Sunday, 27 January 2013

கதவு ஜன்னல் வைக்கும் முறைகள்


கதவு ஜன்னல் வைக்கும் முறைகள்

     காடுகளிலும் மலைகுகைகளிலும் வாழ்ந்த மனிதன் காலப் போக்கில் வீடு என்ற ஒன்றை கட்டி வாழ கற்றும் கொண்டான். வீடு கட்டிய மனிதனுக்கு அதை பாதுகாக்க கதவு என்ற ஒன்றை அமைக்கத் தெரியாமல் அதற்கு தட்டி செய்து மறைப்பதும், துணியை திரையாக தொங்க விடுவதுமாக இருந்தான். காலங்கள் முன்னேற முன்னேற மரத்தை அறுத்து அதில் கதவு செய்வதையும் கற்றுக் கொண்டான். சிறிய வீடோ பெரிய வீடோ வீட்டின் உள்ளே உள்ள பொருட்களை பாதுகாக்க அமைக்கப் படுவது தான் கதவு. தற்போதுள்ள சூழ்நிலையில் கால்சவரனுக்காக கூட கொலை கொள்ளை நடக்கிறது என்பதால் நல்ல திடமான கதவுகளை அமைப்பதுடன் அதற்கு பாதுகாப்பாக கிரில் கேட்டையும் அமைத்து கொள்கிறார்கள். சிலர் வீட்டின் வெளியே கேமராவை அமைத்து உள்ளிருந்த படியே வெளியே வரும் மனிதர்கள் யார் யார் என கண்காணிக்கிறார்கள்.

     வாஸ்து ரீதியாக வீட்டிற்கு பாதுகாப்பாக விளங்கும் கதவுகளை எந்த திசையில் அமைத்தால்  சிறப்பாக இருக்கும் என பார்கின்ற போது ஒவ்வொரு திசையின் உச்ச ஸ்தானங்களில் கதவு வைப்பது நல்லது. ஹால், பெட்ரும், கிட்சன், பூஜையறை, பாத்ரூம் போன்ற எல்லாவற்றிற்கும் கதவு வைக்கும் பழக்கம் பெருகி வரும் நிலையில் அந்தந்த அறைகளுக்கும், அந்தந்த உச்ச ஸ்தானங்களில் கதவு அமைப்பது நல்லது.

வடக்கு திசை:

     வடக்கு பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடகிழக்கு பகுதியில் அதிலும் குறிப்பான வடக்கு மத்திய பகுதி முதல் வடகிழக்கு இறுதி வரை உள்ள பகுதியில் கதவை அமைப்பது மிகவும் சிறப்பு. மேற் கூறிய பகுதிகளில் கதவிற் அருகில் ஜன்னலையும் அமைப்பது நல்லது. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை மேற்கு புறத்தில் அமைத்து கிழக்குலிருந்து மேற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும்.கதவு ஜன்னல் போன்றவை வடமேற்கு பகுதியில் அமைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

கிழக்கு திசை

     கிழக்கு  பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடகிழக்கு பகுதியில் அதாவது கிழக்கு மத்திம பகுதி முதல் வடகிழக்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை தெற்கு புறத்தில் அமைத்து வடக்குலிருந்து தெற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும். தென்கிழக்கு  பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.

தெற்கு திசை

     தெற்கு பார்த்து அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான தென்கிழக்கு பகுதியில் அதாவது தெற்கு மத்திம பகுதி முதல் தென்கிழக்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை மேற்கு புறத்தில் அமைத்து கிழக்குலிருந்து மேற்காக திறக்கும்படி அமைக்க வேண்டும். தென்மேற்கு பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.

மேற்கு திசை

     மேற்கு பார்த்த அமைந்துள்ள அனைத்து அறைகளுக்கும் அதன் உச்ச ஸ்தானமான வடமேற்கு பகுதியில் அதாவது மேற்கு மத்திம பகுதி முதல் வடமேற்கு மூலை வரையுள்ள பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. இப்படி அமைக்கும் கதவுகளுக்கு கீலை கதவிற்கு தெற்கு புறமாக அமைத்து, வடக்கிலிருந்து தெற்காக கதவை திறப்பது போல அமைப்பது நல்லது. தென்மேற்கு பகுதியில் கதவினை அமைக்காமலிருப்பது நல்லது.

No comments:

Post a Comment