Wednesday, 9 January 2013

ஹரே கிருஷ்ண மகாமந்திரம்


ஹரே கிருஷ்ண மகாமந்திரம் ஜெபித்தல் பற்றி மக்கள் கேட்கும் கேள்விகள்

கேள்வி: ஹரே கிருஷ்ண மந்திரம் ஜெபிப்பது, மறு பிறப்புடன் ஏதாவது தொடர்பு கொண்டுள்ளதா?

பதில்: நிச்சயமாக. மறு பிறப்புப் பற்றிய முழு செயற்பாட்டின் ஒழுங்கு, நீங்கள் மரண தற்வாயில் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. நீங்கள் ஒரு நாயைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பின், மறு பிறவியில் நீங்கள் ஒரு நாயாக வரக் கூடும். ஒரு கணவன், மனைவியைச் சிந்தித்துக் கொண்டிருப்பின் அவன் ஒரு பெண்ணாக வரக் கூடும். அதேபோல் மனைவி கணவனைச் சிந்தித்துக் கொண்டிருப்பின் அவள் ஒரு ஆணாக வரக் கூடும். ஆனால் நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பின், நீங்கள் ஆன்மீக உலகிற்கு செல்வீர்கள். அங்கே கிருஷ்ணருடன் கூடியிருக்கும் வண்ணம் நீங்கள் ஒரு ஆன்மீக உடலைப் பெறுவீர்கள்.
நீங்கள் கிருஷ்ணரைச் சிந்தித்துக் கொண்டிருக்காவிடில், இந்த லௌகீக உலகில் மீண்டும் நிச்சயம் மறு பிறவி எடுப்பீர்கள். ஒரு மனிதனாகவோ, மிருகமாகவோ அல்லது ஒரு தாவரமாகவோ மறு பிறவி எடுப்பீர்கள். இது நிச்சயம் விரும்பத் தக்கதல்ல. ஏனெனில், இந்த லௌகீக உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் வியாதி, முதுமை, மரணம், மறு பிறப்பு போன்ற துன்பங்களை அனுபவிக்கத்தான் வேண்டும். ஆகவே வேதங்களில் விளக்கியுள்ளபடி, மரணத் தறுவாயில் நாங்கள் கிருஷ்ணரை நினைக்க வேண்டும். இதற்கான சுலபமான வழி, அவருடைய தூய நாமங்களாகிய ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பதுதான்.

கேள்வி: ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபித்தல், உங்களுக்கு நல்வினைப் பயனைக் கொடுக்குமா?
பதில்: இல்லை. ஹரே கிருஷ்ண மந்திரம், உங்களுக்கு எந்த வித வினைப் பயனையும் கொடுக்காது. நல்வினைப் பயன் என்பது நீங்கள் செல்வம், உயர் பிறப்பு, உயர்ந்த கல்வி, அழகிய உடலமைப்பு போன்றவற்றைப் பெறுவதேயாகும். ஆனால் இந்த ஐசுவரியங்களை அனுபவிப்பதற்கு, நீங்கள் பிறிதொரு ஸ்தூல உடலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல பேரமல்ல. ஏனெனில் உங்களது வினைப்பயன் எவ்வளவு நல்லதாயிருப்பினும் நீங்கள் தொடர்ந்தும் முதுமை, நோய், மரணம், மீண்டும் பிறப்பு என்பவற்றை அடைவீர்கள். ஒருவேளை ஏழையாகவோ, அறிவற்றவராகவோ, அவலட்சனமாகவோ அல்லது இழி குலத்தில் பிறந்தவராகவோ, அல்லது ஒரு தாவரமாகவோ, விலங்காகவோ பிறப்பு அமையலாம். இதுவே பிறப்பு, இறப்பு வட்டம் என அழைக்கப்படும். ஆகவே நீங்கள் நல் வினைப் பயனோ அல்லது தீய வினைப் பயனோ கொண்டிருந்தாலும், எல்லாமே உண்மையில் கெட்டதுதான். இது ஒரு சுழல் சக்கரத்தில் இருப்பது போன்றது. சில சமயங்களில் நீங்கள் மேலே செல்கிறீர்கள், மறுகணமே நீங்கள் மீண்டும் கீழ் நோக்கி செல்வீர்கள். நீங்கள் முடிவில்லாமல் பிறப்பெடுத்து, மரணித்து, மீண்டும் பிறப்பெடுப்பீர்கள்.
ஆனால் ஹரேகிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நீங்கள் நல் வினைப் பயன், தீய வினைப் பயன் இரண்டிலுமிருந்து உங்களை விடுதலையாக்கிக் கொள்கிறீர்கள். நல் வினைப் பயனின் விளைவை அனுபவிப்பதற்கோ அல்லது தீய வினைப் பயனால் விளைந்த துன்பத்தை அனுபவிப்பதற்கோ ஸ்தூல உடலை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை. உங்கள் மூல ஆன்மீக தகைமையாகிய ஸ்வரூப-சித்த நிலையை நீங்கள் அடைகிறீர்கள். உண்மையில், ஆன்மீக உலகில் ஒவ்வொருவரும் கிருஷ்ணருடன் அபூர்வமான, காலவரையறையற்ற உறவைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கிருஷ்ணருடைய சேவகர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ ஆகலாம். அதனால் உங்கள் உடல் வினைப் பயனிலிருந்து விடுதலையடைந்து முழுமையான, எல்லையற்ற அறிவையும் ஆனந்தத்தையும் அடையும்.

கேள்வி: ஹரே கிருஷ்ண மந்திரம் ஜெபிப்பது, யோகத்தின் ஒரு வடிவமா?
பதில்: ஆம். பகவத்கீதையில், பகவான் கிருஷ்ணர் யோகத்தின் எல்லா வடிவங்களிலும் பக்தி யோகமே (அவர் மீது பக்தி மய சேவை) மிக உயர்ந்தது என உறுதிப்படுத்தியுள்ளார். பக்தி யோகத்தை நிறைவேற்றுவதற்கு மிகச் சிறந்த வழி, கிருஷ்ணரின் நாமங்களை ஜெபிப்பதேயாகும். சமஸ்கிருத்தத்தில் யோகம் என்பது மிக உன்னதமானவருடன் தொடர்பு கொள்வது என பொருள்படும். ஹரே கிருஷ்ண மந்திரம், எப்படி தொலைபேசியின் ஒலி அதிர்வுகள் எம்மை தொலைவிலுள்ள நபர்களுடன் தொடர்புபடுத்துகிறதோ, அதுபோன்று உங்களை பகவான் கிருஷ்ணருடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் ஒரு உன்னத ஒலி அதிர்வாகும்.

 கேள்வி: ஹரே கிருஷ்ண மந்திரம் எங்கிருந்து வருகிறது?
பதில்: சில சமயங்களில் மக்கள் அது இந்தியாவிலிருந்து வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் ஹரே கிருஷ்ண மந்திரம் சூரியனைப் போன்றது. முதலில் அது கிழக்கில் தோன்றி, பின்பே மேற்கில் தோன்றுகிறது. ஆனால் அது இந்தியாவினுடையதல்ல. ஒரு பழைய வங்காளப் பாடல் நமக்கு தெரியப்படுத்துவது போல், "ஆன்மீக வானத்திலுள்ள, கிருஷ்ணருடைய கோலோக பிருந்தாவனத்திலிருந்து, ஹரே கிருஷ்ண மந்திரத்தின்  ஒலி வந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: ஹரே கிருஷ்ண மந்திரத்தின் வரலாறு என்ன?
 பதில்: ஹரே கிருஷ்ண மந்திரத்தை, பெரிய பெரிய முனிவர்கள் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே ஜெபித்தனர். வேதாகமங்கள், ஹரே கிருஷ்ண மந்திரம் நித்தியமானதும், காலவரையறை அற்றதுமாகும் என்று கூறுகின்றன. ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிப்பதே தற்காலத்தில் ஒவ்வொருவரும் தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு மிகச் சிறந்த வழியென்று பகவான் ஶ்ரீ கிருஷ்ண சைதன்யர் 500 வருடங்களுக்கு முன் போதித்தார். ஹரே கிருஷ்ண மந்திரம் உலகத்தின் ஒவ்வொரு நகரத்தையும், கிராமத்தையும் சென்றடையும் என அவர் முன் கூட்டியே கூறியிருந்தார். 1965 ஆம் ஆண்டில் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, அமெரிக்கா சென்று அவருடைய கூற்றை நிறைவேற்ற ஆரம்பிக்க, அவருடைய சீடர்கள் இந்தக் காரியத்தை தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர்.

கேள்வி: மந்திரம் என்றால் என்ன?
பதில்: மந்திரம் என்ற சொல் ஆதிகால சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. மந் (man) என்றால் மனம்; திர (tra) என்றால் விடுதலை. ஆகவே மந்திரம் என்பது மனதை ஸ்தூல வாழ்க்கையின் சகல மன விசாரங்களிலிருந்து விடுதலையாக்க உருவாக்கப்பட்ட உன்னத ஒலிகளின் ஒரு கூட்டமாகும். ஹரே கிருஷ்ண மந்திரம், மகா மந்திரம் அல்லது பெரிய மந்திரம் என அறியப்படும். அதுவே சகல மந்திரங்களினதும் சாரம் ஆகும்.


கேள்வி: ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தம் என்ன?
பதில்: ஹரே கிருஷ்ண மந்திரம், கிருஷ்ணரின் ஒலிப் பிரதிநிதித்துவம் ஆகும். ஆகவே, ஒரு சாதாரண சொல்லின் அர்த்தத்தை ஆராய்வது போல, ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தத்தைப் பற்றி பேச முடியாது. ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தம் அதனுள்ளேயே அடங்கியுள்ளது.
சாதாரண சொற்களைப் பொறுத்தவரை இது உண்மையல்ல. உதாரணமாக "நீர்" என்னும் சொல், "நீர்" எனும் பதார்த்தத்தை விட வித்தியாசமானது. நீங்கள் தாகமாக இருக்கும் பொழுது "நீர், நீர், நீர்" என்று கூறினும் நீங்கள் தொடர்ந்தும் தாகமாகவே இருப்பீர்கள். ஆனால் கிருஷ்ணர் அவருடைய நாமத்தில் இருந்து வேறுபட்டவரல்ல. ஆகவே, நாங்கள் "கிருஷ்ணா" என்று கூறியவுடன் அவர் உண்மையிலேயே தோன்றுகிறார். அவருடைய நாமத்தின் ஒலி அதிர்வில் அவருடைய தன்மைகளான அழிவற்ற தன்மை, அறிவு, ஆனந்தம் என்பவற்றை நாம் அனுபவிக்கலாம். அதுவே ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தமாகும். ஆனால் அதை நீங்கள் உங்கள் புத்தி கூர்மையால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபித்து, அதன் உன்னதமான அர்த்தத்தை நீங்களாகவே அனுபவித்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி: ஜெபம் எனக்கு பலனளிக்கிறது என எப்படி அறிந்து கொள்ள முடியும்?
பதில்: அது தானாகவே வெளிப்படையாகும். நீங்கள் ஒரு நல்ல உணவை உட் கொண்டால், நீங்கள் திருப்தியடைந்தவுடன் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அதேபோல், நீங்கள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிக்கும் பொழுது, அது உங்களுக்கு பலனளிக்கிறது என்பதை எவ்வித சந்தேகமுமின்றி தெரிந்து கொள்வீர்கள். ஹரே கிருஷ்ண  மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நீங்கள் உன்னதமான இன்பத்தை அனுபவிப்பீர்கள்.  உடல் புலன்கள் தரும் இன்பதைவிட  அதி கூடிய அளவு திருப்தியைத் தரும் ஒரு  ஆன்மீக இன்பத்தை பெறுவீர்கள் என வேதங்கள் கூறுகின்றன.  ஆகவே மந்திரம் உங்களுக்கு பலனளிக்கிறது என்பதற்கான முதல் அறிகுறிகள். நீங்கள் கெட்ட செயல்களைத் தரும் சூதாட்டம், மது அருந்துதல், சட்டவிரோத பாலியல் உறவு, மாமிசம் புசித்தல் போன்றவற்றில் அக்கறை இழக்க ஆரம்பிப்பீர்கள். உயர்ந்த இன்பத்தை அனுபவிப்பதன் மூலம் அற்ப ஆசைகளை நீங்கள் மறந்து விடுவீர்கள். ஜெபம் பலனளிக்கிறது என்பதை அப்பொழுது தெரிந்து கொள்வீர்கள்

No comments:

Post a Comment