Monday, 10 December 2012

சடாரியில் திருமுடியின் மேல் திருவடி ஏன்?


சடாரியில் திருமுடியின் மேல் திருவடி ஏன்?

அது புனிதமான கங்கைக்கரை. மரவுரி தரித்து தவக்கோலத்தில் வீற்றிருக்கிறான் ஸ்ரீராமன். அருகில் அன்புத் தம்பி லட்சுமணனும், பதியை விட்டுப் பிரிய மனமில்லாமல், மரவுரி தரித்து உடன் வந்த மனைவி ஜானகியும் பணிபுரிந்து நிற்கின்றனர். பாசத்தால் ஸ்ரீராமனைப் பரவசப்படுத்திய கங்கை வேடன் குகனும், அவன் பரிவாரமும் புடைசூழ்ந்து நிற்கின்றனர். துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகக் கருதும் ஸ்ரீராமனின் நிர்மலமான உள்ளத்தைக்கூட அப்போது உலுக்கியது, அவனது காலடியில் விழுந்து கதறி அழும் தம்பி பரதனின் கண்ணீர். தனக்கு இல்லையென்று ஆகிவிட்ட ராஜ்யத்தைதான் துறந்து வந்தான் ஸ்ரீராமன். ஆனால், தனக்கென கிடைத்த ராஜ்யத்தைத் துறந்து வந்திருந்தான் பரதன். ஸ்ரீராமன், கடமையை நிறைவேற்றக் கானகம் வந்திருந்தான். ஆனால் பரதனோ, அண்ணனின் பாதச் சுவட்டைப் பின்பற்றி, அரசைத் துறந்து, மரவுரி தரித்து, கானகம் செல்வதையே கடமையாக ஆக்கிக்கொண்டு வந்திருந்தான். ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவாரோ...? என்ற கம்பன் கவிதைக்கு அத்தாட்சியாக அங்கே நின்று கொண்டிருந்தான் பரதன். தந்தை இறந்த செய்தியைத் தெரிவித்து, தலைவன் இன்றித் தவிக்கும் அயோத்தி மக்களின் கண்ணீரைக் காரணம் காட்டி, நாடு திரும்பி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மக்களைக் காக்க வேண்டுமெனக் கதறி அழுதான் பரதன். மறைந்த தசரதனின் புகழ் வாழ வேண்டுமானால், அவர் தந்த வாக்கு நிறைவேற வேண்டும். அதற்குத் தனது ஆரண்யவாசம் ஒன்றுதான் வழி! என்று பரதனின் வேண்டுகோளை மறுத்துவிட்டான் ஸ்ரீராமன். நாடு திரும்ப ஸ்ரீராமன் விரும்பவில்லை; நாட்டை ஆள பரதன் தயாராக இல்லை.
வனவாசம் மேற்கொண்டு, தந்தை சொல் காத்த தனயன் எனப் பெருமை பெற்றான் ஸ்ரீராமன். அண்ணன் ஸ்ரீராமனுக்கு சேவை செய்ய வனவாசத்தை வலிய ஏற்று வந்து, தியாகி என்ற புகழைப் பெற்றான் லட்சுமணன். தந்தை தசரதனுக்கு ஈமச்சடங்கு செய்யும் பாக்கியம் பெற்றான் சத்ருக்னன். ஆனால், பாவி கைகேயி வயிற்றில் பிறந்த பாவத்தால், எத்தகைய பெருமையும் பெற இயலாத துர்பாக்கியவனாக நின்றான் பரதன். முடிவில், வேறு எந்த வழியும் தெரியாமல், ஸ்ரீராமபிரானின் பாதுகைகளை யாசித்தான் பரதன். அவற்றையே சிம்மாசனத்தில் வைத்து, ஸ்ரீராமனின் பிரதிநிதியாக அரசை நடத்திச் செல்ல, அனுமதி கேட்டு நின்றான் அவன். பரதனின் அன்புக்குக் கட்டுப்பட்டான் ஸ்ரீராமன். கண்ணீர் மல்க, தனது பாதுகைகளை பரதனுக்கு வழங்கினான். அண்ணலின் திருவடிகளை வணங்கி, அவரது பாதுகைகளைச் சிரத்தில் தாங்கி, அயோத்தி வந்தான் பரதன். பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து சத்ருக்னனோடு, நித்திய பூஜை செய்து வழிபட்டான். பாதுகைகளுக்குப் பட்டாபிஷேகம் செய்த பெருமை பரதனுக்குக் கிடைத்தது. என்னதான் ஸ்ரீராமன் சிறப்பானவன் என்றாலும், அரசர்கள் அமரக்கூடிய புனிதமான சிம்மாசனத்தில், பாதத்தில் அணியும் பாதுகைகளை வைக்க அனுமதிக்கலாமா? ஸ்ரீராமனுக்குப் பிரதிநிதியாக வேறு ஏதாவது உயர்ந்த பொருளை பரதன் யாசித்திருக்கக் கூடாதா? தேவர்களுக்கு ஒப்பான சூரிய குல மன்னர்கள் வீற்றிருந்த மகிமைமிக்கதொரு பீடத்தில் வெறும் பாதுகைகளா?
