Thursday, 29 November 2012

மேஷம்,மீனம்,ரிஷபம்,கன்னி

மேஷம்,
02.12.2012  முதல் 20.06.2014  வரை
அசுவதி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
60/100
சுற்றும் கேது வருவதனால் சுப விரயங்கள் உருவாகும்!  
எந்த ஒரு காரியத்திற்கும் ஆலோசனை கூறுவதில் வல்லவர்களாக விளங்கும் மேஷ ராசி நேயர்களே!
நவக்கிரகங்களில் மிகுந்த பலம் பெற்ற கிரகமாக விளங்குவதுதான் உங்கள் ராசி நாதனான செவ்வாய். எனவே தைரியம் உங்கள் உடன்பிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை உங்கள் உயிர்மூச்சாக இருக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் வரை உங்களுக்குத் தூக்கமே வராது.
பிரயாணங்களில் அதிகம் பிரியம் வைப்பவர்கள் நீங்கள். உழைப்பின் மேல் நீங்கள் அதிக அக்கறை செலுத்துவதால்தான் இழப்புகளைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.
அவசரமும், படபடப்பும் உங்களை அண்டியிருக்கும் பொழுது ஆதரவுக் கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை குறையும். எனவே நிதானத்துடன் செயலாற்ற நீங்கள் கற்றுக்கொண்டால் நிலையான எதிர்கால வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக்கொள்ள இயலும். உங்களுக்கு அஷ்டமாதிபதியாகவும் செவ்வாயின் வீடு அமைவதால், தனக்குத்தானே எதிரியாகும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு உண்டு.
எனவே முன்கோபத்தை விட்டுவிட்டு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் விதத்தில் அன்பாகப் பேசிக் காரியம் சாதிக்கக் கற்றுக்கொண்டால் அகில உலகத்திலும் உங்களுக்கு இணை யாருமில்லை. உங்களுக்கு இந்த ராகு–கேதுப் பெயர்ச்சி எப்படியெல்லாம் மாற்றத்தைக் கொடுக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
வந்த கேதுவிற்கு வழிபாடு தேவை!
சப்தம ராகுவிற்கு சுவாமி துணை தேவை!
இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், ரிஷப ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான் வெளிப் பயணத்தில் 2.12.2012 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிவகுக்கப் போகிறார்கள். தேடி வந்த கேதுவைத் திருப்திப்படுத்த வந்த அன்றே வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். இல்லையேல் வந்த முப்பது நாட்களுக்குள் உங்களுக்கு அனுகூலம் தரும் நட்சத்திரம் மற்றும் நாள் பார்த்து, யோகபலம் பெற்ற நேரத்தில் சர்ப்ப சாந்தி வழிபாடுகளை உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
ஜென்ம கேது சிறப்பான பலன்களை வழங்குமா? ஏழாமிடத்து ராகு இனிய பலன்களை கொடுக்குமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மேஷ கேது உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் என்பதை நீங்கள் உங்கள் அனுபவத்தில்தான் உணர்ந்து கொள்வீர்கள். ஏனென்றால் கேதுவிற்குரிய நட்சத்திரமான ‘‘அசுவதி’’ உங்கள் ராசியில்தானே இருக்கிறது. எனவே தன் பாதத்தில் அது சஞ்சரிக்கும் பொழுது ‘‘பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும்’’ இன்னும் பெருக வழிவகுக்கும்.
கேது ஜென்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடல் நலம் சீராக இருக்குமா? என்று நீங்கள் நினைக்கலாம். பாம்புக் கிரகங்கள் ராசியில் சேரும் பொழுது, வீம்பு செய்பவர்களை விட்டு விலக வேண்டும். வெற்றிக்கு வழிகாட்டும் நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படுகின்ற பொழுதே ஆலோசனைகளை மருத்துவரிடம் பெற வேண்டும்.
‘‘ஞான காரகன்’’ எனப்படும் கேதுவைத் திருப்திப்படுத்த அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு அனுதினமும் செல்ல இயலாவிட்டாலும்கூட வாரம் ஒருமுறை சென்று வழிபடலாம். நவக்கிரகத்தில் உள்ள கேதுவை வழிபடலாம். கேதுவிற்குரிய தெய்வமாக வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும் வழிபாடு செய்யலாம்.
ஜென்ம கேதுவின் ஆதிக்கம் வரும்பொழுது, ஞானம் உங்களைத் தேடி வரும். அஞ்ஞானம் உங்களை விட்டு அகன்று ஓடும். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று கற்றுக்கொள்வீர்கள். நட்பிலும் சரி, உறவிலும் சரி பாசம் காட்டுபவர் யார், வேஷம் போடுபவர் யார் என்பதை இனம் கண்டு கொள்வீர்கள்.
இருப்பினும், நேசம் காட்டுபவர்கள்கூட இந்தக் கேதுவின் ஆதிக்கத்தால், ஒருசில சமயங்களில் பகையாக மாறலாம். பாதியில் சில பணிகள் நிற்கலாம். மோதிவந்த பிரச்சினை முற்றுப் பெறாமல் போகலாம். எனவே வாதிடுபவர்களைக் கண்டால் விலகிச் செல்லலாம். வம்பு செய்பவர்களைக் கண்டால் நெம்பு கோலாக மாறாமல் நீங்கள் விலகிச் செல்லுங்கள். பயணங்கள் அதிகரிக்கும். எனவே இந்த நேரத்தில் வாகன மாற்றம், வசிக்கும் இடத்தில் மாற்றம், வளர்ச்சி தரும் விதத்தில் அமையலாம்.  
வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகிறது என்று கவலைப்பட வேண்டாம். தர்ம காரியங்கள் செய்யும் அளவிற்குத் தனவரவைக் கொடுப்பவனும் கேதுதான். பெருமையோடு செலவழித்து வந்த நீங்கள் பேச்சிலும், செயலிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வைப்பவனும் கேதுதான்.
அந்தக் கேது உங்கள் சுயஜாதகத்தில் ஒரு இடத்தில் இருக்கலாம். உங்கள் மனைவி, மக்களுக்குக்கென்று உள்ள சுய ஜாதகத்தில் ஒரு இடத்தில் இருக்கலாம். அதில் உள்ள கேது மற்றும் ராகு எந்த நட்சத்திரக்காலில் இணைந்திருக்கிறார். எந்தெந்த கிரகங்கள் எல்லாம் அதைப் பார்க்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப அவர் நல்ல பலனை வாரி வழங்க உள்ளபடியே செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? எந்த ஸ்தலத்திற்கு சென்று வந்தால் வந்த துயரங்கள் மறுநிமிடமே விலகி ஓடும் என்பதையெல்லாம் நீங்கள் அறிந்து கொண்டு செயல்பட்டால் இந்த நேரம் இனிய நேரமாக அமையும்.
ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு இனிய பலன்களை ஏற்படுத்துமா?
ஜென்மத்தில் கேது சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் ஏழாமிடத்தில் தான் ராகு சஞ்சரிப்பார். ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம் என்றும், குடும்ப ஸ்தானம் என்றும் சொல்லப்படும் இடமாகும். துலாமில் சஞ்சரிக்கும் ராகு தொல்லைகளைக் கொடுக்குமா, இல்லை நல்ல பலன்களை வாரி வழங்குமா? என்ற சிந்தனை உங்களுக்கு வந்து கொண்டேயிருக்கும். அது சனியோடு இணைவதால் சராசரி மனிதனைக்கூட சக்கரவர்த்தியாக்கிவிடும் யோகம் உண்டு. பதவி உயர்வும், பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பும் உருவாகும்.
உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனியோடு அவர் இணைகின்றார். இடையில் 2013ம் ஆண்டு மே மாதம் குருவாலும் பார்க்கப்படப் போகிறார். எனவே கல்யாணக் கனவுகளை நனவாக்கி வைக்கும். களத்திர ஒற்றுமைக்கும் வித்திட வழிவகுக்கும். பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் ஆற்றல் சனிக்கு உண்டு. சனி உச்சம் பெறும் பொழுது அது நடைபெறும். அதுவும் சப்தம ஸ்தானத்தில் உச்சம் பெற்றால் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் கிட்டும்.
அந்த அமைப்பு உங்களுக்கு இப்பொழுது இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மன நிலையைப் புரிந்து கொண்டு நடப்பர். கடுமையாக முயற்சித்த காரியங்கள் இனி எளிமையாக முடியும். வெளிநாட்டுப் போக்குவரத்தும் விரும்பும் விதத்தில் அமையும். வீடு கட்டவும் முடியவில்லை, வாங்கவும் முடியவில்லையே... வாழ்க்கை முழுவதும் வாடகை வீடுதானா என்று நினைப்பவர்களுக்கெல்லாம் வழிகாட்டப் போகிறது இந்த சப்தம ராகு.
இடத்தை வாங்குவீர்கள். மனையைக் கட்டுவீர்கள். இருக்கும் பணத்தோடு பற்றாக்குறை ஏற்படுமானால் பண உதவி செய்ய பக்கத்தில் இருப்பவர்களே முன்வருவார்கள். பொதுவாக விரயங்கள் அதிகரிக்க வைக்கும் இந்த ராகு கேது பெயர்ச்சி, விழிப்புணர்ச்சி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு நற்பலன் களைக் கொடுக்கும்.
பாதசாரப்படி கேது தரும் பலன்கள்
மேஷ ராசிக்குள் அடியெடுத்து வைத்த கேது, சூரியனின் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் மாறும். உடன் பிறப்புக்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
சுக்ரன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, மூன்றாம் நபரால் பிரச்சினைகள் உருவாகலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. வாகன மாற்றம் உருவாகும். பழைய வாகனத்தால் பழுதுச் செலவுகள் உண்டு. நாடு மாற்றச் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.
கேது தன் சொந்தக்காலில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்க முன்வருவீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
பாத சாரப்படி ராகு தரும் பலன்கள்!
துலாம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு குரு காலில் சஞ்சரிக்கும் பொழுது திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். தெய்வீக காரியங்களுக்கும் செலவிட்டு மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஊர்மாற்றம், இலாகா மாற்றம் ஏற்படும். உடன் பிறப்புகள் வழியில் ஏற்பட்ட வழக்குகள் தீரும்.
ராகு சுயசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரண சேர்க்கைகளும் அதிகரிக்கும். இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு உருவாவதற்கு வழிபிறக்கும்.
ராகு செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பணச் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம், குழந்தைப்பேறு போன்றவற்றில் இருந்த தடை அகலும். கல்வி முன்னேற்றம், புதிய உத்தியோகம் உருவாகும். வருமானம் இரு மடங்காகும் சூழ்நிலைகள் ஏற்படலாம். சகோதர ஒற்றுமைக்குறைவு ஏற்படாமல் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
மீனம்,
02.12.2012 முதல் 20.06.2014  வரை
பூரட்டாதி 4ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)
40/100
அஷ்டமத்தில் வரும் ராகு!  ஆலயம் சென்றால் பலனுண்டு!
எவரிடமும் எளிதாக நெருங்கிப் பழகும் இயல்பைப் பெற்ற மீன ராசி நேயர்களே!
நவக்கிரகங்களில் ‘சுப கிரகம்’ என்று போற்றப்படும் ‘குரு’ உங்கள் ராசிநாதனாக விளங்குகிறார். எனவே சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களையும் வசப்படுத்திக் கொள்வதில் வல்லவர்களாக விளங்குவீர்கள்.
முயற்சி ஒன்றையே முழு ஆயுதமாகக் கொண்டு முன்னுக்கு வருபவர்கள் நீங்கள்தான். நாகரீகப் பொருட்களின் மீது மோகம் அதிகம் கொண்டவர்கள். நண்பர்கள் கூட்டத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
எந்தவொரு செயலுக்கும் காரணம் உண்டு என்று சொல்லும் நீங்கள் அரசியல்வாதிகளின் நட்பை அதிகம் பெற்றிருப்பீர்கள். வாகனங்களை அடிக்கடி மாற்றம் செய்வீர்கள். உறுதியான மனமே உங்கள் மூலதனமாக இருப்பதால் இறுதியாக நீங்கள் எடுக்கும் முடிவே எல்லோரும் ஒத்துக்கொள்வதாக இருக்கும்.
ராசியில் கடைசியாக இருந்தாலும் பண வளர்ச்சியில் முதல் ராசியாகக் காட்சியளிப்பீர்கள். ஆனால் பண பலத்தால் சாதிக்க முடியாததை பக்கபலமாக இருக்கும் நண்பர்களால் சாதிப்பீர்கள்.  இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி என்னென்ன மாற்றங்களையும், எப்படிப்பட்ட ஏற்றங்களையும் வழங்கும் என்பதைப்பற்றி பார்ப்போம்.
அலைச்சலால் ஆதாயம் தரும்  அஷ்டமத்து ராகு!
ஆலய வழிபாட்டால் பலன் கொடுக்கும் இரண்டாமிடத்து கேது!
இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், ரிஷப ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான் வெளி பயணத்தில் பின்னோக்கிச் சென்று பெரிய மாற்றங்களைக் கொடுக்கப் போகிறார்கள். அஷ்டமத்தில் ராகு அடியெடுத்து வைப்பது அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். அதே நேரத்தில் அஷ்டமத்தில் சனியுமல்லவா சஞ்சரிக்கிறது.
அதுவும் சாதாரண சனியல்ல. உச்சம் பெற்ற சனி என்பதால் விடிந்தால் விரயம் காத்திருக்கிறது என்று சொல்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறும் சூழ்நிலை சிலருக்கு உருவாகும்.
ஆனாலும், ஒரு சில காரியங்கள் ஒரு முறைக்கு இரு முறை செய்யும் சூழ்நிலை உருவாகலாம். நினைத்த நேரத்தில் நினைத்தபடி செயல்பட முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடன்பிறப்புகளின் வழியிலும், உற்றார், உறவினர் வழியிலும் ஒரு சாரார் பாசமாக இருப்பர்.
எதைச் செய்தாலும், இறை வழிபாட்டை மேற்கொண்டு அதன்பிறகு காரியத்தை தொடங்கினால்தான் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும். சம்பளம் போதுமானதாக இல்லையே என்று ஒரு சாரார் கவலைப்படுவர். சம்சாரம் ஒத்துவரவில்லையே என்று ஒரு சாரார் கவலைப்படுவர். குழந்தைகளின் குணம் சரியில்லாமல் போகிறதே என்று ஒரு சிலர் கவலைப்படுவர். ஆரோக்கிய பாதிப்பாலும் கவலைப்பட நேரிடலாம்.
கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல் வந்து விட்டதே என்று ஒரு சிலர் கவலைப்படுவர். கூட்டாளிகள் விலகி விட்டார்களே என்று ஒரு சிலர் வருத்தப்படுவர். இப்படி ஏதேனும் ஒரு வருத்தத்தை அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் ராகு வரவழைத்துக் கொடுக்கலாம். இருந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. விபரீத ராஜயோகத்தை செயல்படுத்தும் சனியோடு அது இணைந்திருப்பதால் திட்டமிடாது செய்கின்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
திடீர், திடீரென தன லாபம் வந்து சேரும். தெய்வப்பற்று மிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் தீங்குகள் விலகிச் செல்லும். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தக்க துணையாக வைத்துக் கொள்ளுங்கள். சாதுர்யமான பேச்சால் சண்டை சச்சரவை தீர்த்துக் கொள்ளுங்கள், அன்பை விதையுங்கள். ஆனந்த பயிரை அறுவடை செய்யுங்கள்.
பண்பு மிக்கவர்கள் என்று போற்றப்படும் நீங்கள், பகல் இரவாக பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காத நேரமாக இது இருந்தாலும், உழைப்பை மூலதனமாக்கி உயர்வை காணுங்கள். சுய ஜாதகத்தில் திசா புத்தி பலமிழந்தவர்கள் வீடு மாற்றம், நாடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம், இலாகா மாற்றம் என்று ஏதேனும் ஒரு மாற்றத்தை காண நேரிடும்.
