Saturday, 29 December 2012

காய்கறிகளை வாங்க சில டிப்ஸ்


முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்கணும்’

உடலானது ஆரோக்கியமாக இருக்க சுவையாக சமைத்து உண்ணும் காய்கறிகளை நன்கு பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு சமைக்க பயன்படும் காய்கறிகளை சிலருக்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று இன்னும் தெரியாது. ஏனோ தானோவென்று வாங்கிய பின், என்னை ஏமாற்றிவிட்டான் என்று புலம்புவதே பலரது நிலைமை. மேலும் முற்றல் இல்லாமல் பிஞ்சாக இருந்தால் சமையலானது சுவையாக இருக்கும்.
எனவே சுவையான சமையல் செய்ய நல்ல காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ் இருக்கிறது. அதில் ஒரு சில முக்கியமான, அன்றாட சமையலில் பயன்படும் காய்கறிகளை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
காய்கறி வாங்க சில டிப்ஸ்…
உருளைக்கிழங்கு: முளைக்கட்டாமல், பச்சை பச்சையாக நரம்பு தெரியாமல் இருக்க வேண்டும். மேலும் தோலை கீறினாலே கையோடு வர வேண்டும்.
பூண்டு:
பூண்டை வாங்கும் போது பல் பல்லாக வெளியே நன்கு தெரியுமாறு இருப்பதை வாங்க வேண்டும்.
பெரிய வெங்காயம்:
பெரிய வெங்காயத்தின் மேல் பகுதியில் இருக்கும் தண்டுப் பகுதி பெரிதாக இல்லாமல் வாங்க வேண்டும்.
பச்சை மிளகாய்:
மிளகாயானது நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும். மேலும் இந்த குண்டு மிளகாயை சேர்க்கும் போது வாசனையும் பிரமாதமாக இருக்கும்.
முருங்கைக்காய்:
‘முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்கணும்’ என்று சொல்வார்கள். இவ்வாறு முறுக்கும் போது நன்கு வளைந்தால், காய் முற்றவில்லை என்று அர்த்தம்.
கத்தரிக்காய்:
கத்தரிகாய் வாங்கும் போது தோலானது மென்மையாக இருக்க வேண்டும். முற்றல் காயாக இருந்தால் தோலானது கடினமானதாக இருக்கும்.
பெங்களூர் தக்காளி:
நன்றாக சிவந்த தக்காளியாக இருப்பதை வாங்க வேண்டும். அதுவும் பெங்களூர் தக்காளி ஒரு வாரம் கூட கெடாமல் இருக்கும்.
இஞ்சி:
தோலை கீறினால், தோலானது ஈஸியாக பெயர்ந்து வர வேண்டும். அப்போது தான் நார்ப்பகுதி குறைவாக இருக்கும்.
காலிஃப்ளவர்:
குருமாவுக்கு சுவையைத் தரும் காலிஃப்ளவரை வாங்கும் போது பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் வாங்க வேண்டும். இதில் தான் காம்புகள் தடிமனாக இருக்காது.
புடலங்காய்:
கெட்டியாக இருக்கும் புடலங்காயை வாங்க வேண்டும். இதில் தான் சதைப்பகுதி அதிகமாகவும், விதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.
பீன்ஸ்:
பீன்ஸில் 2 வகைகள் இருக்கிறது. பிரெஞ்ச் பீன்ஸில் நார் அதிகமாக இருக்கும். புஷ் பீன்ஸில் நார் குறைவாக இருக்கும். இவற்றில் நார் குறைவாக இருப்பதையே அதிகம் விரும்புவர். இந்த பீன்ஸ் வாங்கும் போது தோலானது மென்மையாக இருக்க வேண்டும். அதுவே மிகுந்த சுவையாக இருக்கும்.
பாகற்காய்:
பாகற்காயை வாங்கும் போது உருண்டையாக இருப்பதை வாங்குவதைவிட, தட்டையான, நீளமான காயாக வாங்க வேண்டும். மேற்கூறியவாறு வாங்கினால் காய்களானது நீண்ட நாட்கள் இருப்பதோடு, சமையலும் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment