Wednesday, 15 May 2013

வாழைப்பழம்,எண்ணெய்,விளக்கேற்றும் நேரம்


வாழைப்பழம் படைப்பது ஏன்?


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.ஆனால்,வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும்கூட மீண்டும் முளைப்பதில்லை.இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.



அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.அது மட்டுமல்ல தேங்காய்,வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு,கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.ஆனால்,தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.பழம் கொட்டை என்பது கிடையாது.



அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.இதுவே இந்துதர்மத்தின் தனிச்சிறப்பு.
--------------------------------------------------------------------------------------------

எந்த தெய்வத்துக்கு என்ன எண்ணெய்? விளக்கேற்றும் பலன் /திருக்கார்த்திகை தீப

கார்த்திகையன்று வீட்டிலோ அல்லது கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்திலோ, ஊரிலோ எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடு. ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் செய்து இறைவனை வழிபட்டனர். அப்போது, யாக குண்டங்களில் அக்னி எரியும். இதுவே எளிமையாக்கப் பட்டு தீப வழிபாடாக மாறியது. விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. பூஜையறையில் வெள்ளிக்கிழமைகளில் வாசலில் மாக்கோலம் இட்டு, அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, அதனை வீட்டு பூஜையறைக்குள் கொண்டு வந்து வைத்தால் விளக்குடன் மகாலட்சுமியும் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம்.
தீபம் ஏற்றும் முறை

வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
திருத்துங்கள் இவர்களை 

இக்காலத்தில் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவர், பிள்ளைகள் பெருத்து விட்டார்கள். இவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ, பெண்கள் கார்த்திகை விரதம் மேற்கொள்ளலாம். விளக்கு ஒளி இல்லாவிட்டால் வீடு இருண்டுவிடும். அதுபோல, மனவீட்டில் ஒளி இல்லாவிட்டால் உலகத்தில் அநியாயங்களே மிகுதியாக நடக்கும். கெட்ட வழக்கங்களால் மனதை இருளாக்கிக் கொண்டிருக்கும் நம் சொந்தங்கள் திருந்த, ம் போல் ஞான ஒளியை ஏற்றுமாறு முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்வது உசிதம். திருக்கார்த்திகை தொடங்கி, ஓராண்டுக்கு மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் மேற்கொண்டு பலனடையுங்கள்.


விளக்கேற்றும் நேரம் 



சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம்.

விளக்கேற்றும் பலன் 




ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்



விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

எத்தனை விளக்கு ஏற்றுவது




திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம் சிவாம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் இறைவன். ஆனால், நம் மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு அருள்புரியும் நாளே திருக்கார்த்திகை. சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின. ஆறுதீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் சிறுகுழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல,பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறுஅகல்களில் குட்டிக்குழந்தையாக முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறுதீபங்களை வாசலில் வைக்க வேண்டும். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல்தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.




முதல் விளக்கு திருவிழா 
திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றி சம்பந்தர் பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, அவர் ""விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்'' என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.


திருவிளக்கின் சிறப்பு



திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.





அண்ணாமலையார், அபிதகுஜாம்பிகை, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மட்டுமல்ல, திருக்கார்த்திகையன்று திருவிளக்கு ஏற்றி பூஜை செய்யும் போதும் 108 போற்றி சொல்லி வழிபடுகிறோம். இதை 120, 130, 150, 1000 என்றும் வைத்திருக்கலாமே! ஏன் 108க்கு முக்கியத்துவம் தரப்பட்டது தெரியுமா?
மனிதன் ஒரு மணிநேரத்துக்கு 900 தடவை வீதம் 24 மணி நேரத்துக்கு 21,600 தடவை மூச்சு விடுகிறான். இதில் பகலில் 10,800 தடவையும், இரவில் 10,800 தடவையும் மூச்சு விடப்படுகிறது. ஒவ்வொரு தடவை மூச்சு விடும் போதும் இறைவனை நினைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இது சாத்தியமா என்றால் இல்லை. "மாயை' (உலக வாழ்க்கை நிரந்தரமானது என்ற எண்ணம்) என்ற வலையில் சிக்கியுள்ள மனிதன் இறைவனை நினைப்பதில்லை, நினைத்தாலும் அதற்கு ஒதுக்கப்படும் நேரம் குறைவு.
மாயைக்குரிய எண் 8. இந்த மாயையில் இருந்து நம்மை மீட்பவன் இறைவன். நாம் பல வடிவங்களில் வழிபட்டாலும், அவன் ஒரே ஒருவன் தான். ஆக, ஏக இறைவனுக்கும் (ஒன்றுக்கும்) எட்டுக்கும் ( மாயைக்கும்) மத்தியில் நாம் ஒரு சக்தியுமே இல்லாத பூஜ்யமாக இருக்கிறோம். அதனால் தான் 108 என்ற எண் முக்கியத்துவம் பெற்றது. கலியுகத்தில் இறைவனை அடைய 108 போற்றி நிரம்பவே கைகொடுக்கிறது.


திருவிளக்கில் கணபதி... 

கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.


வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

முன்பிறவி பாவம் நீக்கும் தீபம் 

தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ""தீபமங்களஜோதீ நமோநம'' என்று திருப்புகழில் அருணகிரியார் பாடுகிறார். முருகப்பெருமானை அவர் தீபமாக வர்ணிக்கிறார். வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர்.




எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள் 



நன்றி மறப்பது நன்றன்று'' என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர். இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.

திருவிளக்கில் எத்தனை பொட்டு வைக்க வேண்டும் 


திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். பொட்டு வைக்கும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது. மாதக் கார்த்திகைகளே சிறப்புடையது என்றால், கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை குமரனுக்கு மிக மிக முக்கியமானது. இதற்கு அடுத்த நிலையை ஆடிக்கிருத்திகை பெறும்.
இவ்விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி 12ஆண்டுகள் இந்த விரதமிருந்து, எல்லா முனிவர்களிலும் மேலாக எல்லா உலகமும் சுற்றி வரும் வரம் பெற்றார். இவ்விரதநாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டிக்கவசம், சண்முககவசம் படிக்க வேண்டும். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் கேட்பதும் நல்லது.
சிவபெருமான் தன் ஐந்து முகங்களோடு ஆறாவது முகமான அதோமுகத்தையும் சேர்த்து ஆறு கண்களில் இருந்து நெருப்புப்பொறியை தோற்றுவித்தார். அப்பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறுகுழந்தைகள் உருவாயின. அவர்களை வளர்க்கும் பொறுப்பை, கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார். அவர்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். பிள்ளைகள் ஆறுபேரையும் காணவந்த பார்வதி ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள். அப்பிள்ளைக்கு "கந்தன்' என்ற திருநாமம் உண்டானது. "கந்தன்' என்றால் "ஒன்று சேர்ந்தவன்' எனப்பொருள்.
சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம், ""நம் பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள். உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள்'' என்று அருள்புரிந்தார்.
காளிதாசர் இயற்றிய குமாரசம்பவத்தில் இந்த வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்வதி இமவான் மகளாகப் பிறந்தது முதல் குமாரக் கடவுளான முருகனின் பிறப்பு வரை எட்டு சருக்கங்கள் இதில் அமைந்துள்ளன. குமார
சம்பவத்தில் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. தமிழ் புராணங்களில், பத்மாசுரனை ஆட்கொண்ட தகவல் உள்ளது.
""குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்'' என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர். ""கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது'' என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. ""நாம் அறியாமல் செய்த பிழைகளை முருகன் பொறுத்துக் கொள்வார். பிள்ளை போல பிரியம் காட்டுவார்,'' என்று கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. ""என்னைப் பெற்றவன் நீயே! என் பிழைகளைப் பொறுத்துக் கொள்வது உன் கடமை!'' என்று, கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள் முருகனிடம் வேண்டுகிறார். நாமும் கார்த்திகை நன்னாளில் முருகப் பெருமானை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்.

எந்த தெய்வத்துக்கு என்ன எண்ணெய்? 

விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் - நல்லெண்ணெய்

விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன் 


ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.




கார்த்திகைப் பெண்களின் பிள்ளை - முருகன் பற்றி பெரியவர்

பரமசிவனின் நேத்ராக்னியில் இருந்து வந்தவரே குமாரசுவாமி. அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில் தான், சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அம்பாளே சரவணப் பொய்கை. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் முருகனை "காங்கேயன்' என்று அழைத்து வழிபடுகிறோம்.
எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. சஷ்டிப் பெண்களுக்கு அவர் பாலன் ஆனார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகக் கார்த்திகேயர் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கார்த்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட சடாக்ஷரி (சரவணபவ) இவருடைய மந்திரம். மனிதர்களிடமுள்ள காமம் (பெண்ணாசை), குரோதம் (கோபம்), லோபம் ( பற்று), மோகம் (பிற ஆசை), மதம் (ஆணவம்), மாச்சர்யம் (வெறுப்பு) என்ற ஆறு பகைவர்களைக் கொன்று ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே.
ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை "சக்தி சக்தி' என்றே சொல்லுகிறோம். வேதமே முக்கியமாக அக்கினி வழிபாட்டு மதம் தான். அக்கினி என்ற வார்த்தையோடு தான் வேதம் ஆரம்பமாகிறது. உபா சனையில் (இறைவனை வழிபடும் முறை) ஒளபாசனம் என்னும் அக்கினி முறையே முக்கியமானது. இதற்கு சுப்பிரமணியரே அதிதேவதையாக இருக்கிறார்.


திருவண்ணாமலையில் மகரஜோதி ஏற்றுவது ஏன் 


கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பது தான். அகல் விளக்கில் தீபம் ஏற்றும் போது, அதன் பிரகாசம் குறிப்பிட்ட தூரத்துக்கு தான் தெரியும். அதையே மலை உச்சியிலோ, தரையில் சொக்கப்பனையாகவோ ஏற்றினால் அதன் பிரகாசம் நீண்ட தூரம் தெரியும். மலையில் ஏற்றும் தீபம், ஏற்றும் ஊரில் மட்டுமின்றி பக்கத்திலுள்ள பல ஊர்களுக்கும் கூட தெரியும். அத்தனை ஊர்களிலும் இருக்கும் சிறு சிறு ஜந்துக்களின் உடலில் கூட அதன் பிரகாசம் படும். மனிதர் மட்டுமின்றி, சிறு ஜீவன்களும் செய்த பாவம் தீரும். இந்த நல்ல நோக்கத்தில் தான் சொக்கப்பனை, அண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம்இன்னும்பல ஸ்தலங்களில் மலை தீபமாகவும், மற்ற தலங்களில் சொக்கப்பனையும் கொளுத்துகின்றனர்.



கார்த்திகை விளக்கின் தத்துவம் 
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது. ஆம்...தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர்நலம் பேணுவதற்காக தன் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை விளக்கின் தத்துவம். அது மட்டுமல்ல! தீபத்தின் ஒளி மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களின் மீதும், உயிரற்ற பொருட்கள் மீதும் படுகிறது. புழு, கொசு, நிலம், நீர்வாழ் பிராணிகள் மீதெல்லாம் படுகிறது. தீபஒளி எப்படி எல்லார் மீதும் பரவுகிறதோ, அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.



சொக்கப்பனை-பெயர்க்காரணம்


கார்த்திகை தீபம் பார்த்தால் பாவம் நீங்கும். பாவம் நீங்கினால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். "சொர்க்கப்பனை' என்பதே திரிந்து "சொக்கப்பனை' ஆனது. மற்றொரு காரணமும் உண்டு. "சொக்கு' என்றால் "அறியாமை'. இந்த உலக வாழ்வு நிலையானது என்ற அறியாமையில் மனிதர்கள் வாழ்கிறார்கள். அதன் காரணமாக பல பாவச்செயல்களைச் செய்து சொத்து சுகம் சேர்க்கிறார்கள். அந்த அறியாமையை நீக்கும் தீபப் பனையே சொக்கப்பனை என்னும் பெயர் பெற்றது

No comments:

Post a Comment