எனவே வரும் மாற்றம் நல்ல மாற்றமாக வரவும், வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளவும் உங்கள் சுய ஜாதகத்தை ஒரு முறை அலசி ஆராய்ந்து பாருங்கள். அதில் ராகு, கேதுக்கள் இருக்குமிடம், பார்க்கும் கிரகம், பாத சார பலமறிந்து எந்த ஸ்தலத்திற்கு சென்று பரிகாரங்கள் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்பதை அறிந்து, அந்த ஸ்தலத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால் உங்கள் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். சிகரத்தைத் தொடும் அளவிற்கு வாழ்க்கைத்தரம் உயரும்.
என்ன செய்யும் இந்த இரண்டாமிடத்து கேது!
இதுவரை 3 ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது இப்பொழுது 2 ஆம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். வாக்கு, தனம், குடும்பம் என்று வர்ணிக்கப்படும் 2ம் இடத்தில் கேது சஞ்சரிக்கும்போது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம்தான்.
எனவே யாருக்கும் வாக்குக் கொடுக்கும் முன் ஒரு கணம் யோசித்துக் கொடுப்பது நல்லது. குடும்பத்திலும் முன்கோபத்தை தவிர்த்து முதியவர்கள் முதல் இளையவர்கள்வரை அன்பு செலுத்துவதன் மூலமே ஆதாயம் காண இயலும். சில பிரச்சினைகளைக் கண்டும், காணாமலும் இருப்பதே நல்லது. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே அன்னியோன்ய உறவு அதிகரிக்கும்.
வாங்கல் கொடுக்கல்களிலும் சில சமயங்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் உரு  வாகலாம். பெருந்தொகை வாங்கும்போதும், கொடுக்கும்போதும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதே நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம். எனவே மனக்குழப்பம் கூடும்.
வரவைவிட செலவு இருமடங் காகும். இந்த நேரத்தில் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதே நல்லது. வீடு கட்டும் பணியை தொடரலாம். கட்டிய வீட்டை பழுதுபார்க்கும் அமைப்பு சிலருக்கு கிடைக்கும்.
வாகனப்பழுதுச் செலவுகள் அதிகரிக்கும். எனவே பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க அனுசரிக்கும் குணம்தான் தேவை. வேலைப்பளு கூடும். சொந்த வேலை எதையும் பார்க்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.
பெண் குழந்தைகளின் பூப்புனித நீராட்டு விழா, பெற்றெடுத்த குழந்தைகளின் திருமண வைபவம், பெற்றோர்களின் மணிவிழா நிகழ்ச்சி என்று ஏதாவது ஒரு சுப காரியம் வீட்டில் நடக்க வாய்ப்பு உருவாகும். அங்ஙனம் சுப விரயம் செய்ய முற்பட்டால் வீண் விரயங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலும்.
வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முற்படலாம். தங்கம், வெள்ளி, நூதன கருவிகள் வாங்கி வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வருமானம் எவ்வளவுதான் வந்தாலும் செலவு கூடும். யாருடன் பேசினாலும் சுருக்கென்று பேசாமல் சுகமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வதே நல்லது.
பாத சார அடிப்படையில் பலன் தரும் ராகு!
துலாம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு முதலில் குரு காலில் சஞ்சரிக்கப் போகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகவே இருக்கும். எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். தொழில், உத்தியோகத்தில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்பார்த்த மாற்றம் இனிய மாற்றமாக அமையும்.
ராகு தன் சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, எதிலும் மிகுந்த விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்பட்டு அகலும். மாற்று மருத்துவமும் இக்காலத்தில் குணமடைய வைக்கும். வீட்டு பிரச்சினை முதல் நாட்டு பிரச்சினை வரை அலைமோதும் இந்த நேரத்தில் பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பழிகள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. பயணங்களை மாற்றியமைப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிப் போகலாம்.
ராகு செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, செல்வநிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
பாத சார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!
கேது மேஷ ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது முதலில் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இக்காலத்தில் எதிரிகளின் பலம் கூடும். எனவே வீண் விவகாரங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீ.ஆர்.எஸ். பெற்றுக்கொண்டு சுய தொழில் தொடங்க முன்வருவர். அரசு வழி கடன் உதவிகளுக்காக காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும்.
கேது சுக்ரன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்காது. இனம்புரியாத கவலை மேலோங்கும். குடும்ப பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வைக்க முன்வருவீர்கள். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு.
கேது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, புகழ் கூடும். பொருளாதார நிலை மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கூட்டு முயற்சிகள் தனியாக மாறும். சுதந்திரமாகச் செயல்பட தொடங்குவீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
ரிஷபம்,
02.12.2012  முதல் 20.06.2014 வரை
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
கேது  விலகுவதால் இனிமேல் கேட்ட உதவிகள் கிடைத்துவிடும்!
70/100
பிறரை மயக்கும் விதத்தில்  பேச்சாற்றலை பெற்ற  ரிஷப ராசி நேயர்களே!
நவக்கிரகங்களில் அள்ளிக்கொடுக்கும் வல்லமை பெற்ற கிரகமாக விளங்கும் சுக்கிரன் உங்கள் ராசிநாதனாக இருக்கிறார். எனவே வாழ்க்கையில் எல்லாவிதமான சுகங்களையும், சந்தோஷங்களையும் அனுபவிப்பவர்களாகவே விளங்கப்போகிறீர்கள்.
மற்றவர்களுக்கு துன்பம் வரும் பொழுதெல்லாம் மனம் உருகுவீர்கள். இப்படிச்செய்தால் உங்கள் நிலை மாறும் என்று இனிய ஆலோசனைகளை அள்ளி வழங்குவீர்கள். அதே நேரத்தில் களத்திரக்காரகன் சுக்கிரனே உங்களுக்கு 6–ம் இடத்திற்கும் அதிபதியாக வருவதால் கருத்து வேறுபாடு இல்லாத வாழ்க்கைத்துணை அமைய வேண்டுமானால், பொருத்தம் பார்த்தே திருமணம் செய்து கொள்வது நல்லது.   
பாதி வயதிற்கு மேல் பணம் சேர்ப்பதிலும், சம்பாதிப்பதிலுமே உங்கள் குறிக்கோள் இருக்கும். உணவில் இனிப்பு சுவையை அதிகம் நாடும் நீங்கள், மதிப்பும், மரியாதையும் மிக்கவர்களாக விளங்குவீர்கள். வசதி, வாய்ப்போடு பிறந்தவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் ராசியான ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படியெல்லாம் மாற்றத்தை கொடுக்கும் என்பதைப்பற்றி பார்ப்போம்.
அஷ்டலட்சுமி யோகம் தரும் ஆறாமிடத்து ராகு!
ஆன்மிக நாட்டம் உருவாக்கும் பன்னிரண்டாமிடத்து கேது!
இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும் உங்கள் ராசியான ரிஷப ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளி பயணத்தில் பின்னோக்கி சென்று 2.12.2012 முதல் ஆறாமிடத்தில் ராகுவாகவும், 12ம் இடத்தில் கேதுவாகவும் சஞ்சரித்து முன்னேற்றப்பாதையில் நீங்கள் அடியெடுத்து வைக்கவும், முக்கிய திருப்பங்களை நீங்கள் காணவும் வழிவகுக்க போகிறார்கள்.
ஆறாமிடத்து ராகு அஷ்ட லட்சுமி யோகத்தை தரும் என்று சொல்வார்கள். தூரதேசத்தில் இருக்கும் நண்பர்களின் பழக்கத்தால் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை கிடைக்கும். காரசாரமாக பேசியவர்கள் எல்லாம் இனி கனிவோடு பேச முன்வருவர்.  
தாராள மனம் உங்களுக்கு இருப்பதால், நீங்கள் தாட்சண்யத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருப்பீர்கள். அதன் விளைவாக ஏராளமான பொருட்கள் விரயமாகி இருக்கலாம். இழந்த பொருள்களையெல்லாம் மீட்டுவரும் வாய்ப்பு இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு கிடைக்க போகிறது. கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லையே என ஏங்கியவர்களுக்கு புதிய வேலை கிடைத்து புன்னகை பூப்பீர்கள். மதிய நேரத்தில் கூட சாப்பிடமுடியாத அளவிற்கு சம்பாத்தியம் கூடும். அதிக கடன் வாங்கிவிட்டோமே என்ற கவலை குறையும்.  
தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் இனி விலகுவர். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் என்பதால் அந்த மூலதனத்தை கொண்டும் உங்கள் மூளை பலத்தை கொண்டும் லாபம் தரும் தொழில் ஒன்றை செய்ய முன்வருவீர்கள்.
நாட்டுப்பற்று மிக்கவர்களும், நல்லவர்களும் உங்கள் வீட்டிற்கு வந்தே உதவ முன்வருவர். பெயர்ச்சியாகும் நேரத்தில் குரு வக்ர கதியில் இருக்கிறார். பிறகு மே 2012–க்கு மேல் குருவின் பார்வை ராகுவின் மீது பதிய தொடங்குகிறது. தேவ குருவின் பார்வை ராகுவின் மீது பதியும் போது உங்கள் ஆவல்கள் அனைத்தும் கைகூடும்.
பெயர்ச்சியாகும் ராகு தேக நலனில் மட்டும் கொஞ்சம் திடீர், திடீரென தொல்லைகளை கொடுக்கும். நோய்க்கான அறிகுறிகள் தோன்றும்போதே மருத்துவ ஆலோசனைகளை பெறுவது நல்லது. ஆரம்பத்திலேயே எதையும் கவனித்தால் அப்புறம் சிரமப்பட வேண்டாம் அல்லவா? வழக்குகள் இதுவரை எத்தனை நடைபெற்றாலும் அவற்றில் ஒரு திருப்பத்தை தரப்போவது இந்த ராகு கேது பெயர்ச்சி தான்.
இந்த ராகு எதிரிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது எதிரிகளின் பலத்தை குறைய வைக்கும். அதிரடியாக பேசும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் ஆச்சரியப்பட வைக்கும். புதிய திருப்பங்களை நீங்கள் புத்திசாலித்தனத்தினால் பெற்றுக்கொள்வீர்கள். உத்தியோக உயர்வு உண்டாகும். ஊதிய உயர்வும் வந்து சேரும். உயர் அதிகாரிகளின் தொல்லைகளை தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது. மேலதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
அஷ்ட லட்சுமி யோகம் தரும் ராகு உங்கள் சுய ஜாதகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இருக்கலாம். உங்கள் மனைவி, மக்களின் ஜாதகங்களிலும் அந்த பாம்பு கிரகங்கள் இருக்கும் இடம் எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எந்தெந்த கிரகங்கள் அதை பார்க்கின்றன, அது நல்ல பலனை அள்ளி வழங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த கோவிலுக்கு சென்றால் உங்கள் ஆவல்கள் நிறைவேறும் என்பதை நீங்கள் அறிந்துகொண்டு செயல்பட்டால் இந்த நேரம் இனிய நேரமாக அமையும்.
பரபரப்பாக செயல்பட வைக்கும் பனிரெண்டாமிடத்து கேது!
ஆறாமிடத்தில் ராகு சஞ்சரிக்கும் போது அதே நேரத்தில் 12ம் இடத்தில் கேது சஞ்சரிப்பார் அல்லவா? அதன் பலனால் விரயங்கள் அதிகரிக்கும் என்றாலும் வரும் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு அத்தியாவசிய பொருட்களை எல்லாம் வாங்கி குவிக்கப்போகிறீர்கள். இதுவரை சிக்கனமாக இருந்த நீங்கள் இனி செலவு செய்யத்தான் வேண்டும். தக்க விதத்தில் பொருளாதாரம் உங்கள் கைகளில் வந்து சேரும் பொழுது அது தானாகவே விரயமாகி செல்வதற்கு முன்னால் தாங்களாகவே ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பது நல்லது.
மனைவி, மக்களுக்கு வேண்டிய அளவு ஆடை ஆபரணங்களை வாங்கி கொடுக்கலாம். மண்டபங்களை கட்டி வாடகைக்கு விடலாம். பிள்ளைகளின் கல்யாண முயற்சிக்கும் கைகொடுத்து உதவ முன்வருவீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து புதிய வீடாக்கும் பணி வெற்றிபெறும். நாகரீகமான முறையில், நல்ல அமைப்பில் வீடுகட்ட வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
உறவினர்களின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு கொடுத்து உதவி செய்வீர்கள். வெளிநாட்டு பயணம் விரும்பும் விதத்தில் அமையும். மனைவி, மக்கள் வழியில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். அரசியல்துறையில் ஈடுபட்டவர்கள் இழந்த செல்வத்தை, செல்வாக்கை மீண்டும் பெறுவர். மற்றவர்கள் உங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புக்களை முடித்துக்கொடுத்து உங்கள் மதிப்பை உயர்த்திக்கொள்வீர்கள்.
அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அலமாரியில் வைத்து அலங்கரிக்கும் நேரமிது. ஞானகாரகனாக கேது விளங்குவதால், புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி, புகழ்பெற்ற காசி, ராமேசுவரம் ஆகிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். வேலைவாய்ப்பு தேடி காத்திருப்பவர்களுக்கு தற்சமயம் வேலை கிடைக்கும் அமைப்பும் உண்டு. சுயஜாதகத்தை ஒருமுறை புரட்டிப்பார்த்துவிட்டு பிறகு சம்மதிப்பது தான் நல்லது.
பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!
துலாம் ராசியில் சஞ்சரிக்கும் ராகு குரு காலில் சஞ்சரிக்கும் போது இழப்புகளை ஈடு செய்ய வாய்ப்புகள் கிட்டும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மதிப்பு மிக்கவர்கள் உங்களுக்கு மனம் கோணாமல் உதவி செய்வர். துதிபாடும் கூட்டம் விலகும். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
ராகு சுயசாரத்தில் சஞ்சரிக்கும் போது வருமானம் இரு மடங்காகும். வசதி வாய்ப்புகள் பெருகும். எதிரிகள் விலகிச்செல்வர். பங்காளிப்பகை மாறும். பதவி உயர்வில் இருந்த தடை அகலும்.
ராகு செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் போது உங்கள் ராசிக்கு சப்தம விரயாதிபதியாக செவ்வாய் இருப்பதால், குடும்பத்தில் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகள் கூடும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் விழிப்புணர்ச்சி தேவை. வரவு வரும் முன்னதாகவே செலவு காத்திருக்கலாம். நூதன கருவிகளில் சேர்க்கை உண்டு. அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நேரம் இது.
பாதசாரப்படி கேது தரும் பலன்கள்!
மேஷ ராசியில் அடியெடுத்து வைத்தகேது முதலில் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, குடும்ப சுமை கூடும். கொள்கை பிடிப்புடன் செயல்பட இயலாது. ஏதேனும் ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கும். வீடு, இடம், வாங்குவது சம்பந்தமாக செலவிட்டு மகிழ்வீர்கள். தாய்வழியே தனவரவு உண்டு. வாகன மாற்றம் செய்யும் முயற்சியிலோ, வாங்கும் முயற்சியிலோ வெற்றி கிட்டும்.
ராசிநாதன் சுக்ரன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது கூடுதல் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. எதிரிகளின் பலம் கூடும் நேரம் இது. இறை வழிபாடு இக்காலத்தில் உங்களுக்கு அதிகம் தேவை. உத்தியோகம், தொழிலில் திசா, புத்தி பலம் இழந்தவர்களுக்கு மாற்றம் ஏற்படும் நேரம் இது. ஊர்மாற்றம், இடமாற்றம் கூட ஒரு சிலருக்கு வந்து சேரும்.
