Thursday, 8 November 2012


புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 45 - செவ்வாய் 6,8,12,3,7,10,9 ல் தரும் பாதகம்


சொல்லப்பா ஆறெட்டு பன்னிரண்டும்
சுகசப்த கேந்திரமும் பாக்கியம் ரெண்டில்
அல்லப்பா அத்தலத்தில் ஆரல்நிற்க
அப்பனே அகம் பொருளும் நிலமும் நஷ்டம்
குள்ளப்பா குடும்பமது சிதறிப்போகும்
கொற்றவனே குருவுக்கு தோஷமுண்டாம்
வல்லப்பா போகருட கடாக்ஷத்தாலே
வளமாகப் புலிப்பாணி வசனித்தேனே.


இன்னுமொன்றும் சொல்லுகிறேன் கேட்பாயாக. இச் செவ்வாய், சேய், பவுமன் என்றும் உரைக்கப்படுபவன். இவன் 6,8,12,3,7,10,9-இல் நிற்க நிலமும் பொருளும் மனையும் சேதமாகும்; குடும்பமானது சிதறிப்போகும் இதனைச் செவ்வாய் [குரு] தோடம் என்றும் கூறுவார்கள் வல்லவராகிய என் சற்குரு போக மாமுனிவரின் கருணையாலே வன்மையுடன் புலிப்பாணி முனிவராகிய நான் கூறினேன். 

இப்பாடலில் செவ்வாய் இலக்கினத்திலிருந்து 6,8,12,3,7,10,9 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 46 - வியாழன் 4,7,10,1,5,9,2,11 ல் தரும் யோகம்


பாரப்பா பரகுரு நாலேழ்பத்து
பகருகின்ற கோணமுடன் தனமும்லாபம்
சீரப்பா சென்மனுக்கு யோகம் செப்பு
செந்திருமால் தேவியுமே பதியில்வாழ்வன்
கூறப்பா குடிநாதன் கண்ணுற்றாலும்
குவலயத்தில் வெகுபேரை ஆதரிப்பன்
ஆரப்பா ஆரெட்டு பன்னிரெண்டு
அறைகின்றேன் அதன்பலனை அன்பால்கேளே


வியாழ பகவான் என விளம்பப்படும் குருபகவான் 4,7,10 மற்றும் 1,5,9 இன்னும் 2,11 ஆகிய இடங்களில் இருந்தால் இச்சாதகனுக்கு யோகம் மிகவும் உண்டென்று கூறுவாயாக! செந்திருமால் தன் தேவியுடன் இவன் மனையில் வாழ்வார்கள். இன்னும் இரண்டாமிடத்ததிபதி இவனைக் காணில் இப்பூமியில் வெகு பேரை ஆதரிப்பான். இனி 6,8,12 ஆகிய இடங்களில் நின்றால் எத்தகைய பலன் விளைவிப்பான் என்பதனையும் கூறுகிறேன். இதனை நீயும் அன்புடனே கேட்பாயாக! 

இப்பாடலில் வியாழன் இலக்கினத்திலிருந்து 4,7,10,1,5,9,2,11 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 47 - வியாழன் 8 ல் தரும் பாதகம்


கேளப்பா யெட்டுக்கு வேசிகள்ளன்
கெடுதியுள்ள மனைவிபகை நோயால் கண்டம்
ஆளப்பா அரசர்பகை பொருளுஞ்சேதம்
அப்பனே அவமானம் கொள்வண்டம்பன்
தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு
தார்வேந்தர் பகையுமுண்டு ரோகமுண்டு
கூறப்பா ஈராறில் எங்கோனாட்சி
குற்றமில்லை சென்மனுக்கு யோகங்கூறே


இனி எட்டாம் இடத்தில் குருபகவான் வீற்றிருப்பின் அவன், வேசி கள்ளனாகவும், தீய மனைவியால் பகைகொண்டவனாகவும், அவளாலும், பகையாலும் கண்டம் அடைபவனாகவும், அரசரது பகை பெற்றவனாகவும், பொருட் சேதம் அடைபவனாகவும், நிறைந்த அவமானம் அடைபவனாகவும், பெரிய டம்பனாகவும் இருப்பன். மேலும் 6ஆம் இடத்தில் குரு நிற்பின் சாதகனுக்கு அதனாலும் தோடம் உண்டு. அரசரது பகைநேரும். நோய் உபாதை ஏற்படும். ஆயினும் பன்னிரண்டாம் இடத்தில் குரு நின்றால் அதுவே அவனது ஆட்சி வீடானதால் அதனால் எந்த ஒரு குற்றமும் சென்மனுக்கு இல்லையென்று நீ ஆய்ந்தறிந்து கூறுவாயாக. 

இப்பாடலில் வியாழன் இலக்கினத்திலிருந்து 8 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 48 - சுக்கிரன் 1,4,7,10,5,9 ல் தரும் யோகம்


கேளப்பா அசுரகுரு கேந்திரகோணம்
கெட்டவர்கள் கண்ணுற்று பார்த்திட்டாலும்
ஆளப்பா அசுரகுரு பலனளிப்பர்
அப்பனே உப்பரிக்கை மேடையுண்டு
வாளப்பா வயிரங்கள் முத்துமாலைகள்
வளமாகப் பொருந்தி நிற்கும் வளவிலேதான்
நீளப்பா நின்றதொரு இராசியாதி
நிலையறிந்து புவியோர்க்கு நிகழ்த்துவாயே


புலிப்பாணி கூறுவதைச் சற்றே கேட்பாயாக! அசுரர்களின் குரு எனப் போற்றி செய்யப்பெறும் சுக்ராச்சாரி சாதகனின் கேந்திர கோணத்தில் நிற்க அவரைத் தீய கோள்கள் பார்ப்பினும் அவர் நற்பலன்களையே தருவார். அச்சாதகனுக்கு உப்பரிகை மேடையும், கனவயிரமும் முத்துமாலை போன்ற அணிமணிகளும் அவன் மனையில் பொருந்தி இன்பம் தருவதாகும். இதனை இலக்கின, இராசி அதிபர்களின் பலமுணர்ந்து ஆய்ந்து கூறுக. 

இப்பாடலில் சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 1,4,7,10,5,9 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 49 - சுக்கிரன் 12,3,6,8 ல் தரும் பாதகம்

பாரப்பா பனிரெண்டு மூன்றாரெட்டில்
பலமுள்ள அசுரகுரு அதனில் தோன்ற
வீரப்பாவிதிகுறைவுவெதர்நோய்வாதம்
விளங்குகின்ற செம்பொன்னும்மனையும் நஷ்டம்
கூறப்பா குழவிக்கு மகோதரமும் பாண்டு
கொற்றவனே குன்மமொடு சயமும்சோகை
சீரப்பா ஈராறில் சுங்கன் ஆட்சி
சிவசிவா சயனசுகம் யோகஞ்சொல்லே.


ஒரு சாதகனுக்கு 12,3,6,8 ஆகிய இடங்களில் அசுர குருவான சுக்ராச்சாரியார் பலமுடன் சஞ்சாரம் செய்வாரானால் அச்சாதகனுக்கு ஆயுள் குறைவதுடன், மர்ம உறுப்புகளில் [பீசத்தில்] நோயுறுதலும்,வாதநோய் ஏற்படுவதும் மிகவும் விளக்கம் பெற்ற செம்பொன் மற்றும் வாழ்மனையும் நஷ்டமாம். மேலும், மகோதரம்,பாண்டு ஆகிய நோய் மட்டுமல்லாமல் குன்மம், சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும். ஆயினும் 12ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் சிவபரம்பொருளின் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் எனக் கூறுவாயாக. 

இப்பாடலில் சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 12,3,6,8 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 50 - சனி 9,6,11,3,10 ல் தரும் யோகம்



கனமுள்ள நவமாறு லாபம் மூன்று
கதிர்மைந்த னதிலிருக்க விதியும் தீர்க்கம்
தனமுண்டுபிதுர் தோஷம் சத்துருபங்கம்
தரணிதனில் பேர்விளங்கும் அரசன்லாபம்
குணமுள்ள கருமத்தி லிருக்கநல்லன்
கொற்றவனே வாகனமும் தொழிலுமுள்ளோன்
பொணம் போலபோகாதே சபையில் கூறு
பூதலத்தில் யென்னூலைப் புகழுவாயே.


பெருமைக்குரிய 9,6,11,3 ஆகிய இடங்களில் சூரிய குமாரனான மந்தன் என்ற சனிபகவான் நிற்க அச்சாதகனுக்கு ஆயுள் தீர்க்கம். நிறை தனமுடையவர். அதே போல் பிதுர் தோஷமும் உடைய அச்சாதகன் சத்துரு பங்கனாகவும் இருப்பான். பூமியில் அவனது புகழ் விளங்கிக் காணும். அரச லாபம் பெறுவான். இனி, சனிபகவான் 10இல் நிற்க அச்சாதகன் நன்மையான பலன்களையே அடைவான். வாகன யோகம் உடையவனாகவும், செய் தொழில் கீர்த்தி உடையவனாகவும் விளங்குவான். இதையெல்லாம் உணராது உணர்ந்தார் உள்ள சபையில் பிணம் போலப் பேசாமல் இராதே. நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டுக் கூறுவாயேல் நீ புவியில் என்னூலைப் போற்றுவாய். 

இப்பாடலில் சனி இலக்கினத்திலிருந்து 9,6,11,3,10 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 51


பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு
பானுமைந்தன் பன்னொன்றி லமைந்தவாறும்
சீரப்பா சிறந்தகுரு சப்தமத்தில்
சீறிவரும் கரும்பாம்பு நாலிலேற
ஆரப்பா ஆரல்யிரு மூன்றதாகும்
அப்பனே அருக்கனுந்தான் மூன்றில்போக
வீரப்பா விலகுமடா தோஷம் தோஷம்
விதியுண்டு சென்மனுக்கு விளம்பக்கேளே


இன்னுமொரு கருத்தையும் உனக்கு விளக்கமாகக் கூறுகிறேன் நன்கு கேட்பாயாக! கதிர் மைந்தனாம் சனி 11இல் அமைந்து சிறப்புமிக்க குருபகவான் சப்தம (7ல்) ஸ்தானத்திலும் இராகு 4 ஆம் இடத்திலும், செவ்வாய் மூன்றிலும், சூரிய மூன்றில் போய் நிற்க (சனி பகவானால்) தோடம் உண்டெனினும் சென்மனுக்கு ஆயுள் உண்டென்று கூறுவதுடன் மேலும் நான் சொல்லும் கருத்துகளையும் கேட்பாயாக!
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 52


சூடப்பா சரராசி செனித்தபேர்க்கு
சுகமில்லை லாபாதி பதியினாலே
ஆடப்பா அகம்பொருளும் நிலமும்சேதம்
அப்பனே அரசரிட தோஷமுண்டாம்
தேடப்பா திரவியமு மளித்தாரானால்
திடமான அரிட்டமடா தேடமாட்டான்
வீடப்பாகோணத்தில் லிருக்கநன்று
விளம்பினேன் புலிப்பாணி வினையைப்பாரே


சரராசியில் பிறந்த ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்திற்கதிபதியான லாபாதிபதியாலே சுகமில்லை. ஏனெனில் அவனது பொசிப்பு காலத்தில் மனையும், பொருளும், நிலமும் சேதமாவதுடன் மன்னராலும் தோடம் ஏற்படும். அவ்வாறன்றி நிறைந்த செல்வத்தை ஒருவேளை அளித்தாலும் கூட நோயுபாதை போன்ற அரிட்டங்களையும் தருவார். ஆனால் அவனால் நிறை தனம் தேட இயலாது. ஆயினும் திரிகோண ஸ்தானத்தில் (1,5,9) இருந்தால் நன்மையான பலன்களையே தருவேன் என்று புலிப்பாணி போகரருளாணையால் கூறினேன்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 53


பாரப்பா திரராசி செனித்தபேர்க்கு
பாங்கான பாக்கியாதி பதியுமாகா
கூறப்பா கோணத்தில் மேவினாலும்
கொற்றவனே பலனளிப்பன் அரசன் லாபம்
வீறப்பா மற்றயெடந் தனிலே நிற்க
வெகுபயமாம் பலனில்லை வினையில் துன்பம்
சீரப்பா போகருட கடாக்ஷத்தாலே
சிறப்பாக புலிப்பாணி செப்பினேனே.


ஸ்திர ராசியில் தோன்றிய ஐன்மனுக்கு நன்மை செய்யும் பாக்கியாதிபதியான 9க்குடையவனும் தீமையே செய்வான். ஆனால் இப்பாக்கியாதிபதி திரிகோணமான (1,5,9 ஆகிய) பாவங்களில் நிற்பின் அரசனால் இலாபம் போன்ற நற்பலன்களை அளிப்பார். மற்ற இடங்களில் நின்றால் வெகுவான பயமே ஏற்படும். நற்பலன்கள் ஏற்படுவதில்லை. செய்கின்ற காரியத்தில் தொழிலில் விக்கினங்கள் உண்டாகும். சிறப்புமிக்க போக மகாமுனிவரான என் குருநாதர் அருளாணையால் புலிப்பாணியாகிய நான் இப்பலனைக் கூறினேன்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 54


செப்புவாய் உபயத்தில் செனித்தபேர்க்கு
சிறந்ததொரு சப்தமனு மாகாதாப்பா
ஒப்புவாய் உலகத்தில் அவதிமெத்த
ஊழ்வினையைத் தடுபாரு முலகிலுண்டோ
தப்புவாய்திடல் நாசம் தனமும் நாசம்
தார்வேந்தர் பகையுமுண்டு தேகதுன்பம்
இப்புவியில் போகருடன் கடாஷத்தாலே
இடமறிந்து திசையறிந்து யியம்புவாயே.


உபயராசியில் ஜனித்த ஜாதகருக்கு சப்தம கேந்திராதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். அதனால் அவனியில் மிகுந்த அவதியுண்டாகும். ஊழ்வினைத் தடுக்கவல்லவர் உலகில் யாரே உளர்? (இல்லையன்றோ) கிடைக்கத் தக்க வருவாய் கிடைக்காமல் போதலும் தொழில் நாசமும், தன நாசமும், அரசர் பகையும் தேகத்தில் நோய் உபாதைகள் ஏற்படுதலும் நேரும். எனினும் கிரக நிலவரத்தை நன்கு ஆராய்ந்தறிந்து என் சற்குருவான போகர் அருளாணையாலே நான் கூறும் கருத்தினை திசாபுக்தி தெரிந்து கூறுவாயாக
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 55


கூறப்பா குருவோடு வெய்யோன் பாம்பு
கொற்றவனே குருமனையில் கூடி நிற்க
சீரப்பா சென்மனுக்கு தோஷமில்லை
செப்புகிறென் கொடிமாலை விழுகாதப்பா
ஆரப்பா அங்கத்தின் மச்சமுண்டு
அப்பனே அரவோடு அனலன்சேர
கூறப்பா கொடிமாலை மச்சமுண்டு
கொற்றவனே குழவிக்குக் கூறுவாயே.


சாதகனுக்குப் பலனுரைக்கும் சோதிடனே! தேவகுருவான பிரகஸ்பதியின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய மனைகளில் அவரோடு அரவும் சூரியனும் சேர்ந்து நிற்க அச்சாதகனுக்கு எந்த ஒரு தோடமும் இல்லை. கொடிமாலை கழுத்தில் சூடிக் (குழந்தை) பிறப்பதில்லை. ஆனால் உடலில் மச்சமுண்டு. ஆனால் குருவின்றி அரவோடு அனல எனப்படும் சூரியன் சேர்ந்தால் கொடி மாலை மச்சம் உண்டாம் என்று கூறுவாயாக.

No comments:

Post a Comment