Saturday, 22 December 2012

ஸ்ரீகுருவாயூரப்பன் ஸ்தல புராணம்


ஸ்ரீகுருவாயூரப்பன் ஸ்தல புராணம்

ஸ்ரீகுருவாயூரப்பன்

பகவான், குழந்தை கிருஷ்ணனாக அருள் புரியும் திருத்தலம், கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள குருவாயூர். திருச்சூரில் இருந்து பஸ் மற்றும் ரயில் மூலம் குருவாயூர் செல்லலாம். இது ‘தென் துவாரகை’ எனப் போற்றப்படுகிறது.
நாராயண பட்டத்திரி சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாராயணீயம், பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை ஆகிய நூல்கள் ஸ்ரீகுருவாயூரப்பனது மகிமைகளை எடுத்துரைக்கின்றன.
குருவாயூரைச் சுற்றியுள்ள ஊர்களில் எழுத்தச்சன், பட்டத்திரி, லீலாசுகர், பூந்தானம் ஆகிய மகான்களும் கவிஞர்களும் வாழ்ந்திருந்தனர்.
மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி, பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் மகாவிஷ்ணுவாகவும் பூந்தானம், வில்வமங்களம், மானதேவன் குருர் அம்மா ஆகியோர் பாலகிருஷ்ணனா கவும் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டனர்.
நாரத புராணத்தின் ‘குருபாவனபுர மகாத்மியம்’ குருவாயூர் தலத்தின் மகிமைகளை விவரிக்கிறது.
துவாபர யுகத்தில், ‘துவாரகையை ஏழு நாட்களில் கடல் கொள்ளும். அந்த வெள்ளப் பரப்பில் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும்… அதை தேவகுரு பிருகஸ்பதி மூலம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்!’ என்று உத்தவரிடம் அருளினார் ஸ்ரீகிருஷ்ணர்.
குருவும் வாயு பகவானும் அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய இடம் தேடினர். அப்போது கேரளத்தில் தாமரைக் குளக்கரை ஒன்றில் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
அவர் அருளியபடி விஸ்வகர்மா நிர்மாணித்த கோயிலில் அந்த விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தனர். அந்த சிவபெருமான் மம்மியூரில், பார்வதிதேவியுடன் எழுந்தருளியுள்ளார் என்பது ஐதீகம். இவ்வாறு குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் இந்தத் தலம் ‘குருவாயூர்’ ஆனது.
பரிக்ஷித்து மன்னனின் மகன் ஜனமேஜயன். அவன் தன் தந்தையின் மரணத்துக்குக் காரணமான நாக அரசனான தட்சகன் என்ற பாம்பை பழி வாங்கும் பொருட்டு உலகில் உள்ள பாம்புகளைக் கொன்று குவித்தான். அவ்வாறு இறந்த அப்பாவிப் பாம்புகளது சாபத்தால், ஜனமேஜயனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. கொடுமை தாங்காமல் ஜனமேஜயன் தற்கொலை செய்ய முயன்றபோது, அவன் முன் தத்தாத்ரேயர் தோன்றினார். அவரது அருளாசியின்படி ஜனமேஜயன், குருவாயூர் சென்று குருவாயூரப்பனின் திருவடி தொழுது நோய் நீங்கியதுடன் சகல வளங்களும் பெற்றான் என்கின்றன புராணங்கள்.
1766&ல் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் வந்த கோயிலை, பெருந்தொகைக் கொடுத்து மீட்டனர்.
மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான், 1789& ஆம் ஆண்டு மலபார் மீது படையெடுத்தார். அப்போது குருவாயூரப்பன் விக்கிரகத்தைக் காப்பாற்ற எண்ணிய மல்லிகேசரி நம்பூதிரி, கக்காடு ஓதிக்கன் என்பவர்கள் இந்தக் கோயிலின் மூலவரான குருவாயூரப்பனை அருகில் உள்ள கிணற்று நீரில் மறைத்து வைத்தனர். பிறகு உற்சவ மூர்த்தியை அம்பலப்புழா என்ற ஊருக்கு எடுத்துச் சென்றனர். சுமார் 1789&லிருந்து 1792 வரை குருவாயூர் உற்சவரை அங்குள்ள கோயிலில் வைத்து ஆராதித்தனர். இதை நினைவுகூரும் விதமாக இன்றும் அம்பலப்புழா கோயிலில் உள்ள ஸ்ரீகுருவாயூரப்பன் விக்கிரகத்துக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
திப்புசுல்தான் தன் வீரர்களுடன் குருவாயூர் ஆலயத்துக்குள் சென்றபோது, ஒரு குரல் அவரை நிற்கும்படி கட்டளையிட்டதாம். அதற்கு மதிப்பளித்த திப்பு சுல்தான் குருவாயூர் ஆலயத்துக்குக் கொடைகள் பல வழங்கியுள்ளார்.
1970&ஆம் ஆண்டு நவம்பர் 29&ஆம் தேதி குருவாயூர் ஆலயம் தீ விபத்துக்குள்ளானது. தீயை அணைக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனதாம். ஆலயத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதம் அடைந்தாலும், குருவாயூரப்பனின் கர்ப்ப கிரகம், கணபதி, ஐயப்பன் மற்றும் தேவி சந்நிதிகள் போன்ற பகுதிகள் பாதிப்பு அடையாததற்கு ஸ்ரீகுருவாயூரப்பனின் அருளே காரணம்.
காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் குருவாயூர் கோயிலுக்கு திக்விஜயம் செய்து ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்து மகிழ்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநி திருக்கோயிலைப் பார்த்தவாறு அமைந்துள்ளது ஸ்ரீகுருவாயூரப்பன் கோயில்.
குருவாயூர் கோயில்& சதுர வடிவில், மலையாள கட்டட பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கூரைகள் செப்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளன. இதன் கிழக்கு கோபுர வாசலில் இருந்தே குருவாயூரப்பனை பக்தர்கள் தரிசிக்கும்படியும் (சித்திரை விஷ§ தினத்தன்று) காலைக் கதிரவனின் ஒளிக் கற்றைகள் குருவாயூரப்பன் திருவடிகளில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கிழக்கு& மேற்கில் இரு கோபுரங்கள். கிழக்குக் கோபுரம் வழியே நுழைந்தால் வெளிப் பிராகாரம். இங்கு, பொன் முலாம் பூசப்பட்ட சுமார் நூறு அடி (33.5 மீட்டர்) உயரக் கொடி மரமும் இதன் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பங்களும் உள்ளன. இங்குதான் செண்டை மேளங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட யானைகள் காலையில் நாராயணனை வழிபட வரிசையாக நிற்கும். வட கிழக்கே «க்ஷத்திர பாலர்.
கொடிமர மண்டபத் தூண்களின் கீழே அமர்ந்து பக்தர்கள் பாகவதம் அல்லது நாராயணீயம் படிப்பது வழக்கம். ஸ்ரீகுருவாயூர் «க்ஷத்திரத்தில் ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்வது ரொம்ப முக்கியமான ஆராதனை என்று ஸ்ரீகாஞ்சி மகா பெரியவர் சொல்லியிருக்கிறார்.
மூலஸ்தானத்தின் இரு புறமும் சண்டன்& பிரசண்டன், அனந்தானந்தர்கள். கருவறைப் படிக்கட்டுக்குக் கீழே இந்திரனும், மண்டபத்தில் கருடனும், தென்கிழக்கு மூலையில் அக்னியும் உள்ளனர்.
தெற்கில் கணபதி, தட்சிணாமூர்த்தி, எமன், வீரபத்ரர், விக்னேச்வரர், ஐயப்பன், சப்தமாதர்களும் மேற்கில் அனந்தசயனன் மற்றும் வருணனும், வடமேற்கில் வாயு, துர்கை மற்றும் சுப்பிரமணியரும், வடக்கில் சோமன், வைச்ரவணனும் வடகிழக்கில் நிர்மால்யதாரி, ஈசானன், பிரம்மா ஆகியோரும் உள்ளனர். கிணற்றில் வருணன் உள்ளார்.
ருத்ர குளத்தில் இருந்து பகவதி சந்நிதிக்குப் பின்புறம் உள்ள சிறு வழி மூலமாகவும் சந்நிதிக்கு வரலாம். பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் கூத்தம்பலம் உள்ளது. இதன் வடக்கில், தர்ம சாஸ்தா மேற்கு பார்த்தபடி வீற்றிருக்கிறார்.
வடக்குப் பிராகாரம் திரும்பியதும் யானைப் பந்தல் மண்டபம். இதன் மேற்கூரையில் சிறு துவாரம் உள்ளது. இந்த மண்டபத்தில் கிருஷ்ணனாட்டம் நடக்கும். ஒரு முறை கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நாரதரும் ஆதிசங்கரரும் ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது நாரதர், குருவாயூரப்பனை தரிசிக்க விரும்புவதாகச் சொன்னார். ‘விக்கிரக வழிபாடு, இறைவன் நாமத்தை உச்சரிப்பது ஆகியவை தேவையில்லை’ என நினைத்து, வர மறுத்தார் ஆதிசங்கரர். அதனால் அவர் இந்த இடத்தில் மூர்ச்சித்து கீழே விழுந்தார். அவர் கண் விழித்தபோது விஷ்ணு தரிசனம் கிடைத்தது.
அதனால் அங்கு 41 நாள் தங்கி, பூஜை முறைகளை வகுத்து விட்டு, தனது பயணத்தைத் தொடர்ந்தார். அதனால்தான் அந்த துவாரம் உள்ளது. இரவில் அந்த இடத்துக்கு சீவேலி வரும்போது வாத்தியங்கள் இசைப்பதை சற்று நிறுத்தி மீண்டும் இசைப்பர்.
இந்தப் பகுதியில் வில்வமங்கள சுவாமி, பூந்தானம், குருர் அம்மா, குசேலர் ஆகியோரது சிலைகளை வைத்துள்ளனர். இங்குள்ள நமஸ்கார மண்டபத்தில்தான் மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி நாராயணீயத்தை எழுதினாராம். அறத்துக் கெட்டபடி எனப்படும் அந்த இடத்தை இன்றும் புனிதமாகக் கருதுகின்றனர். உட்பிரகாரத்தின் கிழக்குப்புறம் மடப்பள்ளி. தென்மேற்கு மூலையில் கணபதி சந்நிதி.
வெளிப்பிராகாரம் செல்லும் வழியில் வலப்புறம் உள்ள திண்ணையில், ‘நிருத்தம்’ என்ற இடத்தில் வில்வமங்கள சுவாமி நிஷ்டையில் அமர்வது வழக்கம். திருப்புகை தரிசனம் முடிந்ததும் பகவான் அவருக்குக் காட்சி அளிப்பாராம். இந்த இடத்தில் வரவு& செலவு கணக்குகளை வாரியர் குலத்து நபர் படிக்க, பகவான் கேட்பதாக நம்பிக்கை.
கோபுரத்துக்கு வெளியே இருக்கும் சிறு மேடைக்கு ‘கல்யாண மேடை’ என்று பெயர். இங்குதான் திருமணங்கள் நடைபெறும்.
ஆலயத்தின் வடமேற்கு மூலையில் குரு மற்றும் வாயு பகவானுக்கு பலி பீடங்கள் இருக்கின்றன. இவற்றை குரு மற்றும் வாயுவின் அதிஷ்டானங்கள் என்றும் சொல்வர். இங்கு அவர்களுக்கு அன்னம், பூ, தீர்த்தம் ஆகியவை நிவேதிக்கப்படுகிறது.
ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டபோது, அங்குள்ள மரச் சுவர்கள், தூண்கள் ஆகியன சேதமடைந்தன. பிறகு பிரஸ்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி, மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களை கருங்கற்களால் நிர்மாணிக்க தீர்மானித்தனர். அதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர்.
ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களுடன் கூடிய பத்து தூண்கள் தயாராயின. அதில் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தை குறிக்க, ஒரு தூணில் ‘கம்ச வத’ காட்சியை வடித்திருந்தார் சிற்பி.
நாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து ‘‘இங்கு கிருஷ்ணனை, வேணு கோபாலனாக செதுக்கியிருக்கும் தூணை வையுங்கள்!’’ என்றான். ‘‘அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இதுவரை வடிக்க வில்லையே!’’ என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று ஸ்ரீகிருஷ்ணர், வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை. வந்தது ஸ்ரீகுருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார். இந்தத் தூண் ஸ்ரீகுருவாயூரப்பனாலேயே படைக்கப்பட்டதாக ஐதீகம். அதன் பிறகு ‘கம்ச வத’ தூணை உட்பிராகாரத்தில் வைத்திருக்கிறார்கள்.
கோயிலுக்கு நேர் கிழக்கில் சற்றுத் தள்ளி அரச மரம் ஒன்றும் அதன் அடிப்புறம் சிறகு விரித்த நிலையில் கருடன் சிலை ஒன்றும் உள்ளது. இதைச் சுற்றி சிமெண்ட் மேடையும் அதன் மீது கம்பி வேலியும் அதில் இரண்டு இலை போன்ற வடிவங்களும் உள்ளன. ஜெயலலிதா இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்ததும் யானை ஒன்றை இந்தக் கோயிலுக்கு வழங்கினார்.
மஞ்சுளா என்ற வாரியர் குலப் பெண் தினமும் இரவில் குருவாயூரப்பனுக்கு சார்த்த பூமாலை கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் தாமதமானதால் கோயில் நடை மூடப்பட்டு விட்டது.
கலக்கமடைந்தாள் மஞ்சுளா. அப்போது அவளை ஆசுவாசப் படுத் திய பூந்தானம் அடியார், அவள் நின்றிருக்கும் ஆல மரத்தின் அடியையே இறைவனின் திருவடியாக பாவித்து, பூமாலையை அங்கேயே சமர்ப்பிக்கும்படி சொன்னார். மஞ்சுளா அப்படியே செய்தாள்.
மறு நாள் காலையில் மேல்சாந்தி, விக்கிரகத்தின் மீதுள்ள பூமாலைகளை அகற்றும்போது, ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லை. அதைக் கண்ட பூந்தானம், பக்தி பரவசத்துடன், ‘மஞ்சுளாவின் மாலை என்றால் அதுவும் விழட்டும்’ என்றார். உடனே மாலை கீழே விழுந்தது, அதனால், அந்த ஆலமரம் உள்ள இடம் பூஜைக்குரியதானது. அதை ‘மஞ்சுளால் தரை’ என்பர். ஆண்டுதோறும் இங்கிருந்துதான் ‘யானை ஓட்டப் பந்தயம்’ துவங்குகிறது. ஆல மரத்தின் அடியில் பருந்து சிலை ஒன்றையும் தரிசிக்கலாம்.
ஸ்ரீகுருவாயூரப்பன் கிழக்கு நோக்கி அருள்புரிவதால், இங்கு கிழக்கு வாசலே பிரதானம். கிழக்கு வாசல் வழியே மூன்றாம் கோபுரத்தைத் தாண்டிச் சென்றால், யானைப் பந்தல் என்ற பகுதியை அடையலாம். இதன் மேல் பகுதியில் புராண சம்பவங்களை விளக்கும் ஓவியங்களுடன் மகாத்மா காந்தியின் திரு உருவப்படமும் உள்ளது தனிச்சிறப்பு!
கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி அதைத் தொடாமல் இருக்கும் கட்டடங்களை ‘நாலம்பலம்’ என்பர்.
கணபதி கோயிலையட்டிய வட பகுதியில் பகவானுக்கான சந்தனம் அரைக்கப்படுகிறது. இதன் வட பகுதியில் மாலை கட்டுகிறார்கள்.
உட்புறத்தில் உள்ள ‘அறத்து கெட்டுபடி’ என்ற இடத்தில் நாராயணீயம் இயற்றப்பட்டதாம்.
கருவறைக்கு எதிரில் உள்ள மேடை அருகே நின்றவாறு நாராயண பட்டத்திரி, கண்ணனிடம் பேசியவாறே நாராயணீயம் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. இது மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புற மரச் சுவரில் உள்ள சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இங்குள்ள ஆராட்டுக்குளம் எனப்படும் ருத்திர தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. கோயிலின் தென்பக்கம் உள்ள வருண தீர்த்தம் எனப்படும் கிணறு மற்றொரு தீர்த்தமாகும். அபிஷேகத்துக்கான நீர் இங்கிருந்தே எடுக்கப்படுகிறது. குருவும், வாயுவும் வருணனை பூஜித்ததை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கிணற்றில் வருணனை ஆவாஹனம் செய்துள்ளதாக ஐதீகம். சுவாமி புறப்பாட்டின்போது பரிவார தேவதைகளுக்கு நடப்பது போன்றே இந்தக் கிணற்றுக்கும் பூஜை நடைபெறும். இதன் நீர் வற்றுவ தில்லை. இதற்குள் எண்ணற்ற சாளக்கிராமங்கள் இருப்பதாக நம்புகின்றனர். இதன் தீர்த்தம் நோய் அகற்றும் அருமருந்தாகவும் விளங்குகிறது.
கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில் ஜோதியாக மின்னுகிறான் ஸ்ரீகுருவாயூரப்பன். குருவாயூரப்பனை, உண்ணி (குழந்தை) கிருஷ்ணன் என்கிறார்கள் பக்தர்கள்.
மேலிரு கரங்களில் சங்கு& சக்கரமும், கீழிரு கைகளில் கதாயுதம்& தாமரையும் கழுத்தில் துளசி, முத்து மாலைகள் தவழ, கிரீடம், மகர குண்டலம், கேயூரம், கங்கணம், உதர பந்தனத்துடன் வலப்புற மார்பில் ஸ்ரீவத்ஸம் என்ற சந்தனமும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துபமும் அணிந்து ‘ஸ்தானகம்’ எனும் நின்ற நிலையில் அருள் புரிகிறான் குருவாயூரப்பன்.
இந்த விக்கிரகம் வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வால் உருவாக்கி வணங்கப்பட்ட பின் பிரம்மன், கண்ணன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது. இந்த விக்கிரகம் ‘பாதாள அஞ்சனம்’ என்ற உயர் தர கல்லில் வடிவமைக்கப்பட்டது. குருவாயூரப்பனது உற்சவர் விக்கிரகம் பொன்னால் ஆனது.
குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, அகோவனம், செஞ்சந்தனம் ஆகிய ஐவகைத் திரவியங்களை பன்னீரில் கலந்து அரைத்த நறுமணச் சந்தனத்தையே குருவாயூரப்பனுக்குப் பூசுகிறார்கள்.
விடியற்காலை கருவறை திறந்தவுடன், முன்தினம் சாத்தப்பட்ட சந்தனக் கலவையைக் கண்டுகளிக்கலாம். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் தைலாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த உஷத்கால பூஜையில் குருவாயூரப்பன் உற்சவ விக்ரகம், வெளிப் பிரகாரத்தை மூன்று முறை சுற்றிக் கொண்டு வரப்படுகிறது. அந்த நேரத்தில், அஷ்டதிக் பாலகர்களுக்கும், குரு, வாயு பகவான் ஆகியோருக்கும், பலிபீடத்தில் அன்னம் இடப்படுகிறது. இவ்வாறு பரிவார தேவதைகளுக்குச் செய்யப்படும் வழிபாடு ‘சீவேலி’ எனப்படும்.
அதிகாலையில் குருவாயூரப்பனை தரிசிப் போருக்கு கோயில் செக்கில் ஆட்டிய அபிஷேக எண்ணெயுடன் அபிஷேக தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
விக்கிரகத்தில் இருந்து அபிஷேக எண்ணெயை வாகை மரப் பட்டையால் ஆன கலவையால் அகற்றுவர். இதை வாகை சார்த்து என்பர்.
38 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள தங்க பீடம் குருவாயூரப்பனுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டது. இதை வழங்கியவர்: கரூரைச் சேர்ந்த தங்கவேலு என்ற அன்பர்.
குருவாயூரப்பன் தினமும் 12 திவ்ய நாமங்களுடன் பக்தர்களை அனுக்கிரகிக்கிறார்.
நிர்மால்ய தரிசனம்& விசுவரூப தரிசனம்; தைலாபிஷேகம்& வாத ரோகாக்னன்; வாகை சார்த்தல்& கோகுலநாதன்; சங்காபிஷேகம்& சந்தான கோபாலன்; பால அலங்காரம்& கோபிகாநாதன்; பால் முதலிய அபிஷேகம்& யசோதா பாலன்; நவகாபிஷேகம்& வனமாலா கிருஷ்ணன்; உச்சிகால பூஜை& சர்வாலங்கார பூஷணன்; சாயங்கால பூஜை& சர்வமங்கள நாயகன்; தீபாராதனை& மோகன சுந்தரன்; அத்தாழ (இரவு) பூஜை & விருந்தாவனசரன்; திருப்பள்ளி பூஜை& சேஷசயனன்.
ஆதிசங்கரர் வகுத்த பூஜை முறைப்படி: அதிகாலை மூன்று மணிக்கு நாகசுரம் மற்றும் சங்கு முழங்க, குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச் செய்வர். இப்படி காட்சி கொடுப்பதற்கு நிர்மால்ய தரிசனம் என்று பெயர். அப்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங் கள், மாலைகள் ஆகியவற்றைக் களைவர். நிர்மால்ய தரிசனம் காண்பது பெரும் புண்ணியம்!
தொடர்ந்து விசுவரூப தரிசனம். அடுத்து தைலாபி ஷேகம். அதன் பிறகு திருமேனியை வாகைத் தூள் சாற்றி எண்ணெய் களைவர். பின்னர் சங்காபிஷேகம். அப்போது புருஷ ஸ¨க்தம் சொல்வர். கடைசியில் தங்கக் கலச நீரால் பூர்ணத் திருமஞ்சனம். பிறகு நெற்பொரி, கதலிப் பழம், சர்க்கரை ஆகியவற்றை நைவேத்தியம் செய்வர். அப்போது பகவான், உண்ணி கிருஷ்ணனாக காட்சியளிப்பார்.
அடுத்து உஷத் பூஜை. அப்போது நெய்ப் பாயசமும், அன்னமும் பிரதான நைவேத்தியங்கள். மீண்டும் நடை திறக்கும்போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக் குழல், மஞ்சள் பட்டு ஆகிய அலங்காரங்களுடன் அற்புதமாகக் காட்சி கொடுப்பார். இத்தனை பூஜைகளும் காலை ஆறு மணிக்குள் நடைபெறும்.
உச்சி பூஜையின்போது ‘சீவேலி’ உற்சவம் நடைபெறும். யானை மீது சீவேலி மூன்று முறை பிராகாரத்தை வலம் வருகிறது. முதல் வலத்தின்போது பரிவார தேவதைகளுக்கு அன்ன பலி இடுவர். அடுத்து பால் அபிஷேகம். 9 மணிக்கு வெள்ளிக் கலச தீர்த்தத்தால் அபிஷேகம். இதை நவகாபிஷேகம் என்பர். தொடர்ந்து பந்தீரடி பூஜை. இதை வேதம் ஓதும் நம்பூதிரிகள் (ஓதிக்கன்மார்) செய்வர். அப்போது சாதமும், சர்க்கரைப் பாயசமும் பிரதான நைவேத்தியங்கள். சுமார் 11:30 மணிக்கு நைவேத்தியம் பால் பாயசம். 12:30 முதல் 4:30 மணி வரை கோயில் நடை சாத்தப்படும்.
மாலை நடை திறந்ததும் சீவேலி. இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை. அப்போது நெய் அப்பம், இலை அடை, பால் பிரதமன் ஆகியவை நைவேத்தியங்கள். இந்த பூஜைக்குப் பிறகு அத்தாழ சீவேலி. பிறகு சுற்று விளக்கு பிரார்த்தனை இருந்தால், ஆலயமெங்கும் விளக்குகள் எரிய, பஞ்ச வாத்தியங்கள் முழங்க, மூன்று அல்லது ஐந்து யானைகளுடன் பக்தர்களும் வலம் வருவர்.
குருவாயூர் கோயிலில் சாயங்காலம் மட்டுமே தீபாராதனை. ஏழு அடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரி விளக்கு என்று பல விளக்குகளை ஏற்றி ஆராதிக்கிறார்கள். இறுதியில் கற்பூர ஆரத்தி. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபடுவதாக ஐதீகம்.
குருவாயூர் கோயிலில் மேல்சாந்தி, கீழ்சாந்தி மற்றும் தந்திரிகள் என்று பூஜை செய்யும் அர்ச்சகர்களை வகைப் படுத்தி இருக்கிறார்கள்.
மேல் சாந்தி: தலைமை குருக்கள். இவர் முக்கிய பூஜைகள், அலங்காரம், அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர். இவரைத் தவிர மற்றவர்களுக்கு மூல விக்கிரகத்தைத் தொடும் உரிமை கிடையாது. இவர் கடும் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மேல்சாந்தி ஆறு மாத காலம் மட்டுமே பணி புரிய முடியும். இந்த கால அளவில் அவர் கோயிலை விட்டு வெளி வரக் கூடாது. கோயிலில் அவர் தங்கியிருக்க தனி இடம் உண்டு. கடல் தாண்டி பயணம் செய்தவர்கள் மேல்சாந்தியாக பணி புரிய இயலாது.
கீழ்சாந்தி: உதவி அர்ச்சகர்கள். விளக்கேற்றுவது, அபிஷேக நீர் மற்றும் மலர் மாலைகள் எடுத்துத் தருவது, நைவேத்தியம் தயாரிப்பது ஆகியவை இவர்களது வேலை. பரம்பரையாக வாரிசு உரிமை பெற்றவர்களே இதற்கு நியமிக்கப்படுவார்கள்.
தந்திரி: இவர்களும் வேதங்கள் கற்றவர்களே. பூஜைகளை தந்திர ரூபத்தில் செய்வதால், தந்திரிகள் எனப்படுகின்றனர். பூஜை, திருவிழா, உற்சவங்களுக்கு நாள்& நட்சத்திரம் தீர்மானிப்பவர்கள் இவர்களே. சிக்கலான விஷயங்களை பிரஸ்னம் பார்த்துத் தீர்மானித்து பரிகாரம் சொல்வதும் இவர்களே. இங்கு தந்திரிகள் ஆகும் உரிமை, சென்னமனா எனும் பரம்பரையையே சேரும்.
மாரார்: செண்டை, மேளம் ஆகியவற்றை வாசிப்பவர்கள் மாரார் எனப்படுவார்கள்.
பதியார்: குருவாயூரப்பனுக்கு பூமாலை கட்டுவதற்கு உரிமையுடைய இவர்களை மூஸி என்றும் குறிப்பிடுவர்.
குருவாயூர் கிருஷ்ணணை தரிசித்த பின், அருகில் உள்ள மம்மியூர் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் சிவன்& பார்வதியை வழிபட்டாலேயே குருவாயூர் தரிசனம் முழுமை பெறும் என்பது ஐதீகம்.
ஆண்கள் மேல் உடை இல்லாமல் வேட்டியுடனும், பெண்கள் தங்களது கலாசார உடைகளை அணிந்தும் குருவாயூரப்பனை தரிசிக்கச் செல்ல வேண்டும்.
நடை மூடும் முன் எட்டு வகை மூலிகைகளால் ஆன தீபத்தூள் கொண்டு திருப்புகை காட்டப்படும். இதற்கு கிருமிகளை அழிக்கும் வல்லமை உண்டு.
பக்தர்கள் கொண்டு வரும் பூமாலைகளை சந்நிதிக்கு முன் பலிபீடத்துக்கு மேலே இருக்கும் கொடியில் தொங்க விடுகிறார்கள்.
புதுமண ஜோடிகளையும் கைக் குழந்தை களையும் கருவறையை ஒட்டி யுள்ள நாலம்பலத்துக்குள் அனுமதிப்பதில்லை. அப்படியும் அசுத்தம் ஏற்பட்டால், புண்யாகம் செய்வதற்கான கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
தங்கக் கலசங்களில் நிரப்பிய புனித நீரால் ‘பிரம்ம கலச மந்திரம்’ சொல்லிக் கொண்டு தினசரி கும்பாபிஷேகம் செய்யப்படுவது இந்த ஆலயத்தின் சிறப்பு.
இங்கு சந்நிதியில் பிரசாதம் தரப்படுவதில்லை. வடக்குப் பிராகாரத்தில் மட்டுமே சந்தனம் போன்ற பிரசாதங்களைத் தருவார்கள்.
ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு பாயசம் நிவேதிக்க மாதம் ஒன்றுக்குத் தேவைப்படும் சர்க்கரை, ஐந்து டன்னுக்கும் அதிகம் என்கிறார்கள்.
குருவாயூர் கோயிலில் கணபதி, சாஸ்தா, இடத்து அரிகத்து பகவதி ஆகிய உபதேவதைகள் தரிசனம் தருகிறார்கள். இதில், இடத்து அரிகத்து பகவதிக்கு ருத்ர தீர்த்தக் கரையிலும் தனிக் கோயில் உண்டு. இவளுக்கு சுத்தமான துணியைத் திரியாக உருட்டி, எண்ணெயில் தோய்த்து தீபமேற்றி, அரிசி, தேங்காயை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். இதை, அழல் நைவேத்தியம் என்கிறார்கள்.
குருவாயூர் கோயில் நிர்வாகத்தால் கல்லூரி, பள்ளி, நர்சரி பள்ளி, ஆங்கில மீடியம் பள்ளிக்கூடம், வாத்திய இசை, கலைப்பள்ளி, சிற்பக்கலைப் பள்ளி ஆகியவை நடத்தப்படுகின்றன.
