Monday, 11 February 2013

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?


என்னவெல்லாம் இருக்கின்றன
தாய்ப்பாலில்?

உலக அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உணவு என்றால் அது தாய்ப்பால்தான். இதற்கு இணையான பொருள் எதுவும் இல்லை. பிறந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அருமருந்தாக செயல்படுகிறது பிறந்த சிசுக்களுக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் தாய்ப்பாலில் உள்ளது.

அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, இரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது தாய்ப்பாலில் ‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

தாய்ப்பாலில் புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

1 comment:

  1. எந்த குழந்தைக்கும், தாய்ப்பாலில், சீம்பால் கொடுக்கிறார்களோ, அந்தக குழந்தைகளுக்கு மட்டுமே, நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். மற்றபடி தாய்ப்பால் சத்து நிறைந்தவை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

    ReplyDelete