Wednesday, 9 January 2013

திருக்கோயில் வழிபாட்டு இயல்


திருக்கோயில் வழிபாட்டு இயல்


  1. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?
    குளித்துத் தூய்மையான ஆடை அணிந்து, திருநீறு அணிந்து, திருமுறைகளை ஓதிச் சிவ சிந்தனையுடன் செல்லல் வேண்டும்.
  2. திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் யாது செய்தல் வேண்டும்?
    தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து இறைவன் புகழ்பாடிக் கொண்டு உள்ளே புகுதல் வேண்டும்.
  3. திருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
    பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.
  4. கிழக்கு நோக்கிய திருக்கோயிலிலும் மேற்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
    வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
  5. தெற்கு நோக்கிய திருக்கோயிலிலும் வடக்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
    கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
  6. எந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்கக் கூடாது?
    கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கல் ஆகாது.
  7. ஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்?
    எட்டு உறுப்புக்கள் நிலம் தோய வணங்க வேண்டும்.
  8. எட்டு உறுப்பு வணக்கமாவது யாது?
    தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
  9. பெண்டிர் எப்படி வணங்க வேண்டும்?
    ஐந்து உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.
  10. ஐந்து உறுப்பு வணக்கமாவது யாது?
    தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
  11. எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்?
    மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை விழுந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை வணங்கலாகாது.
  12. விழுந்து வணங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?
    திருக்கோயில் திருச்சுற்றினை வலம் வரல் வேண்டும்.
  13. எவ்வாறு வலம் வரல் வேண்டும்?
    இரண்டு கைகளையும் தலையிலாவது, மார்பிலாவது குவித்து வைத்து சிவப் பெயர்களை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து வலம் வரல் வேண்டும்
  14. எத்தனை முறை வலம் வரல் வேண்டும்?
    மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
  15. திருக்கோயிலில் எந்த முறையாக வழிபாடு செய்ய வேண்டும்?
    முதலில் விநாயகரை வழிபட்டுப் பின் பெருமானையும் உமையம்மையையும் வழிபாடு செய்து, திருநீறு வாங்கிக் கொண்டு அதன்பின் அம்பலவாணர், தென்முகப் பரமன் (தக்ஷிணாமூர்த்தி), சேயிடைச் செல்வர், பிறைமுடிப் பெருமான், முருகப் பெருமான் முதலிய திருமேனிகளை வழிபட வேண்டும்.
  16. விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
    முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக் காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.
  17. திருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?
    இரண்டு கைகளையும் தலையிலோ, மார்பிலோ குவித்துக் கொண்டு மனம் கசிந்துருக வழிபாடு செய்தல் வேண்டும்.
  18. எந்தக் காலத்தில் வழிபாடு செய்தல் கூடாது?
    திருமஞ்சனம், அமுது செய்வித்தல் காலங்களில் வழிபாடு செய்தல் கூடாது.
  19. திருமஞ்சன( அபிடேக ) நேரத்தில் திருச்சுற்றினை வலம் வரலாமா?
    உள் திருச்சுற்றினை வலம் வரல் ஆகாது. வந்தால் இறைவர் திருமஞ்சன நீர் செல்லும் பாதையைக் கடவாமல் அப்புனித நீரை மிதியாமல் முழுதாகாத பிறை வட்டம் போன்று வலம் வர வேண்டும்.
  20. வழிபாடு முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
    சண்டேசுரர் கோயிலை அடைந்து கும்பிட்டு, இறைவர் பிரசாதம் கோயிலிலிருந்து எடுத்துச் செல்ல இருப்பின் அவர் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனின் கைகளைத் தடவி ஏதும் கொண்டு செல்லவில்லையெனத் தெரிவித்துச் சிவவழிபாட்டுப் பலனைத் தரும்படி வேண்ட வேண்டும்.
  21. ஏன் சண்டேசர் வழிபாட்டில் இவ்வாறு செய்யல் வேண்டும்?
    சண்டேசரே இறைவனுடைய உண்டதும் உடுப்பதுமான அனைத்து பிரசாதங்களுக்கும் அதிபதி. எனவே அவரது அனுமதி இன்றி எந்தப் பிரசாதத்தையும் சிவாலயத்திலிருந்து எடுத்து வருதல் குற்றம்.
  22. சண்டேசர் வழிபாட்டின் பின் யாது செய்தல் வேண்டும்?
    கொடிமரம் முன்னர்ச் சென்று விழுந்து வணங்கி திருவைந்தெழுத்தை இயன்றவரை கணித்து எழுந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
  23. திருக்கோயிலில் செய்யத் தகாதன யாவை?
    ஒழுக்கம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கடித்தல், மூக்கு நீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், மயிர் போதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை கொள்ளல், தலையில் ஆடை தரித்துக் கொள்ளுதல், தோளிலே துண்டு இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், காலணி இட்டுக் கொள்ளுதல், பூசித்து கழித்த பொருள்களைக் கடத்தல், பூசித்து கழித்த பொருள்களை மிதித்தல், கொடி மரம், பலி பீடம், திருமேனி என்னும் இவைகளின் நிழலை மித்தல், வீண் வார்த்தை பேசுதல், இறைவருக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
  24. சிவஸ்தலங்களைத் தரிசனஞ் செய்ய வேண்டிய முறைமை யெப்படி?
    விநாயகமூர்த்தி, மூலலிங்கம், சபாபதிமூர்த்தம், சோமாஸ்கந்தமூர்த்தம், பரிவார தேவர்கள், மூலஸ்தானம், அம்மையார், சண்டேசுரர், பயிரவர் என்னும் மூர்த்தங்களைக் கிரமமாகத் தரிசிக்கவேண்டும். முதல் விநாயகமூர்த்தியைத் தரிசித்தவுடன் நந்திதேவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு மூலலிங்க முதலாகத் தரிசிக்க வேண்டும்.
  25. பரிவார தேவர்கள் யார்?
    இருபத்தைந்து மூர்த்தங்களில் சபாபதியும் சோமாஸ்கந்தமூர்த்தமுந் தவிரச் சந்திரசேகரர் முதலிய இருபத்து மூன்று மூர்த்தமுமாம். பிரமதேவன், விஷ்ணு, துர்க்கை, சுப்பிரமணியர், வீரபத்திரர், நவக்கிரகங்கள், வாமாதி அஷ்ட சத்திகள் பரமேசுவரர்களுமாம்.
  26. எந்தப்புறத்திலிருந்து தரிசிக்க வேண்டும்?
    கிழக்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுடைய வலப்பக்கமாகத் தென்புறத்தில் நின்று தரிசிக்க வேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு வலப்பாகமாக மேற்புறத்தில் நின்றும், மேற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாகத் தென்புறத்தில் நின்றும், வடக்குநோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாக மேற்புறத்தில் நின்றும் தரிசிக்கவேண்டும்.
  27. துவஜஸ்தம்பத்தில் பணியவேண்டிய கிரமமெப்படி?
    கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்தின் அக்கினி மூலைக்கு எதிராகச் சமீபத்தில் சிரசுவைத்து மார்பு பூமியிலேபடும்படி இரண்டு கைகளையும் வடக்காக நேரே நீட்டிப் பின்பு தோள்களிலே மண்படும்படி இரண்டு கைகளையும் தெற்கே நீட்டி இரண்டு காதுகளையும் பூமியிலே பொருந்தச் செய்து அஷ்டாங்கவந்தனஞ் செய்யவேண்டும். கைகளைத் தெற்கே நீட்டும்போது முன்னதாக வலக்கை நீட்டிப் பின்பு இடக்கை நீட்டவேண்டும். காது மண்ணில் பொருந்தச் செய்யும்போது முந்தி வலக்காதும் பின்பு இடக்காதும் பொருந்தவேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியானாலும் மேற்கு நோக்கிய சந்நிதியானாலும் பலிபீடத்தின் நிருதிமூலையில் முன்சொன்ன முறைமைப்படியே சிரசுவைத்து நமஸ்காரம் செய்தல்வேண்டும். வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்தின் வாயுமூலையில் சிரசுவைத்துக் காலை மேற்காக நீட்டி முன்சொன்னப்படிப் பணியவேண்டும். ஆனால் பகல் பதினைந்து நாழிகைக்கு மேற்பட்ட காலத்தில் தரிசிக்கப்போனால் மேற்கே காலை நீட்டக்கூடாமையினாலே அஷ்டாங்க பஞ்சாங்கத்துடன் பணியாமல் நின்றபடி இரண்டு கைகளையுங்குவித்து உச்சியின் மேல் வைததுக்கொண்டு தரிசிக்க வேண்டும்.
  28. பகல் பதினைந்து நாழிகைக்குமேல் தரிசனம் செய்வதற்குக் காரணமென்ன?
    சூரியகிரகணம், மகரசங்கராந்தி முதலாகிய புண்ணிய காலங்கள் பகல் பதினைந்து நாழிகைக்குமேல் வருமானால் தரிசிக்கப்போக வேண்டும்.
  29. சூரிய அஸ்தமனத்தின்பின் தரிசிக்கப்போனால் எப்படிப் பணியவேண்டும்.
    பகல் பதினைந்து நாழிகைக்குமேல் சூரிய அஸ்தமனமாவதற்கு முன்வரையில், அஷ்டாங்கத்துடன் பணியலாகாதேயன்றி மற்றக் காலங்களிலே யெல்லாம் அஷ்டாங்கத்துடனே தான் பணியவேண்டும்.
  30. அஷ்டாங்க பஞ்சாங்க மென்பதை யல்லாமல் வேறு விதமான நமஸ்காரங்களுமுண்டோ?
    ஏகாங்கம், துவிதாங்கம், திரிவிதாங்கம் என மூன்றுமாம்.
  31. மேற்கூறிய நமஸ்காரங்களை முறையே விளக்குக?
    சிரசினால் மாத்திரம் வணங்குவது ஏகாங்கமாம். சிரசின் மேல் வலக்கரத்தைக் குவித்து வணங்குவது துவிதாங்கமாம். இரண்டு கைகளையும் சிரசின்மேல் குவித்து வணங்குவது திரிவிதாங்கமாம். பஞ்சாங்கமாவது சிரமும், இரண்டு வைகளும், இரண்டு முழந்தாள்களும் பூமியின்மேல் படும்படி வணங்குதலாம். அஷ்டாங்கமாவது சிரம், இரண்டு கைகள், இரண்டு முழந்தாள்கள், இரண்டு காதுகள், நெற்றி இவைகள் பூமியிற்படிய வணங்குதலாம்.
  32. பிரதக்ஷணம் செய்யவேண்டிய முறைமை யெப்படி?
    காமியத்தை விரும்பினர்வள் வலமாகவும், மோக்ஷத்தை விரும்பினவர்கள் இடமாகவும், காமியத்தையும், மோக்ஷத்தையும் விரும்பினவர்கள் வலமிடமாகவும் பூரணகர்பபவதி எண்ணெய் நிறைந்த குடத்தைச் சிரசின்மேல் வைத்துக்கொண்டு காலில் விலங்கு பூட்டப்பட்டவளாய் நடப்பதுபோல அதிக மெதுவாய்ப் பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். அப்போது பரமசிவனது பாதங்களைச் சிந்தித்துக்கொண்டும செபவடங் கையிலே வைத்துக்கொண்டும் பஞ்சாக்ஷரசெபஞ் செய்து கொண்டும் இரண்டு கைகளையும் மார்புக்குச்சரியாக வைத்துக்கொண்டும் வரவேண்டும்.
  33. சிவசந்நிதியில் எத்தனை பிரதக்ஷணம் செய்ய வேண்டும்?
    மூன்று அல்லது ஏழு பிரதக்ஷணஞ் செய்ய வேண்டும். இந்தத் தொகைக்கு மேற்படவும் செய்யலாம்.
  34. எந்தக் காலங்களில் ஆலயத்துக்குப் போக வேண்டும்?
    காலை, உச்சி, அந்தி யென்னும் திரிசந்தி காலங்களிலும் போகலாம்.
  35. இந்த மூன்று கால மல்லாத காலத்தில் தரிசனஞ்செய்ய ஆலயத்துக்குப் போகலாகாதோ?
    கிரகண புண்ணியகாலம், சங்கராந்தி புண்ணியகாலம் நேரிடுமானால் தரிசனஞ்செய்யப் போகலாம்.
