகும்? என சந்தேகங்கள் பலருக்குத் தோன்றும். அப்படி இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்று யோசிப்பவராக இருந்தால்....படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு குடும்பத்தை ஆளும் பொறுப்பு கணவன் - மனைவி இருவருக்குமே உள்ளது. இவர்கள் ஒரே ராசியாக நிச்சயம் இருக்கக் கூடாது என்பது ஜாதகம் சொல்கிறது. பெரும்பாலும் நம் பெற்றோர்கள் திருமணத்திற்கு முன்னரே ராசி பொருத்தம் உட்பட அனைத்தும் சரியாக உள்ளதா எனப் பார்த்து தான் மணம் முடிப்பார்கள். ஆனால் பெற்றோர் கையை மீறிக் காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்படும் போது சிலருக்கு ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. சரி, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்காவது மாறும் என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கும் ஒரே ராசியாகவே அமைந்துவிடுகிறது. ஆக ஒரே குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

அவ்வாறு ஒரே குடும்பத்தில் மூன்று, நான்கு பேருக்கு ஏக ராசியாக அமையும் பட்சத்தில், அந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வதின் மூலம் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும்.
ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள மூவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். இதனால், குடும்பத்தில் எந்த நேரமும் சண்டை, சச்சரவு, பிரிவு, பொருள் இழப்பு, விபத்து எனச் சொல்ல முடியாத அளவிற்கு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு மாறாக அந்த ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருந்து விட்டால் பிரச்னையே இல்லை. கூட கோபுரமும், மாட மாளிகையும் எனக் கோபுரத்தின் உச்சிக்கு வந்துவிடுவர்.
என்ன பரிகாரம் செய்யலாம்:
இவர்கள் சம்ஹார ஸ்தலங்களுக்கு (அதாவது கடலோரமாக உள்ள கோவில்களுக்கு) சென்று வழிபாடு நடத்தலாம் என முன்னோர்கள் பழைய நூலில் கணித்து வைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று நீராடி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். மேலும், பிரதி வாரம் சனிக்கிழமைகளில் நவக்கிரத்திற்கு எள் விளக்கிட்டு 27 முறை சுற்றி வரலாம். கிரகங்களின் தாக்கம் குறையும்.
ஏக ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் நேரத்தில், குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளாக இருப்பின் உறவினர் வீடு அல்லது விடுதி ஆகிய இடங்களில் தங்கலாம். கணவன் மனைவியாக இருந்தால் கிரக நிலைகளின் தாக்கம் குறையும் வரை பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடைபெறும் காலங்களில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