குருவாயூரில் துலாபாரம் பிரசித்தமானது. தங்களது வேண்டுதலையட்டி எடைக்கு எடை தங்கம், வெள்ளி, நாணயங்கள், பழங்கள், சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை பக்தர்கள் வழங்குகின்றனர். சொறி, சிரங்கு போன்ற தோல் நோய் பீடிக்கப்பட்டவர்கள், இங்கு எடைக்கு எடை சேனைக் கிழங்கை காணிக்கை செலுத்துகிறார்கள்.
பக்தர் ஒருவர் வாழைப் பழங்களை துலாபாரம் செலுத் தச் சென்றார். அப்போது அவர் கட்டியிருந்த பட்டு வேஷ்டி வீணாகிவிடும் என்பதால் வேறு வேஷ்டியைக் கட்டச் செய்தார் அவரின் தாய்.
வாழைப் பழங்கள் எவ்வளவு வைத்தும் தராசுத் தட்டுகள் சமமாகவில்லை. அனைவரும் திகைத்தனர். அர்ச்சகர் ஒருவர், பக்தரது பட்டு வேஷ்டியையும் தராசில் வைக்கச் சொன்னார். பின்னரே தட்டு சமமாயிற்று!
இங்கு பிற மதத்தவரும் துலாபாரம் செலுத்துகிறார்கள். 1969&ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24& ஆம் தேதி ஸஃபியா என்ற முகமதியப் பெண்ணுக்காக துலாபாரம் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றினர். ஸஃபியாவுக்கு, முன்பு பிறந்த குழந்தைகள் பத்து பேர் இறந்து விட்டதால் அவள் பெற்றோர், 11&ஆவது குழந்தைக்காக குருவாயூரப்பனை வேண்டினர். அப்படிச் செய்த துலாபாரமே இது.
1971& ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொச்சப்பன் என்ற கிறிஸ்தவ இளைஞருக்கு திடீரென்று பார்வை கோளாறு ஏற்பட்டது. அவர் குருவாயூரப்பனுக்கு எடைக்கு எடை தேங்காய் அளிப்பதாக வேண்டிக் கொண்டார். வேண்டுதல் நிறைவேறியதும் அவர் துலாபாரம் நிகழ்த்தினார்.
எல்லா நாட்களிலும் இங்கு அன்னப் பிராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந் தால், இங்கு வந்து சோறு ஊட்டுவதாக வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். தவிர குருவாயூரப்பனின் சந்நிதியில் சோறு ஊட்டினால், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வளர குருவாயூரப்பன் அருள் புரிவான் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
அடிமை கிடத்தல்: குழந்தைகளை பகவானின் குழந்தையாக பாவித்து, நடையில் கிடத்திவிட்டுத் திரும்புவர். பின் மற்றொருவர் மூலமாக குழந்தையை எடுத்து வரச் செய்வர். அதற்கான காணிக்கையை உண்டியலில் செலுத்துவர். இதற்கு அடிமை கிடத்தல் அல்லது நடை தள்ளுதல் என்று பெயர்
ஆள் ரூபம்: அங்கங்களில் நோய் நொடி உள்ள பக்தர்கள் தங்களது குறை தீர்ந்தால் குறிப்பிட்ட கண், கை, கால் போன்ற அங்கங்களை மரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றில் செய்து சமர்ப்பிப்பதை ஆள் ரூபம் சமர்ப்பித்தல் என்பர்.
குந்துமணி: மூலவருக்கு முன்புறம் தென் பகுதியில் வாணலி போன்ற பெரிய பாத்திரத்தில் குந்துமணிகள் இருக்கும். பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பின், தங்கள் குழந்தைகளை அந்த குந்துமணிகளை வாரி எடுத்து, மீண்டும் அதிலேயே போடச் செய்வர். இதனால் குழந்தைகள் துறுதுறுப்புடன் திகழ்வர் என்பது ஐதீகம்.
திருவிழாவுக்காக கொடியேற்றியதும் கிழக்குக் கோபுரத்துக்கு முன்பாக யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு ஓட்டப் பந்தயம் தொடங்குகிறது. முதலில் ஓடி வந்து கொடிமரத்தை தொடும் யானை 10 நாள் திருவிழாவிலும் ராஜ மரியாதையுடன் நடத்தப்படுகிறது. தவிர, இந்த யானைக்கு கிருஷ்ண விக்கிரகத்தை தன் மேல் ஏற்றிக்கொண்டு வலம் வரும் பாக்கியமும் கிட்டும்.
குருவாயூர் கோயிலுக்கு யானையை காணிக்கை அளிக்க விரும்பினால், கோயில் நிர்வாகத்துக்குக் கடிதம் எழுத வேண்டும். கோயில் அதிகாரிகள் தரும் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். யானை எங்கு வாங்கப்பட்டது என்ற விவரத்துடன் அந்த மாநில வனத் துறையினரின் சான்றிதழ் மற்றும் நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகளது பரிசீலனைக்குப் பிறகு காணிக்கையாளர், கால்நடை டாக்டர்கள் இருவர், யானைக்கான நாட்டு வைத்தியர் ஒருவர் ஆகியோரை, தனது செலவில் யானை இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் யானையை சோதிப்பார்கள். பிறகே, காணிக்கை யானையைத் தேர்வு செய்வார்கள். காணிக்கை கொடுக்கப்பட்ட யானையின் பராமரிப்புக்கும் காணிக்கையாளர் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும்.
தற்போது குருவாயூர் கோயிலில் 20 கொம்பன் (ஆண்) யானைகள் உட்பட சுமார் 64 யானைகள் உள்ளன. ஜெயலலிதா வழங்கிய ஜெயகிருஷ்ணா என்ற யானையும் அதில் அடங்கும்.
குருவாயூரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள புன்னத்தூர் கோட்டையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள யானைகள் காப்பகம் உள்ளது. அங்கு எல்லா யானைகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். இங்குள்ள ஒவ்வொரு யானைக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
கம்பீரமான பத்மநாபன் என்ற யானை குறித்து பல கதைகள் உண்டு. நீண்ட காலம் குருவாயூரப்பனுக்குச் சேவை செய்த இந்த யானை 1931&ல் நாராயணன் திருவடிகளை அடைந்தது.
மற்றொரு யானை கஜராஜன் என போற்றப்பட்ட கேசவன். இது, நிலம்பூர் ராஜாவால் குருவாயூர் கோயிலுக்கு தரப்பட்டது. 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4&ஆம் தேதி கேசவன் குருவாயூருக்கு வந்தபோது அதன் வயது பத்து. 54 ஆண்டுகள் தினமும் குருவாயூரப்பனை சீவேலி நேரத்தில் சுமந்து வந்த யானை இது.
குருவாயூர் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டபோது கேசவன் யானை கோயில் மணியை அடித்து ஊர் மக்களைக் கூட்டி தீயை அணைக்கச் செய்தது.
கேசவன் ஒருபோதும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. 1973&ல் கேசவனுக்கு ஆலய நிர்வாகம் ‘கஜராஜன்’ பட்டம் வழங்கியது. 1976 டிசம்பர் 2&ஆம் நாள் குருவாயூர் ஏகாதசி அன்று 72 வயதான கேசவன், இறைவனை தரிசித்தபடி அதன் தும்பிக்கை சந்நிதியை நோக்கியவாறே உயிர் துறந்தது. அதன் நினைவாக ‘பஞ்ச ஜன்யம்’ தங்குமிடம் அருகில் 12 அடி உயர கான்கிரீட் சிலை நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கேசவனது நினைவு நாளில் கோயிலின் எல்லா யானைகளுக்கும் விசேஷ உணவு அளிக்கப்படுகின்றன. ணு கார்த்திகை (விருச்சிக/நவம்பர் மத்தியில்)
1& ஆம் தேதி மண்டலம் துவங்குகிறது. இந்த 41 நாளும் கொண்டாடப்படுவது மண்டல விழா. கார்த்திகை 28& ஆம் நாள் நாராயண பட்டத்திரி, நாராயணீயத்தைப் பாடிய நன்னாள். இதை நாராயணீய தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
செம்பை வைத்தியநாத பாகவதர் தனது இறுதிக்காலம் வரை ஏகாதசி நாட்களில் குருவாயூரில் கச்சேரி நடத்தி வந்துள்ளார். அவரது நினைவாக ஆண்டுதோறும் 15 நாட்கள் இங்கு சங்கீத உற்சவ விழா நடக்கும். இதை செம்பை இசை விழா என்கிறார்கள். சித்திரை முதல் தேதி (விஷ§) குருவாயூரில் மிக முக்கியமான நாள். அன்று விடியற் காலை விஷ§ கணி காண்பது சௌபாக்கியம் தரும். அன்று தாம்பாளத்தில் தங்கம், அரிசி, காய்கறி, பழங்கள், குங்குமம், கொன்றைப் பூ, கண்ணாடி ஆகியவை திருச்சந்நிதியில் வைக்கப்படுகின்றன.
குருவாயூர் கோயிலில் நடைபெறும் லட்சதீபத் பெரு விழாவின் 19 நாட்களிலும் ஒவ்வொரு நாள் விளக்கேற்றும் பொறுப்பை ஒவ்வோர் உள்ளூர் அமைப்பும் ஏற்றுக் கொள்கிறது. 6&வது நாள் முறையை அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் ஏற்றுக் கொள்கிறது.
குருவாயூர் கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படும் ஒரே கலை நிகழ்ச்சி கிருஷ்ணாட்டம். இரவில் சீவேலி முடிந்ததும் பத்து மணி சுமாருக்குத் தொடங்கும் இந்த நாட்டிய நாடகம் இரவு 2 மணி வரை நடக்கும். இது 12&ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜயதேவரின் கீத கோவிந்தத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டது. கோயிலை நிர்வகித்த சாமூதிரி மன்னர்கள் தினமும் கீத கோவிந்தத்தை ஆலயத்தில் வாசிக்கச் செய்தனர். அதன் தொடர்ச்சியே இந்த கிருஷ்ணனாட்டம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment