Saturday, 22 December 2012

திருநள்ளாறு ஸ்தல புராணம்


திருநள்ளாறு ஸ்தல புராணம்

திருநள்ளாறு

படைப்புத் தொழிலால் கர்வமடைந்த பிரம்மா, சிவபெருமானால் தண்டிக்கப்பட்டு சிருஷ்டித் தொழிலை இழந்தார். அப்போது எம்பெருமானை வேண்டி பூஜை புரிவதற்காக நான்முகன் வந்த இடமே தர்பாரண்யம். இங்கு தர்பைகளால் ஆன கூர்ச்சத்தில் சிவபெருமானை ஆவாகனம் செய்து பிரம்மா பூஜை நடத்தினார்.
அந்த இடத்திலேயே பிரம்மனின் பக்திக்கு இரங்கி, சிவபெருமான் கூர்ச்சத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினார். அவர் விரும்பிய வரத்தைக் கொடுத்து சிருஷ்டி கடவுளாக மீண்டும் நியமித்தார் என்கிறது திருநள்ளாறு கோயிலின் ஸ்தல வரலாறு.
நளச்சக்ரவர்த்தி இங்கு சிவபெருமானை தரிசனம் செய்து, சனியினால் உண்டான துன்பங்கள் நீங்கி மன அமைதி பெற்றான். அதனால் பேரானந்தமுற்று இறைவனுக்கு திருக்கோயில் அமைக்க வேண்டுமென்ற ஆசையில் ஆலயத் திருப்பணிகளைத் துவங்கினான். ஆனால் இந்தப் பணியானது இடையில் தடைபட்டு நின்று போனது.
அப்போது அந்தணர்களை அழைத்த நளமகாராஜா, அதற்கான காரணத்தைக் கேட்டார். “விநாயகர் வழிபாடுகளை சிறப்புறச் செய்தால் விக்னங்கள் நீங்கி திருப்பணி குறையின்றி நிறைவேறும்’ என்று அவர்கள் கூறினார்கள்.
இவ்விதம் திருப்பணிக்கு சொர்ணம் கொடுத்ததினால் இத்திருத்தல விநாயகருக்கு சொர்ண கணபதி என்ற பெயர் வழங்கலாயிற்று.
இவ்வாறு சிறப்பான முறையில் நளனால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் பிரதானமாக விளங்குகிறார் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரப் பெருமான். இவர் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு பெயருடன் விளங்குவதாக ஐதீகம்.
கிருத யுகத்தில் ஆதிபுரீஸ்வரர், திரேதா யுகத்தில் தர்பவனேஸ்வரர், துவாபர யுகத்தில் விடங்கேசர், கலியுகத்தில் நளன் இங்கு அருள் பெற்றதால் நளேஸ்வரர் என்றும் இவருக்கு திருநாமங்கள் உண்டு. இங்குள்ள திருக்குளம் “நள தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது.  மூலவர் சந்நிதிக்கு தென்பாகத்தில் செண்பகத் தியாகேசர் சந்நிதி உள்ளது.
இவரை வழிபட்டு, இங்குள்ள மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பழம், சந்தனம் இவற்றை பிரசாதமாக உண்டு வந்தால் எல்லாப் பிணிகளும் நீங்கும் என்கின்றனர். தவிர, இக்கோயிலின் அம்பாள் சந்நிதியும் சிறப்பு மிக்கது. இது சக்தி பீடங்களில், அம்பாளின் உயிர் நிலையான ஸ்ரீ பிராணேஸ்வரி பீடமாகும்.
இங்கு வந்து அம்பாளை தரிசித்துச் செல்பவர்கள், லஷ்மி கடாட்சத்துடன் கல்வி ஞானங்களில் சிறந்து விளங்குவார்கள். ஸ்ரீ சனி பகவான் சந்நிதியானது இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனி பகவான் சந்நிதி, மேற்கு நோக்கியே இருக்கும்.
சனி பகவான்
உக்ர மூர்த்தியாகிய சனைச்சரன், இங்கே அனுக்கிரஹ தேவதையாக கிழக்கு நோக்கி இருக்கிறார். நவக்கிரகங்கள் தனியாக இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பது இவருடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.
இக்கோயில் காரைக்கால் பகுதியில் அமைந்துள்ளது. காரைக்கால் நகருக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 45 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. நாகப்பட்டினத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.\

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete