Sunday, 18 November 2012

குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா?

குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா? இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறேன் என்றால், எங்கள் ஊரில் அய்யனாருக்கு குதிரை கட்டி பலரும் ஆண் பிள்ளை பெற்றிருக்கிறார்கள். இந்த மாதிரி நடக்கின்றதா? 

்: எத்தனையோ தெய்வங்கள் இருக்கிறது. ஆனால், அதில் குலதெய்வம் என்பது மிக மிக முக்கியம். மதம் இருக்கிறது. மதத்தில் ஜாதி இருக்கிறது. ஜாதியில் பிரிவு இருக்கிறது. சில ஜாதியில் ஆந்தைக் கூட்டம் என்று அதில் ஒரு பிரிவு இருக்கும். அந்த ஜாதியிலேயே 4 பிரிவு இருக்கும். ஒவ்வொரு ஜாதியிலுமே நான்கைந்து பிரிவுகள் உண்டு. ஆனால், இந்த நான்கைந்து பிரிவுகளையுமே ஒற்றுமைப்படுத்துவதுதான் இந்தக் குலதெய்வம். பல ஜாதிகள் இருக்கிறது. அதில் கருப்பசாமியை வணங்குகிறவர்கள் என்று தனியாக இருக்கிறார்கள் இல்லையா, அதைப்போல், இவர்களில் நான்கு, ஐந்து பிரிவு இருக்கிறது. ஆனால் கிடா வெட்டும் போது எல்லோரும் ஒரே பிரிவுதான். 

அடுத்து, குல தேவதா, இஷ்ட குல தேவதா என்று இரண்டு வழிபாடு உண்டு. குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதற்கு நீங்கள் சென்றே ஆகவேண்டும். இஷ்ட குல தேவதை என்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். அய்யப்பன் கோயிலுக்குப் போவது பிடிக்கிறது. எனக்கு என்னவோ அந்தப் பாட்டெல்லாம் பிடிக்கிறது. இப்படி இஷ்டத்திற்குப் போவது. இது அவரவர்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் குலதெய்வம் என்பது கட்டாயம். 

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. 

எவ்வளவோ பேர் எங்கெங்கோ போய் வருகிறார்கள். காசிக்கு ஒருவர் போய்விட்டு வந்தார். அவருடைய கனவில் வந்து, ஏண்டா நான் இங்கே உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறேன். மூன்று வருடமா என்னை வந்துப் பார்க்காமல் எவ்வளவோ செலவு செய்து கொண்டு அங்கெல்லாம் போய்விட்டு வருகிறாயா? என்னை நீ பார்க்காமல் போன பிறகு உனக்கு காசி போனால் பலன் கிடைக்குமா? என்று கனவில் வந்து கேட்டிருக்கிறது. பிறகு ஓடிப் போய் வணங்கினார். 

அய்யனார், முனீஸ்வரர், வேடப்பர், கருப்பு இந்த எல்லை தெய்வங்கள் நேரடியாகவே கனவில் வந்து பேசக்கூடியதெல்லாம் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். வசதி வாய்ப்பு இழந்தவர்களும் பெரிய கோபுரங்கள் உள்ள கோயில் தெய்வங்களை குலதெய்வம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். 

ஒருவர் வந்தார். குழந்தையே இல்லை என்றார். குலதெய்வக் குறைபாடு இருக்கிறது, போயிருக்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், எங்களுக்கு குலதெய்வம் திருப்பதிதான் என்று சொன்னார். கண்டிப்பாக திருப்பதி கிடையாது. மரத்தடியில் இருக்கிற பெண் தெய்வம்தான் உங்களுக்கு குலதெய்வமாக வருகிறது என்று சொன்னேன். அவருடைய பாட்டியும் வந்திருந்தார்கள். அவர் சொன்னார், இவன் பொய் சொல்கிறான் தம்பி, எங்களுக்கு ஆரணிக்கு பக்கத்தில் பச்சையம்மன் என்கிற குலதெய்வம் இருக்கிறது. வேப்ப மரம் இருக்கும். நடுவில் நான்கு கல் இருக்கும். அவ்வளவுதான். ஒருதடவை கூட்டிக் கொண்டு போனேன். இதெல்லாம் கல் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான். இனிமேல் திருப்பதிதான். குழந்தை பிறந்தால் முதல் மொட்டை திருப்பதிக்குதான் என்று அடம் பிடிக்கிறான். இதை குலதெய்வம் என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது என்று சொன்னான். நீங்களாவது கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். 

இப்படியெல்லாம் குலதெய்வத்தில் கூட பேஷன் பார்க்கிறவர்கள், அதைகூட பெருமையாக புகழ்பெற்ற கோயிலாக சொல்லிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவருக்கு 7 வருடமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. அங்கு சென்று அருகில் இருக்கும் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து உங்கள் விளை நிலத்தில் இருக்கக்கூடிய நெல்லை எடுத்து பொங்கல் வைத்து வணங்குங்கள் என்று் கூறினேன்.

இதெல்லாம் அறிவியல் ரீதியாக நமக்கு என்னவென்று தெரியாது. பொங்கல் வைத்த 60வது நாள் அவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. புகழ்பெற்ற டாக்டர்கள் பெயரெல்லாம் சொன்னார். எங்கெங்கேயோ போனேன். டாக்டர் இந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்தார் என்று எனக்குத் தெரியவே தெரியாது என்று அழுதுவிட்டார். குலதெய்வத்திற்கு அவ்வளவு சக்தியா சார், இப்பவும் சொல்கிறேன், நாலு மரம், நாலு கல்லு சார். எப்படி சார் அது என்று கேட்டார். 

அப்படியில்லீங்க, முன்னோர்கள் கூடி கூடி வழிபட்ட அந்த இடத்திற்கென்று ஒரு சக்தி இருக்கிறது. இன்றைக்கு நாம் சொல்லவில்லையா? காந்தி நின்ற இடம், வ.உ.சி. செக்கிழுத்த இடம் என்று எவ்வளவு பெருமையாகச் சொல்கிறோம். அதுபோல நம் முன்னோர்களும் நமக்குத் தலைவர்கள் மாதிரிதானே. அவர்கள் நின்று வழிபட்ட இடம். அவர்கள் பொங்கல் வைத்தது. அதெல்லாம் நாம் மதிக்க வேண்டாமா? அதனால் குலதெய்வத்திற்கு சக்தி உண்டு. குலதெய்வம் என்பது என்ன? தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக்கூடியதுதான் குலதெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் வேண்டித்தான் கூப்பிட வேண்டும். இவர்கள் வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் நம்மிடம் வந்து நமக்கு நல்லது செய்யக்கூடிய தெய்வம். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும்.

8 comments:

  1. அருமையான தகவல். 100க்கு 100 உண்மை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. எங்கள் குலதெய்வம், நூற்றங்கால் அய்யனார் சாஸ்தா. மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பேய்க்குளம் என்ற கிராமத்தில் இருக்கிறது. வருடா வருடம், பங்குனி உத்தரத்திற்கு குலதெய்வம் சென்று வணங்குவோம்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete