Saturday, 22 December 2012

ராசிகளின் குணாதிசயங்கள


சர ராசி
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளும் சரராசிகளெனப்படும். இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள். எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள். சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.
சரராசி 2-ம் வீடாக இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒரே சீராகப் பணவரவு இருக்காது. ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் குறைவாக இருக்கும். வியாபாரம் செய்யத் தகுந்தவர்கள் இவர்கள். வியாபாரத்தில்தானே வரவு ஒரே மாதிரியாக இருக்காது.
3-ம் வீடு சர ராசியாக இருந்தால் அவர்கள் வெளியூர்ப் பயணத்தை விருப்புவர். மூன்றாம் வீடு வெளியூர்ப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? இந்த ராசிக்காரர்கள் தான் நினைத்ததை முடிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்.
ஸ்திர ராசி
மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள். நிரந்தரமான வரவு இவர்களுக்கு உண்டு. ஸ்திர ராசி 6-ம் வீடாக இருந்து ஒருவருக்கு வியாதி வருமேயானால் பரம்பரையான வியாதி வருவதற்கு வழியுண்டு. குணம் ஆகாத வியாதிகள் ஆஸ்த்மா, சர்க்கரை போன்றவியாதிகள் வரக்கூடும். 3-ம் இடம் ஸ்திர ராசியாக இருப்பின் வெளியூர் செல்வதை விரும்ப மாட்டார். ஸ்திர ராசியிலுள்ள தசா,புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலையில் நிரந்தரம் ஆகும். மிகவும் நிதானமாகச் செயல் படும் தன்மை கொண்டவர்கள் இவர்கள்.
உபய ராசி
உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள். சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றை வெறுப்பவர்கள். கஷ்டமான வேலையைக் கண்டு மலைப்பவர்கள். நரம்பு சம்மந்தமான வியாதிகள்
இவர்களைத் தாக்கும். இவர்கள் உறுதியான எண்ணங்கள் இல்லாததால் அடிக்கடி தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருப்பர்கள். இவர்கள் ஏஜென்சித் தொழிலுக்கு ஏற்றவர்கள்.
நம்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs)
எல்லா ஜல ராசிகளும் இந்த வகையைச் சேர்ந்தன. ரிஷபம், துலாம், தனுசு, மகரம் ஆகியவை பாதி நம்மை (Semi Fruitful Signs) பயக்கும் ராசிகள் என்று கூறுவார்கள். ஒருவருக்குக் குழந்தை இல்லை எனக்கொள்ளுங்கள். இவர் ஜாதகத்தில் 5-ம் வீடு Fruitful Sign ஆகி 5-க்குடையவன் மற்றொரு Fruitful Sign-ல் இருப்பாரேயாகில் அவருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு எனக் கொள்ளலாம். இந்த Fruitful Sign ஆனது அதில் உள்ள கிரகங்களையும் நன்மைபயக்கும் கிரகங்கள் ஆக்குகின்றன. அதே போன்று கணவர் மனைவியர் ஏதோ சந்தர்பத்தின் காரணமாகப் பிரிந்து இருக்கின்றனர் எனக் கொள்ளுங்கள். அவர்கள் எப்போது சேருவார்கள் என்ற கேள்வி எழும். அப்போது இந்த ராசியில் உள்ள கிரகங்கள் பலன் சொல்லப் பயன் படும். நீங்கள் ஆரூடத்திப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். அதாவது ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன் படும் ஜாதகம். அதாவது அவர்கள் கேள்வி கேட்க்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுவார்கள். ஒருவர் நம்மிடம் வந்து “நான் தேர்வில் வெற்றி பெருவேனா?”- என்று கேட்கிறார் எனக் கொள்வோம். அவரிடம் ஜாதகம் இல்லை. நாம் அந்த நேரத்திற்கு ஜாதகம் கணித்துப் பார்க்கிறோம். தேர்வு, படிப்பு ஆகியவைகளை 4-ம் வீடு குறிக்கிறது. 4-ம் வீட்டில் சுபகிரகங்கள் இருந்து 4-ம் வீட்டிற்குடையவர் 11-ம் வீட்டில் அதுவும் 11-ம் வீடு Fruitful Sign ஆகவும் இருந்து விட்டால் நாம் எளிதாகச் சொல்லலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவீர்கள் என்று அடித்துச் சொல்லலாம். இவ்வாறு பலவழிகளில் இந்த Fruitful Signs – உதவி புரிகிறது. கடகம், விருச்சிகம், தனுசு ஆகியவை Fruitful signs எனப்படும்.
வறண்ட ரசிகள் (Barren Signs)
Fruitful Signs – களுக்கு எதிர் மறையான ராசிகள் இந்த வறண்ட ராசிகள் அல்லது Barren Signs. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகியவை வறண்ட ராசிகள் எனப்படும். இந்த ராசியிலுள்ள கிரகங்கள் நன்மையான பலன்களைக் கொடுக்காது.
ஊமை ராசிகள் (Mute Signs)
எல்லா ஜல ராசிகளும், அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை Mute Signs அல்லது ஊமை ராசிகள் எனப்படும். இதை சற்று விளக்கமாக எழுதுகின்றோம். ஒருவருக்கு ஜாதகத்தில் 2-ம் வீடு பேச்சு, நாக்கு வன்மையைக் குறிக்கிறது. 2-ம் வீடு ஊமை ராசியாக வந்து அதில் புதன் இருந்து சனியால் பார்க்கப் பட்டால் அவர் திக்கித், திக்கிப் பேசுவார். செவ்வாய் பார்த்தால் மிக வேகமாகப் பேசுவார். குழந்தைகள் நன்றகப் பேசுவார்களா அல்லது பேசமாட்டார்களா என்று 2-ம் வீட்டையும், இந்த ஊமை ராசிகளயும் வைத்துக் கொண்டு சொல்லிவிடலாம். அதற்குத்தான் இந்த ராசிகள் பயன் படுகின்றன.
முரட்டு ராசிகள்
மேஷமும், விருச்சிகமும் முரட்டு ராசிகள் எனப்படும். இவற்றிற்கு அதிபதி செவ்வாய் அல்லவா? செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் அல்லவா ? அதனால் அந்த ராசிகளுக்கு முரட்டு ராசிகள் எனப்படும்.
நான்கு கால் ராசிகள்
மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம் ஆகியவை நான்குகால் ராசிகள் எனப்படும். செம்மரிக் கடா (மேஷம்), காளை (ரிஷபம்), சிங்கம் (சிம்மம்), ஆடு (மகரம்), ஆகியவை 4-காலுள்ள உயிரினங்கள் அல்லவா? அதனால் தான் இவைகள் நாலுகால் ராசிகள் என்றழைக்கப் படுகின்றன. சரி! இந்த ராசிகள் பலன் சொல்ல எப்படிப் பயன் படுகின்றன? எனக்கு மிகவும் வேண்டியவர்” நான் கார் வாங்க ஆசைப் படுகிறேன்? என்னால் வாங்க முடியுமா?” என்று கேட்டார். அவர் ஜாதகத்தை பார்த்தோம். அவருக்கு அப்போது சனிதசை, சூரிய புக்தி நடந்து கொண்டிருந்தது. நம்முடைய கணக்குப்படி அந்த தசா புக்தியில் அவருக்கு வாகன
யோகம் வந்து இருந்தது. அவர் கார் வாங்குவாரா அல்லது மோட்டார் சைக்கிள் வாங்குவாரா என்று எப்படிச் சொல்வது? புக்தி நாதன் சூரியன் அவருக்கு மகரத்தில் இருந்தார். மகரம் நாலுகால் ராசியல்லவா? ஆகவே சூரியன் நாலுகால் ராசியின் பலனைக் கொடுப்பார் என்று நீங்கள் கார் வாங்குவீர்கள் என்று கூறினோம். இப்போது புரிகிறதா ? நாலுகால் ராசியின் உபயோகத்தை. அவரும் நாம் கூறியபடி அப்போது கார் வாங்கினார்.
இரட்டை ராசிகள் (Dual Signs)
மிதுனம், தனுசு, மீனம் ஆகியவை இரட்டை ராசிகள் எனப்படும். இந்த ராசிகளின் உபயோகம் என்ன? ஒருவருக்கு இரண்டு
மனைவிகளா? குழந்தை இரட்டையாகப் பிறக்குமா? இரட்டை வருமானம் ஒருவருக்கு வருமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த ராசியை வைத்துக் கொண்டு பதில் சொல்லலாம். புதனுக்கு இரட்டைக் கிரகம் என்ற பெயர் உண்டு. அவர் ஒருவரின் ஜீவனஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது அதில் இருந்தாலோ அவருக்கு இரட்டை வருமானம் வரும் எனக் கூறலாம். இரட்டை வருமானம் எப்படிக் கிடைக்கும்? ஒருவர் ஓர் அலுவலகத்தில் பணிபுரியலாம். மாலை நேரத்தில் வேறொரு இடத்தில் Part-time வேலை செய்யலாம். இது இரட்டை வருமானம் அல்லவா? சிலர் வேலை பார்த்துக் கொண்டே Insurance Agent ஆக இருப்பார்கள். இதுவும் இரட்டை வருமானம் தான். சிலர் அரசாங்கத்தில் வேலை செய்வார்கள். சம்பளம் கிடைக்கும்.
அதைத்தவிர மேஜைக்கு அடியிலும் வாங்குவார்கள். இதுவும் இரட்டை வருமானம்தான். இந்த மாதிரி மேஜைக்கு அடியில் வாங்குபவர்களுக்கு 10-ம் வீட்டில் புதனுடன் சனியும் சேர்ந்து இருக்கும். அல்லது சனியின் பார்வையாவது இருக்கும். சனியின் தொடர்பு இருந்தால்தான் இந்த மாதிரி மேஜைக்கு அடியில் பணம் வாங்க முடியும். சனி எதையும் ரகசியமாகச் செய்யக் கூடியவர் அல்லவா? 1983-ல் நாம் குடியிருந்த வீட்டின் பக்கத்தில் இருந்த ஒருவர் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்தார். அவர் தான் வீடு கட்ட முயற்சி செய்வதாயும் தன் ஜாதகப்படி வீடு கட்டமுடியுமா எனக் கேட்டார். அவர் ஜாதகத்தில் அவர் கன்னி லக்கினம். 4-ம் வீட்டில் புதன். செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருந்தார். மற்ற கிரகங்கள் ஞாபகத்தில் இல்லை. நாம் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு உங்களுக்கு வீடு கட்ட யோகம் வந்துவிட்டது. “நன்றாகக் கட்டுங்கள்” என்று கூறினோம். அவர் “கடன் வாங்கித்தான் கட்ட வேண்டும். கட்ட முடியுமா?” என்று திரும்பவும் கேட்டார். நாம் “உங்கள் ஜாதகப் படி இரண்டு வீட்டிற்கு யோகம் இருக்கிறது. ஏன் தயங்குகிறீர்கள்?” எனக் கூறினோம். அவர் உடனே “ஒரு வீட்டிற்கே வழி இல்லை; இரண்டு வீடு கட்டுவேன் என்கிறீர்களே” என்று கூறிவிட்டுப் போய்விட்டார். சிலமாதங்களில் நாம் வீடு ஒன்று கட்டிக்
கொண்டு அங்கிருந்து வந்து விட்டோம். பல ஆண்டுகள் உருண்டோடின. அந்தப் பழைய நண்பர் திரும்பவும் என்னைத் தேடிக் கொண்டு வந்தார். “நீங்கள் முன்பு கூறியபடி நான் இப்போது 2-வது வீட்டிற்குப் பணம் கொடுத்து விட்டேன். ஆனால் FLAT இன்னும்  கைக்குவரவில்லை; எப்போது கிடைக்கும் என்று உங்களைக் கேட்க்கத்தான் வந்தேன்” என்று கூறினார். நாம் அவர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று கூறி அனுப்பினோம்.” நாம் எப்படி அவருக்கு இரண்டு வீடு கிடைக்கும் என்று கூறினோம்?” என்று உங்களுக்குக் கூறுகிறோம். அவர் ஜாதகத்தில் 4-ம் வீடு இரட்டை ராசி. அதாவது தனுசு. அந்த வீட்டில் இரட்டைக் கிரகமான புதனும் இருக்கிறார். பூமிகாரகனான செவ்வாயும் 4-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே நாம் அவருக்கு இரண்டு வீடுகள் உண்டு என்றுகூறினோம். அது பலித்து விட்டது. ஆக இரட்டை ராசிகளின் உபயோகம் தெரிகிறதல்லவா?

1 comment:

  1. எனக்கு இந்த ராசிகள் தான் புரியாத புதிராக இருக்கிறது.

    ReplyDelete