கேது, கேது சாரத்தில் சஞ்சரிக்கும் போது விரயங்கள் மேலோங்கும். வருமானத்தை காட்டிலும் செலவு கூடும். வண்டி வாகனங்களை மாற்ற நினைப்பீர்கள். உடல் நலத்தாலும் ஒரு தொகையை செலவிட நேரிடலாம். உடனிருப்பவர்களாலும் ஒரு தொகையை செலவிட நேரிடலாம். தாட்சண்யம் தன விரயம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். யோசித்து செயல்படுவதோடு மட்டுமல்லாமல், இறைவனை பூஜித்தும் நாக கவசத்தை வாசித்தும் யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திகளை செய்து கொள்வதன் மூலமே சந்தோஷங்களை வரவழைத்து கொள்ள இயலும்.
கன்னி
02.12.2012  முதல் 20.06.2014  வரை
உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம்,
சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)
50/100
பாம்புக் கிரகம் இரண்டில் வர பண வரவு திரண்டு வரும்!
சந்தோஷம் ஒன்றையே நாளும் சந்திக்க வேண்டும் என்று விரும்பும் கன்னி ராசி நேயர்களே!
நவக்கிரகங்களில் ‘கல்விக் கிரகம்’ என்று போற்றப்படும் புதன் உங்கள் ராசி நாதனாக விளங்குகிறார். எனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குவீர்கள். புதன் வலிமை இழந்திருப்பவர்கள் கல்வியறிவைக் காட்டிலும் அனுபவ அறிவு மிக்கவர்களாக விளங்குவர்.
‘சிக்கனம் வீட்டைக் காக்கும்! சேமிப்பு நாட்டைக் காக்கும்’ என்ற வைர வரிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்களும் நீங்கள் தான். எந்தக் காரியத்தையும் கடைசி வரை இருந்து முடித்துக் கொடுப்பீர்கள். எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.
மாற்றுக் கருத்துக்களை யாரேனும் உங்களிடம் சொன்னால் மறுநிமிடமே அவர்களை விட்டு விலகி வந்து விடுவீர்கள். பாட்டி காலத்துப் பழக்க, வழக்கங்களிலிருந்து எல்லாவற்றையும் மனதில் பதித்து வைத்துக் கொண்டு கேட்டவர்களுக்கு எல்லாம் எடுத்துச் சொல்வீர்கள். கணிதத்தில் தேர்ச்சி பெற்ற நீங்கள் ‘புனிதமானவர்’ என்று மக்களால் போற்றப்படுவீர்கள்.
உங்களுக்கு இந்த ராகுகேது பெயர்ச்சி என்னென்ன மாற்றங்களை எல்லாம் கொடுக்கப் போகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.
வரவை அதிகரிக்க வைக்கும் இரண்டாமிடத்து ராகு!
ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் கொடுக்கும் அஷ்டமத்து கேது!
இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், ரிஷப ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும், தனது வான்வெளி பயணத்தில் 2.12.2012 அன்று பின்னோக்கி சென்று உங்களுக்கு செல்வ வளத்தை பெருக்கப் போகிறார்கள். அதே நேரத்தில் அஷ்டமத்தில் அடியெடுத்து வைத்த கேது அதிக விரயங்களை உங்களுக்கு கொடுக்கப் போகிறார்.
உங்களின் சுயஜாதகத்தின் அடிப்படையிலும் உங்கள் மனைவி, மக்களின் சுய ஜாதகத்தின் அடிப்படையிலும் ராகு கொடுக்கும் பலன்களில் மாறுபாடு இருக்கலாம். யோக ராகுவாக இருந்தால் யோகத்தை அள்ளி அள்ளி வழங்குவார். இல்லையேல் குறுக்கீடு சக்திகள் அதிகம் வரலாம்.
இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவைப் பொறுத்த வரை பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனம் போன போக்கில் எல்லாம் நீங்கள் செலவு செய்யாமல் மக்கள் செல்வங்களுக்காகச் செலவு செய்யுங்கள் அல்லது வாங்கிய கடனைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்து கொள்ளுங்கள். வாங்கிய கடனைத் தீர்ப்பதற்கு இயலாமல் அவதிப்படுகிறோமே என்று நினைத்தவர்களுக்குத் தங்கு தடை இல்லாமல் தானாகவே தனவரவு வந்து சேரும்.
நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும் விதத்திலேயே ராகுவின் சஞ்சாரம் இருக்கிறது. பொதுவாக வாக்கு, தனம், குடும்பம் ஆகிய இடங்களை ராகு சார்ந்திருப்பதால் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உயர்மட்டத்தில் உள்ளவர்களோடு நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்று குதூகலத்தை வழங்கப்போகிறது.
பெண் குழந்தைகளின் சுபச்சடங்குகள் மற்றும் கல்யாண காரியங்களைக் கண்டு மகிழ்வீர்கள். கல்யாண வாய்ப்புகள் கை நழுவிப் போகிறதே என்று கவலைப்பட்டவர்கள் இனி மகிழ்ச்சியடையும் விதத்தில் வரன்கள் வாயில்தேடி வரப்போகின்றன. கையில் பணம் வைத்துக் கொண்டல்லவா கல்யாணம் பேச வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் பையில் பணம் வந்து சேர பல வழிகளிலும் நண்பர்கள் முன்வருவார்கள். எனவே மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு விரைவில் உருவாகலாம்.
தொழில் வளர்ச்சியில் மூலதனம் போடத்தொகையில்லையே என்றவர்களுக்கெல்லாம், கூட்டாளிகள் புதிதாக வந்திணைந்து உறுதுணை புரிவர். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை செலுத்தியவர்களுக்கும் ஆதாயம் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் அகலும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிப் புதிய சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு, அந்நிய தேசத்தில் இருந்து ஆதரவுக்கரம் நீட்டுவோரின் ஆதரவு கிடைக் கும்.
அஷ்டமத்து கேதுவால் ஆதாயம் உண்டா?
அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் கேது அலைச்சலை உருவாக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அந்த கேதுவின் பார்வை தொழில் ஸ்தானத்திலும், புத்திர ஸ்தானத்திலும் பதிவாகிறது. எனவே தொழில் சம்பந்தமாக ஒன்றுக்கு இரண்டு முறை அலைச்சலைக் கொடுக்கும். முடிவில் ஆதாயம் கிட்டும். அதே நேரம் புத்திர ஸ்தானத்தின் மீதும் பதிவதால் பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் உருவாகலாம்.
இந்த நேரத்தில் கேதுவை மட்டும் திருப்திப்படுத்தினால் போதாது. அதன் வால் பகுதியாக இருக்கும் ராகுவையும் திருப்திப்படுத்தியாக வேண்டும். எனவே பூரணமாக சர்ப்ப தோஷ பரிகாரத்தைச் செய்தால் தான் முழுமையான நற்பலன் கிடைக்கும்.
அதிலும் எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் கட்டாயம் சிறப்பு வழிபாடுகள் தேவை. அது மட்டுமல்ல. மற்றவர்களுடன் பழகும் பொழுதும் கொஞ்சம் கவனமும் தேவை. வீட்டில் விவகாரங்கள் ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. போட்டியாளர்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் பொருளாதாரத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பதே உத்தமம்.
மாற்றங்கள் அதிகமாக வந்தாலும், வரும் மாற்றம் பெரும் மாற்றமா என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். ஒவ்வொரு நாளும் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. குடும்பத்து ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. இல்லையேல் விவகாரங்களைச் சந்திக்க நேரிடும். இடமாற்றங்கள் நிகழும் பொழுது சனியின் ஆதிக்கம் இல்லையா என்று பார்த்து முடிவெடுப்பது நல்லது.
சில சொத்துக்கள் விரயமாகலாம். அதே நேரத்தில் சில சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகளும் கை கூடி வரும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 8–க்கு அதிபதியாக செவ்வாய் விளங்குகிறார். எனவே சொத்துப் பிரச்சினைகள் வரும் பொழுதோ அல்லது பத்திரம் பதிவுகள் வரும்பொழுதோ கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பாதசார மாற்றங்களால் பலன் தரும் ராகு!
விருச்சிக ராசியில் அடியெடுத்து வைத்த ராகு இப்போது துலாம் ராசியில் நுழையும் போது முதலில் குரு காலில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக தொழில்துறையில் முன்னேற்றம், தொடர்ந்து இருந்த நோய் விலகும் வாய்ப்பு, சகோதரர்களால் சகாயம் ஏற்படும். நாட்பட்ட கடன்கள் வசூலாகும். நல்லகாரியம் ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ராகு தனது சுய காலில் சஞ்சரிக்கும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கொள்கைப்பிடிப்போடு செயல்படும் சூழ்நிலையும் கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்தபடி லாபமும் கிடைக்கும் நேரமிது.
ராகு செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது குறைபாடுகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுவது நல்லது. நண்பர்களால் ஏமாற்றமும், நல்லகாரியம் நடைபெறுவதற்கு இடையூறுகளும் ஏற்படலாம். எனவே இக்காலத்தில் தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
பாதசாரப்படி கேது தரும் பலன்கள்
மேஷ ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் கேது, முதலில் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கப் போகிறார். விரயாதிபதி சாரம் என்பதால் விரயங்களே அதிகரிக்கும். வரவைக்காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் சிறிது தளர்ச்சி தோன்றும். இறை வழிபாட்டில் நீங்கள் ஈடுபாடு செலுத்தினால் தான் குறைவற்ற வாழ்க்கை வாழ இயலும். பயணங்கள் அதிகரிக்கும். பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே கிடைக்கும்.வண்டி, வாகனங் களின் பழுதுச் செலவுகள் உண்டு.
கேது சுக்ரன் சாரத்தில் சஞ்சரிக்கும் போது பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. நகை வாங்கும் சூழ்நிலையும், ஆடைகள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் அமைப்பும் உருவாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். கல்யாணக்கனவுகள் நனவாகும். தந்தை வழியில் தக்க உதவிகள் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். சிந்தனை அனைத்தும் சம்பாத்தியத்தின் மீது செலுத்த வேண்டிய மாதமாகும்.
கேது சுயசாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, முன்பு சம்பாதித்த சம்பாத்யங்களை எல்லாம் விரயம் செய்யும் சூழ்நிலை உருவாகும். வீட்டுப்பிரச்சினைகள் சிலவற்றைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் கண் திருஷ்டிக்கு ஆளாக நேரிடலாம். எனவே வளர்ச்சிகளை அளவோடு சொல்லி வளமோடு வாழ்வது நல்லது.



No comments:

Post a Comment