Tuesday 16 October 2012

கண்களைப் பாதுகாக்கும் முருங்கை பூக்கள்

பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.
முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.
முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.
இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
பெண்களுக்கு
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

No comments:

Post a Comment