  36. எந்த ஆவரணங்களில் பிரதக்ஷணம் செய்ய வேண்டும்?
    முதலாவரணந் (கருவறை) தவிர மற்ற ஆவணங்களில் பிரதக்ஷணஞ் செய்யலாம்.
  37. ஆவரணங்களின் முறைமை யெப்படி?
    சிவலிங்கப் பெருமானைக் கெர்ப்பக்கிரகத்தில் சூழ்ந்து வரத்தக்கதாக இருப்பதே முதலாவரணம். மற்றைய ஒன்றின்பின்னொன்றாய் இரண்டு முதல் ஐந்து ஆவரணங்களாம். அதற்கப்பால் ஊரின்புலமே ஆறா மாவரணம்.
    இப்படி வரும் ஆவரணங்களில் ஸ்தூபி நிழலாவது துவஜஸ்தம்ப நிழலாவது நேரிடுவதாயிருந்தால் அந்த ஆவரணத்தைவிட்டு அப்புறத்திலிருக்கும் ஆவரணத்தில் பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். சுவாமி உத்சவங்கொண்டருளுகின்ற காலத்தில் சுவாமியின் பின்வரும்போது மேற்சொன்ன நிழலிருக்குமானாலும் குற்றமில்லை.
  38. பிரதக்ஷணம் இத்தனை நாழிகை செய்ய வேண்டு மென்கிற நியதியுண்டோ?
    ஒரு ஜாமப் பொழுதளவு செய்யவேண்டும்; அவ்வாறு செய்தால் ஜெனனமரணம் நீங்கிச் சிவலோகம் அடைவார்கள்.
  39. சோமசூக்தப் பிரதக்ஷணமென்பது யாது?
    அதாவது பிரதக்ஷணஞ்செய்யத் தொடங்கும்போது நந்திதேவரைத் தரிசித்துக்கொண்டு அங்கிருந்தபடியே யிடமாகச் சென்று சண்டேச நாயனாரைத் தரிசித்துச் சென்ற வழியே திரும்பிவந்து மறுபடியும் நந்திதேவரைத் தரிசித்து அங்கிருந்து வலமாகச் சென்று சண்டேச நாயனாரைத் தரிசித்துத் திரும்பிவந்து நந்திதேவரைத் தரிசித்துப் பின்பு சிவலிங்க தரிசனஞ் செய்து பணியவேண்டும். இவ்வாறு ஒரு பிரதக்ஷணஞ் செய்தால் அனந்தம் பலனுண்டு. பிரிந்து வருகின்றபடியே பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். இந்தப் பிரதக்ஷணம் பிரதோஷ காலத்திற் செய்தால் விசேஷமான பலனுண்டு.
  40. பிரதோஷ காலமாவது எது?
    பகல் இருபத்தாறேகால் நாழிகைக்கு மேற்பட்ட மூன்றே முக்கால் நாழிகையளவும் சூரியாஸ்தமனமான மூன்றே முக்கால் நாழிகைக்கு உட்பட்டதுமான காலம் பிரதோஷகாலம். இக்காலத்திற் சிவதரிசனஞ் செய்வது முக்கிய மானதால் சிவனடியார்களாயுள்ளாரியவரும் அவசியம் சிவதரிசனம் செய்யவேண்டும்.
  41. பிரதோஷமென்பதற்குப் பொருளென்ன?
    இராத்திரியின் முன் என்பதாகும். சம்ஸ்கிருதத்தில் ரசனி முகமென்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு சொல்லப்படுகின்ற பிரதோஷகாலம் திரியோதசி திதியிற் சிறந்தது. பிரதோஷ விரதமும் இந்தத் திதியிலனுஷ்டிக்க வேண்டும்.
  42. திரயோதசி திதியிற் சிறந்ததற்குக் காரணமென்ன?
