Monday, 12 November 2012

ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?

ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?
நவம்பர் 12,2012
 
அ-
+
Temple images
கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம்: அதிகாலை 4.30 - 5.30மணி.

இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு துலா மாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல்,எவன் இருக்கிறானோ அவனே நீதிமான். அதனாலேயே நீதிமன்றங்களில், நீதியின் சின்னமாக தராசை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச்சொல்கிறது. பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம்.

நரகாசுரனின் நிஜப்பெயர்: நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

தீபாவளியின் பெருமை: ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு. தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு, தீபாவளியை இப்படிக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன? என்ற சந்தேகம் எழுந்தது. உடனே அவர், சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார். முனிவரே, புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமா தேவியும்; மஞ்சள் கலந்த குங்குமத்தில் கவுரிதேவியும் நிறைந்திருக்கிறார்கள்.

தீபாவளி நாளில் நீர்நிலைகளில் கங்கையும், புத்தாடை, அணிமணிகளில் மகாவிஷ்ணுவும், தீபாவளி மருந்தில் தன்வந்திரியும் உறைகிறார்கள். இனிப்புப் பலகாரங்களில் அமிர்தம் நிறைகிறது. மலர்களில் யோகினிகள் வசிக்கிறார்கள். தீபத்தின் சுடரில் பரமாத்மாவும், பட்டாசுகளின் தீப்பொறியில் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள். எனவேதான் தீபாவளித் திருநாளில் எல்லா தெய்வங்களின் அருளையும் பெறும் விதமாக, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, மலர்களால் இறைவனை அலங்கரித்து, தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட்டு, பலகாரங்களை நிவேதனம் செய்து உண்டு, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். தீபாவளி கொண்டாட இயலாதபடி வறுமையில் உள்ளவருக்கு, அதனைக் கொண்டாட உதவுவது, கோடானகோடி தான பலன்களுக்கு ஈடானது..! என்று தீபாவளிப் பண்டிகையின் பெருமையினை எடுத்துரைத்தார் சனாதன முனிவர்.

No comments:

Post a Comment