ராமன்தான் முடி துறந்து சென்றானே, அந்தத் திருமுடியையே சிம்மாசனத்தில் வைத்திருந்தால் போதுமே... என்றெல்லாம் சில கேள்விகள் அப்போதும் எழுந்தன; இப்போதும் எழுகின்றன. பரதன் தவறு செய்துவிடவில்லை. ஸ்ரீராமன் துறந்து சென்ற திருமுடியை சிம்மாசனத்தின் மேல் வைத்து, அதன் மீதுதான் அண்ணல் ஸ்ரீராமனின் பாதுகைகளை வைத்திருந்தான். திருமுடிக்கு மேலே அமரும் பாக்கியத்தை அந்தப் பாதுகைகள் பெற்றதற்கு ஒரு காரணமும் இருந்தது. அது-நமக்குத் தெரிந்த புராணத்தில் தெரியாத கதை! ஒருமுறை, தான் கொலு வீற்றிருக்கும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமானார். சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். வழக்கமாகத் தன் பாதுகைகளை துவார பாலகர்கள் அருகே விடும் பரந்தாமன், அன்று மட்டும் அவற்றைக் கழற்றி, ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது. திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிபுங்கவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றார் பரந்தாமன். அப்போது, பாதுகைகளை அங்கேயே விட்டுவிட்டார்.
ஆதிசேஷன் மீது அலங்காரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அது அழகாகத்தான் இருந்தது. ஆனால், பாவம்... அருகிலேயே பாதுகைகளும் இருந்தன. இது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே துவளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்? என்று கேட்டன. இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார் என்றன பாதுகைகள். பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம். கிரீடம் இப்படிச் சொன்னதும் பாதுகைகளுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான் என்று வாதிட்டன பாதுகைகள்.
கிரீடம் விடுவதாக இல்லை. சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், அந்தக் கட்சி பலமுள்ளதாக இருந்தது. பாவம்.... ஆதிசேஷன்! நடு நிலைமை வகித்து, இவற்றின் அறியாமையை எண்ணி, அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தார். தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி நின்றிருந்தன. பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். சாதுக்களை ரட்சித்து, துஷ்டர்களை சம்ஹரித்து, தர்மத்தை நிலைநாட்ட நான் அவ்வப்போது பூமியில் அவதாரம் செய்வேன். அத்தகைய அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது! என்றார் பகவான்.
சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே! ஒன்றிற் சிறியர் ஒன்றிற் பெரியராம் ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியராம் என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்க திருமுடியும, பாதுகையும் சங்கமமான கதையே பாதுகா பட்டாபிஷேகம்! வைணவக் கோயில்களில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். திருமுடி மேல் திருவடி என்பதே சடாரி. அதைத் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம் ஆணவம், அகங்காரம் ஆகியவை அழியவேண்டும் என்பதே தத்துவம்!

No comments:

Post a Comment