Saturday, 26 January 2013

மகாபெரியவர் அருளிய கிருஷ்ணாவதாரத் தத்துவம்!

மகாபெரியவர் அருளிய கிருஷ்ணாவதாரத் தத்துவம்!
ஞான ஒளி: ""ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்ற அர்த்தத்தில், "உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான் என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நிழலும் நீரும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் ஒளி அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது.  ÷ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயணத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீகிருஷ்ண பக்ஷம் அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயணம் அவர்களுக்கு இரவு. ஆகையால், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவாகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ணபக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த கிருஷ்ணபக்ஷம் பித்ருக்களுக்கும் இரவாகிறது. அஷ்டமி, பக்ஷத்தின் நடுவில் வருவதனால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீகிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது? ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீகிருஷ்ணாவதாரக் காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.  அவனுடைய பெயரும் "கிருஷ்ணன். "கிருஷ்ணன் என்றால், "கறுப்பு என்று பொருள். அவனது மேனியும் கறுப்பு. இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் (தோன்றுதல்) அவனே ஞான ஒளி. நல்ல காளமேகங்களிடையே மின்னல் மாதிரி, அத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞானஒளியானதால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின் பெருமை பிரகாசிக்கிறது. அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிக்கிறது. அவனுடைய லீலாவிநோதங்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீமத் பாகவத புராணம் சிரேஷ்டமாக விளங்குகிறது.  ÷உடலுக்கு ஒளியளிப்பது கண்; உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக உயிர்களுக்கெல்லாம் ஞானஒளி தருகின்ற கண்ணாக இருப்பவனே கண்ணன். நம் தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமலும் கண்ணனும் ஆகிவிட்டான். அகக்கண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும் உபதேச சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்திக் குளிரவைக்கும் அந்தக் கண்ணனே நம் உலகுக்குக் கண்; கறுப்பினிடையே விளங்கும் ஒளி காட்டும் கண்; அந்த ஒளியும் அவன்தான்! ஸ்ரீகிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து நடித்திருக்கிறான்.  வகை வகையான லீலைகள் ஏன்? உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாக அநேகவிதமான மனப்போக்கை உடையவர்களாக ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும், சூரனும், திருடனும், ஸ்திரீலோலனும், பேதையும், உழைப்பாளியும், கிழவனும், குழந்தையும், யோகியும், ஞானியுமாக இப்படிப் பலவிதமான மனநிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்.  ÷ ஸ்ரீகிருஷ்ணன் நல்லவர்களை மட்டுமன்றி, மற்றோரையும் கவர வேண்டுமென்றே கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். பற்பல போக்கு கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகையான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்து (கவர்ந்து), தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாக்கி, கடைத்தேற்ற வைத்த ஸ்ரீகிருஷ்ணாவதாரமே பரிபூர்ண அவதாரமாகும்

No comments:

Post a Comment