ஏக ராசி

பெற்றோர்கள், தங்களுடைய மகள் அல்லது மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணும்போது அவர்களின் மனதில் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன. அதாவது, எந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம்? எந்த எந்த நட்சத்திரம் திருமணத்துக்கு உகந்தது அல்ல,எந்த நட்சத்திரம் தம் பிள்ளைக்குப் பொருந்தும்? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கை.அந்த வரிசையில், அனைவருக்கும் காலம் காலமாகத் தோன்றும் சந்தேகம் ஏக நட்சத்திரம் மற்றும் ஏக ராசியில் திருமணம் செய்யலாமா என்பதுதான். ஏக நட்சத்திரம் என்றால் என்ன? அல்லது ஏக ராசி என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம், ஏகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில்
 'ஒன்று' எனப் பொருள்படும். ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களை இணைக்கலாமா என்ற எண்ணம் அனைவருக்கும் தொன்றுதொட்டு  இருந்து வருகிறது. 
பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி, சில நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக இருந்தால், திருமணம் செய்யலாம் என்றும் சில நட்சத்திரங்கள் திருமணம் செய்யக்கூடாது என்றும் 'காலபிரகாசிகா' என்ற ஜோதிட நூல் விளக்குகிறது. 
இணைக்கக் கூடாத ஒரே நட்சத்திரங்கள்:
பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி  ஆகிய  நட்சத்திரங்கள், மணமகள் மணமகன் நட்சத்திரங்களாக வந்தால், திருமணம் செய்யக்கூடாது. சிறிதுகூட பொருத்தம் இல்லை. இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்கக்கூடாது. 
இணைக்கக்கூடிய ஒரே நட்சத்திரங்கள்:
ரோகிணி, திருவாதிரை,,மகம், அஸ்தம், விசாகம்,,திருவோணம்,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன்,  மணமகளுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். இவை நல்ல பலன்களை கொடுக்கும். தசா சந்திப்பு தோஷம் உண்டாகாது.
மத்திம பலன்களை தரும் வகையில் இணைக்கக் கூடிய ஒரே நட்சத்திரங்கள்: அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம்  ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். ஆனால், மத்திமமான பொருத்தம்தான். மொத்தத்தில் திருமணம் செய்யலாம், பாதகம் இல்லை.
பொருத்தமுள்ள ஒரே நட்சத்திரத்தை, சேர்ந்த மணமகள் மணமகன்களுக்கு திருமணம் செய்யும்போது நட்சத்திரத்தின் முந்தைய பாதம் ஆணுக்கும்  அடுத்த பாதம் பெண்ணுக்கும் இருந்தால், திருமணம் செய்யலாம். 
உதாரணமாக, ரோகிணி நட்சத்திரம் என்றால், நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆணுக்கும் இரண்டு மூன்று நான்கு ஆகியவற்றில் ஏதாவதொரு பாதம் பெண்ணுக்கு இருப்பது நற்பலன்கள் கொடுக்கும்.
பெண் நட்சத்திரப் பாதம் முதலிலும் ஆண் நட்சத்திரப் பாதம் பிந்தியதாகவும் இருந்தால், திருமணம் செய்வது சிறப்பான பலன் இல்லை. உதாரணமாக, திருவாதிரை நட்சத்திரம் என்றால், திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதம் பெண்ணுக்கும் இரண்டு மூன்று நான்கு பாதங்களில் ஏதாவதொரு பாதம் ஆணுக்கும் இருப்பது நற்பலன்களைக் கொடுக்காது.
27  வது நட்சத்திரம் திருமணம் செய்யலாமா?
பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் கணக்கிடும் போது 27 வது நட்சத்திரமாக வந்தால், பெண்ணின் நட்சத்திரம் ஆணின் நட்சத்திரமும் ஒரே ராசியில், இருந்தாலும் திருமணப் பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம் உத்தம பலன்கள் உண்டாகும்.
 அப்படி அல்லாமல், இருவர் ராசியும் வெவ்வேறாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இதற்கு தினப்பொருத்தம் இல்லை. நற்பலனும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, இருவரும்  ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் சரி, ஒரே ராசியாக இருந்தாலும் சரி, மணமகன் மற்றும் மணமகள் இருவரையும் இணைப்பதைத் தவிர்ப்பது நல்லது. காரணம் என்னவென்றால், இவர்கள் இருவருக்கும் ஆயுளில் பாதகம் ஏற்படாது. பரஸ்பரம் அன்பு அதிகமாகவே இருக்கும். ஆனால், மற்ற மற்ற சௌகரியங்கள் குறையுடன் இருப்பதைக் காணலாம். 
ஒரே ராசியாகவோ ஒரே நட்சத்திரமாகவோ உள்ள தம்பதிக்கு, ஏழரைச் சனி, கண்டகச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி வரும்போது இருவருக்கும் ஒன்றாகவே துன்பம் தரும். இதே போல குரு பகவானும் ஜென்ம குருவாகவும், அஷ்டம குருவாகவும் வரும்போதும் துன்பங்களையே தருவார்.
ஜாதகத்தில் நல்ல தசாபுக்தி நடைபெற்றால் பரவாயில்லை, மாறாக தசா புக்தியும் பாதகமாக வந்தால், அவர்களின் நிலை என்னவாகும் என்பதுதான் கேள்வி. ஆதலால், இருவரும் வேறு வேறு ராசிகளில் பிறந்திருந்தால் அவர்களை இணைத்தோமேயானால் அவர்களில் யாராவது ஒருவருக்கு ஏழரைச் சனி நடந்து  மற்றவருக்கு ஏழரைச்சனி இல்லாமல் இருந்தால் நன்மையைத் தரும்.
அதாவது ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டு இருக்கும்போது மற்றவருக்கு இன்பம் இருக்குமாயின் துன்பம் ஏற்பட்டவருக்கு உறுதுணையாக உடன் இருந்து உதவிபுரிய உதவுகிறது. 
அப்படி இல்லாமல் இருவருக்கும் துன்பம் ஏற்பட்டு இருக்குமாயின் யார் யாருக்கு உதவ முடியும். மீண்டும் சோகத்தையே அந்த தம்பதி தழுவவேண்டியதுதான். 

Monday, 20 May 2019

யோகங்கள் என்றால் என்ன?

யோகங்கள் என்றால் என்ன?
யோகம் இந்துப் பஞ்சாங்கத்தின் ஐந்து கூறுகளுள் ஒன்று. ஏனைய நான்கும் வாரம், திதி, கரணம், நட்சத்திரம் என்பவை. யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும்.
எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.
யோகங்களில் சித்த யோகம், அமிர்த யோகம், மரண யோகம் என மூன்று விதமான யோகங்கள் உள்ளன. திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனும் பஞ்சாங்க அடிப்படையில் யோகம் எனும் பிரிவில் ருதுவாகும் பெண்களுக்கான யோக அமைப்பை கொண்டது.
முறையே இந்த யோகம் 12 ராசிகளான மேஷம் முதல் மீனத்திற்குள் கடக ராசியில் ஆரம்பமாகும்.
1. விஷ்கம்ப நாமயோகம்:- துயரமான வாழ்வு அமையும். இதற்குப் பரிகாரம் சந்தனம், தாம்பூலம், தட்சணை, புஷ்பம் தானம் செய்ய நலம் உண்டாகும்.
2. பிரீதி நாம யோகம்:- மகிழ்ச்சியாக வாழ்வாள். கணவனின் அன்பும், பக்தியும் கொண்டவளாக இருப்பாள். மாமியார், மாமனாரை, உற்றார் உறவினர்களை மதித்து நடப்பாள்.
3. ஆயுஷ்மான் நாம யோகம்:- தீர்க்காயுள், தன சம்பத்து உடையவளாக இருப்பாள். தொழில், வியாபாரம் விருத்தி உண்டாகும். ஆயுள் குறைந்த ஆண் மகன் இவளை திருமணம் புரிய தீர்க்காயுள் கிட்டும்.
4. சவுபாக்கிய நாம யோகம்:- தனம், தான்யம், குழந்தைகள் யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் வாழ்வில் வெற்றிகள் குவியும். விரைவில் திருமணம் நடந்தேறும்.
5. சோபன நாம யோகம்:- சகல சவுபாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள், வீடு, நில புலன்கள், வண்டி, வாகனங்கள் சேர்க்கை நிகழும்.
6. அதிகண்ட நாம யோகம்:- பாவத்திற்கு இருப்பிடமாக இருப்பாள். சுமங்கலிகளுக்கு தாம்பூலம், புஷ்பம், தட்சணை கொடுத்து ஆசி பெற நலம் உண்டாகும். இத்தோஷம் நீங்க சிவ வழிபாடு, சூரிய வழிபாடு நலம் தரும். இளமையில் திருமணம் கூட்டும்.
7. சுகர்ம நாம யோகம்:- சுக ஜீவனம் உடையவள். வாகனம், நில புலன்கள் உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தொழில் விருத்தி உண்டாகும்.
8. திருதி நாம யோகம்:- துணிவு, பராக்கிரமம் உடையவளாகத் திகழ்வாள். பெண்களுக்கு மத்தியில் தலைவி போலக் காணப்படுவாள். நற்புத்திர சந்தானங்களைப் பெற்றெடுப்பாள்.
9. சூல நாம யோகம்:- கண்டம், விபத்து போன்ற அசம்பாவிதங்கள் குடிகொள்ளும். கட்டிளம் காளை இவளைக் கண்டால் மனக்கிலேசம் உண்டாகும். பரிகாரமாக சிவனையும், தட்சிணா மூர்த்தியையும் வணங்கினால் நலம் தரும்.
10. கண்ட நாம யோகம்:- பாப காரியத்தில் துணிந்து ஈடுபடுவாள். சூரிய வழிபாடு, சிவ வழிபாடு நலம் தரும். தோஷம் விலகும்.
11. விருத்தி நாமயோகம்:- நன்மைகள் குவியும். தனம், தான்யம் சேரும். புகழ், கவுரவம், செல்வாக்கு குடும்பத்தில் உயரும். மகிழ்ச்சி பெருகிடும். இளமையில் திருமணம் நடைபெறும்.
12. துருவ நாம யோகம்:- கற்புக்கரசி எனப் பெயர் எடுப்பாள். தனம், தான்யம் சேரும். அரச வாழ்வு உண்டாகும்.
13. வியாகத நாம யோகம்:- அமங்கலையாகக் கூடும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதற்கு பரிகாரமாக வெண்கலப் பாத்திரம் தானம் செய்ய வேண்டும். சூரியன், செவ்வாய் சம்பந்தம் இல்லையென்றால் தோஷம் குறையும். சுக்ர கிரக வழிபாடு தோஷம் போக்கும்.
14. ஹர்ஷண நாம யோகம்:- நல்ல கவுரவமும், அந்தஸ்தும் பெற்று திகழ்வாள். பட்டங்கள், பதவிகள் சேரும்.
15. வஜ்ஜிர நாம யோகம்:- அழகும், குணமும் உடையவளாகத் திகழ்வாள். நின்ற கோல பெருமாள் வழிபாடு பலன்தரும். நற்புத்திர சந்தானங்களை ஈன்றெடுப்பாள்.
16. சித்தி நாம யோகம்:- சகல விதமான போக பாக்கியமும் பெற்று திகழ்வாள். கலை ஆர்வம் காணப்படும்.
17. வியதிபாத நாம யோகம்:- துயரம் கலந்த வாழ்வு அமையும். சூரிய வழிபாடு, சிவ வழிபாடு இவைகளில் நாட்டம் இருக்கும்.
18. வரியான் நாம யோகம்:- தான தர்மம் செய்யக் கூடியவள். பக்தி சிரத்தையுள்ளவள். கணவன் மீது அன்பு செலுத்தக்கூடியவள். இளம் வயதில் திருமணம் நடைபெறும் யோகம் உண்டு.
19. பரிகம் நாம யோகம்:- உற்றார், உறவினர்களுடன் பகைமை பாராட்டக்கூடியவள். தோஷம் நீங்க திங்கள் தோறும் சிவ வழிபாடு செய்துவர நன்மை உண்டாகும்.
20. சிவ நாம யோகம்:- சாஸ்திர ஞானம் உடையவள். உற்றார் உறவினர்களுடன் நட்பு பாராட்டக் கூடியவள். கலை ஆர்வம் இருக்கும்.
21. சித்த நாம யோகம்:- தன-தான்ய சம்பத்து உடையவளாகத் திகழக் கூடியவள்.
22. சாத்திய நாம யோகம்:- சுக போக பாக்கியங்களை அனுபவிப்பாள்.
23. சுப நாம யோகம்:- மன மகிழ்ச்சியுடன் வாழ்வாள்.
24. சுப்பிர நாம யோகம்:- புகழும், கவுரவமும், கீர்த்தியும் பெறுவாள். கல்வி, ஞானம் உண்டு.
25. பிரம்ம நாம யோகம்:- பாப காரியத்தில் ஈடுபாடு கொள்வாள். காய், கனி வர்க்கங்களை தானம் கொடுத்து வர நலம் உண்டாகும்.
26. மகேந்திர நாம யோகம்:- மகாராணி போன்று யோகம் அனுபவிப்பாள். சகல செல்வமும் தேடி வரும்.
27. வைதிருதி நாம யோகம்:- வாக்கிலும், போக்கிலும் கடுமையாக நடந்து கொள்வாள். பெருமாள் வழிபாடு தோஷம் போக்கும். சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம், புஷ்பம், தட்சணை தானம் நலம் தரும்.

மரண யோகம், சித்த யோகம் என்றால் என்ன?



குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் சேர்ந்து அந்த கிழமையும் வந்தால் அது மரண யோகம், அதுபோலவே குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் வந்தால் சித்த யோகம். எல்லாமே ஒரு கணக்குத்தான்.
ஞாயிற்றுக்கிழமை உத்திரட்டாதி அமாவாசை திதி என இன்று மூன்றும் சேர்ந்தால் அன்று அமிர்தயோகம். 

அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வேறு ஒரு திதி மற்றும் நட்சத்திரம் அன்று வேறு யோகம் வரும்.

ஒரு சில யோக நாட்களில் சுப காரியங்கள் செய்யலாம். மரண யோகம் போன்ற நாட்களில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.
மரண யோகம் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?

மரண யோகம் என்பது மரணத்தைக் குறிப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அன்றைய தினம் செய்யும் எந்த காரியமும் விருத்தி அடையாது. அதனால் தான் அன்றைய தினம் சுப காரியங்களை தவிர்க்கச் சொல்கிறார்கள்.

சித்த யோகம் என்றால் சித்தியாகுமா?
அப்படி எல்லாம் இல்லை. ஒரு சிலருக்கு மரண யோகமே நன்றாக இருக்கும். அதாவது அவர்களுக்கு ஜாதகமே எதிர்மறையாக இருக்கும். அதனால் அவர்களுக்கு மரண யோகம் நல்ல பலனைக் கொடுக்கும்.

எல்லாருக்கும் பொதுவானது அல்ல பஞ்சாங்கம் அப்படித்தானே?

நிச்சயமாக. பொதுவாக பஞ்சாகத்தைப் பார்க்கக் கூடாது. இன்று சுப முகூர்த்தம் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அவனுக்கு அன்று சந்திராஷ்டமமாக இருக்கும். அவனுக்கு அன்றைய தினம் ஒத்து வராமல் போகக்கூடும்.
எல்லாமே நல்லது, எல்லாமே கெட்டது. அதில் எது யாருக்கு எது நல்லது, எது கெட்டது என்று பிரிக்க வேண்டும் அதுதான் உண்மையான ஜாதகம்.

மரணயோகம் என்றால் என்ன?

மரணயோகம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். மரணம் என்பது இறப்பைக் குறிக்கும், சாவைக் குறிக்கும் சொல். வெள்ளைக்காரன் மொழியில் சொன்னால் Death

யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும்.

இரண்டு சொற்களையும் சேர்த்து மரணயோகம் என்றால் என்ன?

மரணத்தை எப்படி யோகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும் என்கிறீர்களா?

ஜோதிடத்தில் அது உண்டு.

நாட்காட்டிகளில் பாருங்கள். இன்று மரண யோகம் என்று போட்டிருப்பார்கள்.

எப்படிப் போடுகிறார்கள்? அதற்கு அடிப்படை என்ன?

பங்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று.

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

கீழே கொடுத்துள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை
திங்கட்கிழ்மை: அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்க் கிழ்மை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை
வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம்.

மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

செய்தால் என்ன ஆகும்?

ஊற்றிக்கொண்டு விடும்!

அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது. வளர்ச்சி யடையாது.

உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம்  மாட்டிக் கொண்டுவிடும். 

மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது.

சரி, அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.

பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். வங்கி மொழியில் சொன்னால் NPA (non performing asset) ஆகிவிடும்

ஆகவே நற் செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிர்ப்பது நல்லது.

சரி, அன்று என்னதான் செய்யலாம்?

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.