Thursday, 20 December 2012

+++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++


+++பாம்புகள் பற்றிய தகவல்கள்+++

சென்னை மற்றும் புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால், மக்களுக்கு பாம்புகள் குறித்து பய உணர்ச்சி அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஆண்டிற்கு 300 நல்லப் பாம்புகள், 500 சாரைப் பாம்புகள் மற்றும் இதர பாம்புகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினரால் பிடித்து அடர்ந்து காப்புக் காடுகளில் விடப்படுகின்றன. இருப்பினும் பாம்புகள் பற்றிய அச்சம் மக்களிடம் குறையவில்லை. உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளவை. அவைகள் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன். நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்பு படம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் இவைகள் பரவலாக காணப்படுகின்றன.கட்டுவிரியன்: இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை, கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் குறைந்த அளவே காணப்படுகிறது.கண்ணாடி விரியன்: இரவு நேரத்தில் காணப்படக்கூடிய இந்த பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும். கண்ணின் பாவை நெடு நீள வடிவத்திலிருக்கும். பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின் மேல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது 1.80 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முட்புதர் மற்றும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மிக நீளமான விஷப் பற்களை கொண்ட இந்த பாம்பிம் விஷம் இதயத் திசுக்களையும், ரத்த ஓட்ட அமைப்பினையும் தாக்கி மரணம் விளைவிக்க கூடியது. இந்த வகை பாம்பும் சென்னை புறநகரில் மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றன.சுருட்டை விரியன்: இந்த பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக காணப்படும். வெளிர் மற்றும் அடர் பழுப்பு செந்நிறம், சாம்பல் அல்லது மணல் நிறத்துடன் உடலின் மேற்புறத்தில் வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும். இதன் தலையின் மேற்புறம் அம்பு வடிவம் காணப்படும். 50 செ.மீ., நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 80 செ.மீ., நீளம் வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள் மற்றும் அதிக மழை பெய்யும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்டைகள், கற்களுக்கு இடையிலும் கற்றாழை போன்ற செடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின் விஷம் ரத்த மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தென்சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த வகை பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.தங்கத்தை விட மதிப்பானது விஷம்: வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம் 40 ஆயிரம் ரூபாய், சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.விஷமற்ற பாம்புகள்: சென்னை மற்றும் புறநகரில் விஷமற்ற பாம்புகளான சாரைப்பாம்பு, நீர்சாரை அதிகம் காணப்படுகின்றன. இது தவிர வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு போன்றவை சென்னை நகரில் சிறிதளவே காணப்படுகின்றன.பாம்புகள் பற்றிய தகவல்கள்: மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன.பாம்பு கடி முதலுதவி: பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து தோன்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:* பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வகையாகும்.* பாம்பின் வால் பகுதி உருளை வடிவில் அமைந்து, வயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டு, தலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு வகைகள்.* கண்ணுக்கும், மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள குழிவிரியன் வகையாகும்.* பாம்பின் முதுகின் நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்து, பிற செதில்களை விட பெரியதாக இருந்து, கீழ் உதட்டு செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.* வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.* தலைப் பகுதியில் பெரிய கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள்.பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கை:* நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.* நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புகள்.* நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.* நல்ல பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும் என்பது.* பாம்புகள் வழவழப்பாக இருக்கும்.* பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.* மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும்.* பச்சைப் பாம்பு கண்களை கொத்தும்.* கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும். இவ்வாறு கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதைகள். சிலரால் பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்.

No comments:

Post a Comment