Thursday, 25 April 2013

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!


பணத்தின் பயன்பாடு, அதன் தேவை, அதன் அருமை போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். கல்வி என்பது பல வழிகளிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். அந்த கல்வி கிடைக்க காரணமாக அமையும் பணத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் அறிவுரையாகும்.
தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு கனவு இருக்கும். கல்வி, விளையாட்டு, இசை, மற்றும் இன்னபிற செயல்பாடுகளில் தம்மால் அடைய முடியாததை தம் குழந்தைகளை ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
பள்ளியில் கல்வி கற்பது அறிவு வளர்ச்சிக்கு, விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு. அந்த கல்விக்கும் விளையாட்டிற்கும் தேவையான பணம் பற்றியும் குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு பணத்தின் மீதான அருமை தெரியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பண்டைய காலங்களில் குலகுரு கல்வி முறையில் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்த்தும் விதமான கல்வி கற்பிக்கப்பட்டது சிறிய வயதில் குருவின் ஆசிரமத்திற்கு வந்து தங்கி பயிலும் மாணவன் கல்வி கற்று பெற்றோரிடம் செல்லும் போது அவன் கையாலேயே குருவிற்கு தட்சிணை அளிப்பான். இதுதான் வழக்கம். இதன் மூலம் பணத்தின் அருமையும் அதன் தேவையும் சிறு வயதிலேயே உணர்ந்து கொள்ள முடியும். எனவே இன்றைய கல்வி முறை மாறிவிட்டது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து லட்சம் லட்சமாக கொட்டி படிக்க வைக்கின்றனர். எனவே இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றி கற்பிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது.
எந்த முறைகளில் கற்பிக்கலாம்?
குழந்தைகளின் கையில் பணத்தைக் கொடுத்து எண்ணச் சொல்லலாம். இந்த பணத்தை சம்பாதிக்க எப்படி எல்லாம் போராடி வேண்டியிருக்கிறது எத்தனை மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதையும் குழந்தைகளுக்கு கூறலாம். பணத்தின் மதிப்பையும் அதன் தேவையையும் கதைகள், விளையாட்டுக்கள் மூலம் குழந்தைகளுக்கு புரியவைக்கலாம்.
குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அவர்களின் கையில் பணத்தை கொடுத்து வாங்கி வரச்சொல்லலாம். மீதமுள்ள பணத்தை சேமிக்க கூறலாம்.
குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான தேவையும், செலவும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அவர்கள் எவ்வாறு செலவழிக்கிறார்கள் என்பதை கண்காணிப்பது அவசியம்.
பணத்தினால் ஏற்படும் லாப நஷ்ட கணக்குகளைப் பற்றியும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் எதற்கு செலவழிக்க வேண்டும்? எதற்கு செலவழிக்கக் கூடாது என்பதை குழந்தைகள் உணர்ந்து கொள்வார்கள்.
சில சமயம் குழந்தைகளிடம் இருந்து பணத்தை கடன் வாங்கி சில நாட்கள் கழித்து அதற்கு வட்டியுடன் திருப்பி தரலாம். இதனால் பணத்தை முதலீடு செய்தால் அதன்மூலம் வருவாய் பெருகும் என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அந்த பணத்தை சம்பாதிப்பதைப் பற்றியும், சேமிப்பதைப் பற்றியும் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment