Saturday, 22 December 2012

ஸ்ரீரங்கம் ஸ்தல புராணம்


ஸ்ரீரங்கம் ஸ்தல புராணம்

ஸ்ரீரங்கம்

காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச் சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும்.
இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.
வரலாறு
சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் “விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது” என வர்ணிக்கப்படுகிறது.
மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி.
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
சங்கம் மறுவிய காலத்தில், பல ஆழ்வார்கள் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.
திருமங்கை ஆழ்வார் 73
தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55
பெரியாழ்வார் 35
குலசேகராழ்வார் 31
திருமழிசையாழ்வார் 14
நம்மாழ்வார் 12
திருப்பாணாழ்வார் 10
ஆண்டாள் 10
பூதத்தாழ்வார் 4
பேயாழ்வார் 2
பொய்கையாழ்வார் 1
9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்க்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கிறன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. ‘கோவில் ஒழுகு’ 11ம் நூறாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.
105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தள்பதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்க்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உத்ஸவ மூர்த்திகள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331-1371) வீழ்ந்த பின், உத்ஸவ மூர்த்திகள் மறுபடியும் ப்ரதிஷ்டை செய்யப் பட்டன. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.
திருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் 807 , அதாவது கிபி 885 இல் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார் எனவும் பாடப் படுகிறது.
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே

1 comment: