Thursday, 11 April 2013

சேமிப்புக் கணக்குக்கும், நடப்புக் கணக்குக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?


சேமிப்புக் கணக்குக்கும், நடப்புக் கணக்குக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?


சென்னை: பெரும்பாலான மக்கள், ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் போது, "சேவிங்ஸ் அகௌண்ட்" (சேமிப்பு கணக்கு) அல்லது "கரண்ட் அகௌண்ட்" (நடப்பு கணக்கு) ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய அறிவுறத்தப்படும் போது, இதில் எதை தேர்வு செய்வது பொருத்தமானது என்று தெரியாமல் பெரிதும் குழப்பம் அடைகிறார்கள். இவை இரண்டும், பல்வேறு செயல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இரு வேறு கணக்குகளாகும்.

சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசங்களை பார்ப்போம்.
சேமிப்பு கணக்கு
அதன் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே, இது சேமிப்பு நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கணக்காகும். யார் ஒருவரும், தனியாகவோ அல்லது வேறு யாருடனும் கூட்டாகவோ சேமிப்பு கணக்கைத் தொடங்கலாம்.
இவ்வித கணக்குகளில் ஒருவர் தன் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக பொதுத்துறை வங்கியாக இருப்பின் சுமார் 1000 ரூபாயும், தனியார் வங்கியாக இருப்பின், சுமார் 10,000 ரூபாயோ அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையையோ கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
சேமிப்பு கணக்கில் பண பரிவர்த்தனைகள் (ட்ரன்ஸாக்ஷன்கள்), ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற வரையறை உள்ளது. நடப்பு கணக்கோடு ஒப்பிடுகையில் சேமிப்பு கணக்கில் அதிக வட்டி வழங்கப்படுகிறது. ஒரு வருடத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் மேல், செய்யப்படும் பரிவர்த்தனைகள் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும். ஒரு வேளை, நீங்கள் நிறைய பண பரிவர்த்தனை செய்பவராகவோ அல்லது சேமிப்பு கணக்கில் அதிகமாக செக் வழங்குபவராகவோ இருந்தால், உங்கள் பண வரிவர்த்தனைக்கான காரணத்தை அறிந்து கொள்ளவும், உங்கள் வருமானத்தைப் பற்றி கேள்வி எழுப்பவும், வங்கிகளுக்கு அனைத்து உரிமையும் உள்ளது.

நடப்பு கணக்கு
நடப்பு கணக்கு முக்கியமாக வணிகர்கள், நிறுவனங்கள், வணிகக் குழுமங்கள், பொது வணிக ஸ்தாபனங்கள் ஆகியோருக்கானது. இக்கணக்கு ஒரே நாளில் ஏராளமான பண பரிவர்த்தனைகள் செய்வோருக்கு ஏற்றதாகும். இக்கணக்கில் ஏற்றப்படும் தொகைக்கு, வட்டி எதுவும் வழங்கப்பட மாட்டாது. அதே போல் பண பரிவர்த்தனைகளுக்கும், எவ்வித எண்ணிக்கை வரையறையும் கிடையாது.
நீங்கள் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்கும் பொருட்டு, ஊதிய கணக்காகவோ அல்லது ஜீரோ பாலன்ஸ் கணக்காகவோ வைத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் சேமிப்பு கணக்கையே தேர்வு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment