Saturday 29 September 2012

ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்


ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்
தற்போதைய காலகட்டத்தில் மணமகன், மணமகள் ஜாதகத்தில் 10 பொருத்தங்கள் இருக்கிறதா? என்றுதான் பெற்றோர் பார்க்கின்றனர். ஆனால் எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்த்தனர். அது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து 10 பொருத்தம் ஆனது.
தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய 5 பொருத்தங்களையே தற்போதுள்ள ஜோதிடர்கள் பிரதானமாகப் பார்க்கிறார்கள். இதில் 3 பொருத்தங்கள் இருந்தாலும் திருமணம் செய்யலாம் என்று கூறுகின்றனர்.
ஆனால் இந்தப் பொருத்தங்களைவிட இருவரது ஜாதக நிலை, ராசி, லக்னம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். இதில் ராசி, லக்னம் இருவருக்கும் பொருந்துவது மிக மிக முக்கியம். தற்போது இருவருக்கும் நடக்கும் தசா புக்தி என்ன? அடுத்து வரப்போகும் தசா புக்தி எப்படி இருக்கும்? என்பதையும் கணித்து அவர்களுக்கு திருமணம் செய்யலாமா என முடிவு செய்ய வேண்டும்.
உதாரணமாக மணமகனுக்கு ராகு தசை நடந்தால் அவர் கேது தசை நடக்கும் பெண்ணை அவர் திருமணம் செய்யக் கூடாது. அதேபோல் ஏழரைச் சனி நடைபெறும் ஜாதகர், அஷ்டமச் சனி நடக்கும் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது. இவை உடனடிப் பிரிவைக் கொடுக்கக் கூடியவை என்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும்.
ஒரு சில ஜோதிடர்கள் 10 பொருத்தங்களில், 9 பொருத்தம் இருப்பதால் இருவருக்கும் திருமணம் செய்யலாம் எனக் கூறிவிடுகின்றனர். ஆனால் அது பலன் அளிக்காது.
மேலும், மணமகனுக்கு மோசமான தசாபுக்தி, தசை நடைபெறும் காலகட்டத்தில், பெண்ணுக்கு நல்ல தசா புக்தி, தசை நடக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படாது. மாறாக இருவருக்கும் மோசமான நிலை காணப்பட்டால் மனஸ்தாபம், சச்சரவுகள் ஏற்படும்.
இதற்கு அடுத்தப்படியாக குழந்தை ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடம் நன்றாக இருக்கிறதா? குரு சிறப்பாக அமைந்துள்ளாரா? என்பதையும் பார்க்க வேண்டும். இருவருக்கும் புத்திர தோஷம் இருந்தால் குழந்தையின்மைப் பிரச்சனை அல்லது ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே பொருத்தம் பார்க்கும் போதே இதனைத் தவிர்த்து விட வேண்டும்.
மணமக்களின் ஜாதகத்தில் இராசிக் கட்டங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நவாம்சத்தில் உள்ள கிரக நிலைகளையும் கொண்டு பலன் சொல்ல வேண்டும். எனவே, மேற்கூறிய ஆலோசனைகளை பின்பற்றி பொருத்தம் பார்த்தால் அந்தத் திருமணம் ஆயிரம் காலத்து பயிராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

No comments:

Post a Comment