Monday, 12 November 2012

உபத்திரம் உண்டாக்கும் களத்திர தோஷம்


இன்றைய சமுதாயத்தில் நிம்மதியான வாழ்க்கை அமைய வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பும், மண வாழ்வில் நிம்மதியும் இருக்க வேண்டும். ஜனன ஜாதக அமைப்பில் சிறப்பாக கிரக அமைப்பு இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், மங்களகரமாகவும் இருக்கும். அதுவே தோஷங்கள் அமைந்து விட்டால் மண வாழ்க்கை நிம்மதியற்றதாக ஆகிவிடும்.

பொதுவாக 7ம் வீடு களத்திர ஸ்தானம் என்றாலும் குடும்ப ஸ்தானமான 2ம் வீடும், சுக ஸ்தானமான 4ம் வீடும் காதல் மற்றும் புத்திர ஸ்தானமான 5ம் வீடும் மாங்கல்ய ஸ்தானமான 8ம் வீடும், கட்டில் சுக ஸ்தானமான 12ம் வீடும் மண வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயும், மண வாழ்விற்கு காரகனாக விளங்குகிறார்கள். ஒவ்வொருவரின் மண வாழ்க்கையும்அவரவர் ஜாதகத்திலுள்ள கிரக அமைப்பிற்கேற்ப உண்டாகிறது. 7ம் வீடும் அதனை பார்க்கும் கிரகங்களும் மணவழ்விற்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 7ல் அமையும் கிரகங்களின் இயல்பிற்கேற்ப மண வாழ்க்கை அமைகிறது. அதனால் ஜென்ம லக்னாதிபதியும், 7ம் அதிபதியும் 7ல் அமையும் கிரகமும் நட்பு கிரகமாக இருப்பதும் மிகவும் உத்தமம். பகை கிரகங்களாக இருந்தால் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உதாரணமாக சிம்ம லக்னம், கும்பலக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி 7ம் அதிபதி பகை கிரகம் என்பதால் அவ்வளவு எளிதில் மண வாழ்வில் ஒற்றுமை உண்டாவதில்லை.

மண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட 7ம் அதிபதியும் 7லிலும் களத்திர காரகனும் சுபர் சேர்க்கை மற்றும் பார்வையுடன் இருப்பது நல்லது. அதுவே 7ம் அதிபதியும் சுக்கிரனும் சனி செவ்வாய் ராகு கேது சூரியன் போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றால் மண வாழ்வில் ஒற்றுமையில்லாத நிலை உண்டாகும். செவ்வாய் கேதுவால் தோஷம் உண்டானால் மற்றவர் மீது (வாழ்க்கை துணை) கோபப்படும் நிலை, முன்கோபம், சண்டை சச்சரவு, விபத்து, போன்றவற்றால் வாழ்வில் பிரிவு உண்டாகும்.

ராகு தோஷம் உண்டானால் கலப்பு திருமணம், வாழ்க்கைத் துணையிடம் நம்பிக்கையில்லாத நிலை, ஏமாற்றுதல், போன்றவை மூலமாக பிரிவு உண்டாகும். சனியால் ஒருவருக்கு களத்திர தோஷம் உண்டானால் வாழ்க்கை தாமதமாக அமைவது மட்டுமின்றி ஒரு பற்று பாசமற்ற நிலை இருக்கும். பொதுவாக 7ல் ஒன்றுக்கு மேற்பட்ட கிரக சேர்க்கை ஏறுபட்டாலோ, 7ம் வீட்டை பாவிகள் பார்த்தாலும் மண வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகும்.

7ம் அதிபதி 6, 8, 12ல் அமைந்து அது ஆட்சி வீடு அல்லது உச்ச வீடாக இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக மனைவிக்கு நோயினை உண்டாக்கும். சுக்கிரன் பாவிகளுக்கிடையே சேர்க்கை பெற்று இருந்தால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும். ஜென்ம லக்னத்தில் 2, 7ல் பாவிகள் அமையப் பெற்றால் மனைவியை இழக்க நேரிடும்.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீடு காதல் திருமணத்தைப் பற்றி குறிக்கும் ஸ்தானமாகும். 9ம் வீடு தந்தை ஸ்தானம் மட்டுமின்றி நமது முன்னோர்களையும், குடும்ப பாரம்பரியத்தையும் குறிக்கும் ஸ்தானமாகும். பொதுவாக செவ்வாய் சுக்கிரன் பாவிகள் சேர்க்கைப் பெற்று 5, 9ல் அமையப் பெற்றாலும் 5, 9ம் பாவங்களில் பலமான பாவ கிரகம் அமையப் பெற்றாலும் கடுமையான களத்திர தோஷம் உண்டாகி கலப்பு திருமணம், காதல் திருமணம் செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.

அதுபோல சந்திரன் பலமிழந்து 7ல் அமையப் பெற்று பாவகிரக சேர்க்கைப் பெற்றால் மண வாழ்வில் தேவையற்ற பிரச்சனை பாதிக்கப்பட்ட நபரை மணமுடிக்கக் கூடிய சூழ்நிலை, உண்டாகும்.

No comments:

Post a Comment