    கங்காதர மூர்த்தியாகிய பரமசிவம் ஆலகால விஷமுண்டருளியபோது ஒரு க்ஷணநேரம் சும்மாவிருந்தார். அன்று ஏகாதசிதிதி. அப்போது தேவாகள் பரமசிவனை அருச்சித்துக் கொண்டிருந்து மறுநாள் துவாதசி திதியில் பாரணஞ்செய்து பூர்த்தியடைந்தார்கள். அன்று மறுநாள் திரயோதசி திதி பிரதோஷகாலத்தில் பரமசிவன் பராசத்தி யெதிரில் சூலஞ் சுழற்றிக்கொண்டு கயிலாசகிரியில் ஒரு ஜாமம் நடனஞ்செய்தருளினார். இந்தக் காரணத்தினால் திரயோதசி திதி பிரதோஷகாலத்தில் சிவதரிசனஞ் செய்கின்றவர்கள் நந்திதேவரைப் பரிசித்து நந்திதேவருடைய இரண்டு கொம்பு மத்தியில் பிரணவ சகிதமாக அரகரவென்று சொல்லிக்கொண்டு சிவலிங்க தரிசனஞ் செய்யவேண்டும். இவ்வாறு தரிசிக்கும் சிவனடியார்கள் சிவசாரூபம் பெறுவார்கள். சனிப்பிரதோஷம் மிகுந்த சிறப்புள்ளதாக ஆகமம் சொல்லுகின்றது. சிவலிங்க தரிசனஞ் செய்கின்றவர்கள் வில்வத்தினால் சிவார்ச்சனை செய்விக்கவேண்டும். பிரதோஷவிரத மனுஷ்டிப்பவர்கள் சிவனடியார்களுக்கு அமுது படைத்துப் பின்பு புசிப்பது உத்தமம்.
  43. பிரதோஷ விரத மனுஷ்டித்துப் பேறு பெற்றவர்கள் யாவர்?
    உஜ்ஜயினி மாகாளமென்னும் நகரத்துக்கு அரசனாகிய சந்திரசேன மகாராஜன் சனிப்பிரதோஷ விரத மனுஷ்டித்து இம்மையில் அரசர்களெல்லாம் தன்னை வணங்கும்படி செங்கோல் செலுத்திச் சிவபதம் பெற்றான். இந்த ராஜன் பூஜை செய்ததைப்பார்த்த ஒரு இடைப்பிள்ளைக்குப் பக்தியுண்டாகி வீதியில் மணலினால் ஆலயமுதலானவைகளும் அமைத்துக்கொண்டு ஒரு சிலையை நாடிச் சிவலிங்கமாகப் பாவித்துப் பூசைசெய்து பேறுபெற்றான். இன்னும் பலர் இவ்விரத மனுஷ்டித்துப் பேறுபெற்றார்கள்.
  44. இவ்விரதம் நிறுத்திவிடுவதானால் யாது செய்தல் வேண்டும்?
    பிரதோஷவிரத மிருப்பவர்கள் தேக அசக்தியினால் நிறுத்திவிடுகிறதாயிருந்தாலும், மேலுமிடைவிடாமல் அனுஷ்டிப்பதாயிருந்தாலும் உடனுக்குடன் உத்தியாபனஞ் செய்ய செய்யவேண்டும். அப்படிச் செய்யாமலிருந்து தேகம் நழுவிவிடுமானால் விரத பலன் சித்தியில்லையாம். ஆதலினால் ஆகம விசாரணையுள்ளவர்களால் தெரிந்துகொண்டு நடக்கவேண்டும்.
  45. சிவதரிசனஞ் செய்யும்போது நந்திதேவருக்கும் சிவலிங்கப் பெருமானுக்கும் மத்தியில் ஏன் போகலாகாது?
    அப்படிப்போவது முப்பத்திரண்டு குற்றங்களிலொன்றாம். ஆதலால் போகலாகாது.
  46. மேற்கூறிய முப்பத்திரண்டு குற்றங்கள் யாவை?
    நந்திதேவருக்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் மத்தியிற் போதல், தரிசனை செய்தபின் புறங்காட்டிவருதல், ஒருகை குவித்து தரிசித்தல், ஒரு பிரதக்ஷணஞ் செய்தல், மேலே யுத்தரீயம் போட்டுக்கொண்டு தரிசித்தல், கோபுரச்சாயையைக் கடத்தல், கோயிலிலுண்ணுதல், நித்திரைசெய்தல், நின்மாலியத்தைத் தாண்டுதல், அதனைத் தீண்டுதல், கையினால் விக்கிரகங்களைத் தீண்டுதல், ருத்திரகணிகையரைக் கையினால் தீண்டுதல், அவர்களோடு பேசுதல், நோக்குதல், வீணான வார்த்தைகள் பேசுதல், கோயிற்காரிய மல்லாத சொல்லைச் சொல்லுதல், தான் சொல்லாவிட்டாலும் ஒருவர் சொல்லுவதைக் கேட்டல், உத்தமர்களை யவமதித்தல், அற்பர்களை மதித்துப்பேசுதல், அவ்விடத்திலிருக்கும் சிவசொத்தாகிய பொருளையபேக்ஷித்துப் பார்த்தல், வேதங்களால் சொல்லப்படாத சிறுதெய்வங்களைப் பணிதல், வேதமுதலான கலைகள் பாடமோதுதல், உன்னதஸ்தானத்திலிருத்தல், ஆசனத்திலிருத்தல், ஒருவரைப் பார்த்து நகைத்தல், பிணங்குதல் முதலான துர்க்குணங்களைப் பாராட்டுதல், அருட்பாக்களையன்றி மற்றப்பாடலை மதித்துக்கேட்டல், சண்டேசுரரிடத்தில் வஸ்திரத்தின் நூல் கிழித்துவைத்தல், பலிபீடத்துக்கும் சந்நிதானத்துக்கும் மத்தியில் மற்றவரை வணங்குதல், திருக்கோயிலினுள் பொடிமுதலிய போடுதல், திரிசந்தியல்லாத காலங்களில் ஆலயத்திற் செல்லுதல், இரண்டொரு பிரதக்ஷணஞ்செய்தல், சிரேஷ்டமல்லாத கீர்ததனங்கள் பாடுதல் என்னுமிவையாம்.
  47. அன்றி சிவதீர்த்தத்திலும் நந்தன வனத்திலும் செய்யத்தகாத காரியமென்ன?
    சிவ தீர்த்தத்தில் உமிழ்நீர் துப்பலாகாது. மூக்குச் சிந்தலாகாது. மற்றுமுள்ள அசுசியான காரியஞ் செய்யலாகாது. நந்தனவனத்தும் இப்படியே.
  48. நந்தனவனம் சிரேஷ்டமானதற்குக் காரணமென்ன?
    சிவார்ச்சனைக்கு யோக்கியமான பூச்செடிகளையுடையதாகையால் சிரேஷ்டமாயது. இதுவுமன்றிப் பரமசிவம் சில மலர்களிலும் பராசக்தி சில மலர்களிலும் வாசமாயிருப்பதனாலும் சிரேஷ்டமாயது. இதன் விபரம் புட்பவிதியில் கண்டு கொள்க.
  49. பாடல்பெற்ற ஸ்தலங்களிலிருக்கும் ஆலயங்களுக்கு அபாயம் நேரிடுவதாயிருந்தால் என்செய்வது?
    அக்காலங்களி லங்கிருக்கும் சுயம்புமூர்த்தி சலனப்படுத்தத் தக்கதாயிருந்தால் வேறே ஆலயமேற்படுத்தி, அந்தச் சிவலிங்கத்தைக் கொண்டுவந்து ஸ்தாபிக்கலாம். சலனப்படுத்தக் கூடாததாயிருந்தால் வேறே லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் சுயம்பு மூர்த்தியேயாம்.
  50. பரமசிவன் எந்தச்சிவலிங்கத்தினிடத்தில விசேஷமாய் மூர்த்திகரித்திருக்கிறார்?
    சுயம்புலிங்கத்தில் சர்வதா காலமும் மூர்த்திகரித்திருக்கிறார்.
  51. பரமசிவன் எங்கும் பரிபூரணமாயிருக்க சிவாலயத்தில் சிவலிங்கத்தினிடமாக மூர்த்திகரித் திருருக்கிறாரென்பதற்குத் திருஷ்டாந்த மென்ன?
    பசுவின் சரீரமெங்கும் பாலானது வியாபித்திருந்தாலும், அதன்முலைக் காம்பினாலேயேயன்றி அப்பாலையடைவது கூடாததுபோல சிவலிங்கத்தினிடத்திலே யன்றி அப்பெருமானையடைவது கூடாது.
  52. திரிசந்தி காலங்களில் சிவதரிசனஞ் செய்வதில் இன்னகால தரிசனத்தினால் இன்ன பலன் சித்தியாமென்கிறது உண்டா?
    காலையில் சந்தியில் தரிசித்தால் அன்று நேரிடும் பாவம் நிவர்த்தியென்றும், உச்சிக்கால தரிசனத்தால் அந்தச் சென்மத்தில் நேரிடும் பாவம் நிவர்த்தியென்றும், சாயங்கால தரிசனத்தால் செனனங்கள்தோறும் நேரிட்டபாவங்கள் நிவர்த்தியென்றும் அறிந்துகொள்க

2 comments:

  1. அய்யா! தவறா சொல்றீங்களோன்னு தோணுது. சிலரைப் பார்த்தீங்கன்னா.. உடம்பில்கூட நீர்படாமல், வயிறு நிரம்ப சாப்பிட்டு, பட்டு வேஷ்டியோ, பட்டுப்புடவையோ, கட்டிக்கொண்டு, வாசனைத் திரவியங்கள் உடம்பில் ஸ்பிரே பண்ணிக்கொண்டு, கையில், அவரவர் மதத்திற்குரியவர்களுக்கே உண்டானவைகளை, சுமந்துகொண்டு, போகும் அழகை அய்யா பார்க்கவில்லையோன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. எனக்கு பிடிக்காதவைகளில், இதுவும் ஒன்று. ஒருமுறை மீனை கழுவி வைத்துவிட்டு, ஒரு பெண் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் வந்துவிட்டாள். அந்த ஆலயம் முழுவதும் மீன் வாடை. இந்த ஒரு இங்கிதம் கூட ஒரு சிலருக்கு தெரிவதில்லை. எனக்கு ஒரு பாடல் வரிகள் ஞாபகம் வருது.
    அத்தரும், ஜவ்வாதும் அள்ளியே பூசியும், அங்கம் மணக்கவில்லையே,"முருகையா! அங்கம் மணக்கவில்லையே.. என்ற வரிகள் சிந்திக்கக்கூடிய வரிகள்.
    நாம் ஆலயம் செல்லவேண்டும் என்றால், நம் மனதில், நாம் ஆலயம் செல்கிறோம் என்ற சிந்தனை மனதில் வர வேண்டும். இரண்டாவது, நம் உடம்பின் வியர்வை, வாடை, மற்றவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதனைப் புரிந்து,குளித்து, சுத்தமாக இறைவனை தரிசிக்க வேண்டும். மூன்றாவது, கெட்ட எண்ணங்களை, வளர்த்துக் கொண்டு, ஆலயம் செல்லக்கூடாது. உன் சத்துருவை விசுவாசி, அப்போது நீயும், உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்பதே. நான்காவது, இறை சிந்தனை மட்டுமே, நம் கருத்தில் இருக்கவேண்டும். அப்போது தான்,"இறைவனின் சக்தி நமக்கு கிட்டும். அவள் உடுத்திருக்கிற பட்டும்,"அவள் அணிந்திருக்கிற நகையும், அவர் அணிந்திருக்கிற கைச்செயினும், மோதிரமும், நம் கண்ணுக்குள்ளோ, சிந்தனையிலோ வருவதைத் தவிர்க்க வேண்டும். சிலர் இதைப் பிறருக்கு காட்டவே, பொழுதுபோக்காக ஆலயம் வருவார்கள். இவர்களை நம் பொருட்படுத்தாமல், பக்தி சிந்தனையோடு, நாம் எதற்காக வந்தோம் என்ற சிந்தனையில், இத்தனை மனிதர்களால் வரும் சோதனைகளில் வெற்றிகண்டு, இறைவனை தரிசித்து வந்தோமானால், நாம் நினைத்த காரியம், பகவானிடம் வேண்டிய காரியம், சித்தி ஆகும் என்பதில் ஐயமில்லை. இதுதான் முழு நம்பிக்பிக்கையும் ஆகும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது, இவ்வாறு வணங்குதலில்தான் அடங்கியுள்ளது அய்யா! வெ.சாமி.அவர்களே...

    ReplyDelete