Thursday 13 June 2013

கொட்டாவி.... இது தாங்க உலகிலேயே மோசமான தொற்று வியாதியாம்!!!

ஆ... என முதலை கணக்கில் யாராவது நம் முன்னால் வந்து கொட்டாவி விட்டால் நாம் என்ன சொல்லுவோம், ‘சோம்பேறி, உன் சோம்பலை என்கிட்டயும் ஒட்ட வச்சுடாதனு'தான... ஆனா, அதுக்கு முன்னாடி நாம அத விட ஒரு கொட்டாவி பெருசா விட்டுடுவோம்ல. உண்மையிலயே, உலகின் மிக வேகமான தொற்று வினை 'கொட்டாவி' தானாம். ஆனால், அது சோம்பேறிகளின் சிக்னல் என்பதெல்லாம் பொய். அதற்கான அறிவியல் காரணாங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்கள் விஞ்ஞானிகள். சூடான முளையை குளிர்விக்கத்தான் நாம கொட்டாவி விடுறோமாம். பல நோய்களுக்கு சுய பரிசோதனையா கொட்டாவி அமையுதுனு பல ஆச்சர்யத் தகவல்களைச் சொல்றாங்க ஆராய்ச்சியாளர்கள்.

புரியாத புதிர்... இருமல், தும்மல், விக்கல் மாதிரி கொட்டாவியும் ஒரு உடலியல் நிகழ்வு தான் என்றாலும், மற்றவைகளைப்போல அறிவியல்பூர்வமான காரணம் மட்டும், இதுவரையில் ஒரு புரியாத புதிர் தான்
கொட்டாவி எண்ணிக்கை... ஆனால், காலத்தைப் பொறுத்து கொட்டாவியின் எண்ணிக்கை மாறுமாம். 'சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு' என்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்!

மூளை சூடாச்சுனா இப்படித்தான்... இந்த ஆய்வின் மூலம், வெப்ப அளவு கொட்டாவி ஏற்படுவதற்கான காரணி என்றும், கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாம்

சீசனுக்கு தகுந்த படி மாறும்... சீசனுக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளதாம். கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நாம் ஏன் கொட்டாவி விடுறோம்னா... கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உஸ்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறதாம்.

நோய்க்கான அறிகுறி... கொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் உதவியிருக்கிறதாம் இந்த ஆய்வு.

சுய பரிசோதனை... அளவுக்கு அதிகமா கொட்டாவி விடுவதன் மூலம், உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதை அறிந்து கொள்ள உதவும் ஒரு முன்பரிசோதனையாகக் கூட எடுத்துக்கொள்ளலாமாம்.

கருவறையிலேயே ஆரம்பிச்சாச்சு... சமீபத்தில், கருவில் இருக்கும் குட்டிப்பாப்பா கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள். மேலும், இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கருவில் இருக்கும் சிசுவானது, ஒரு மணி நேரத்திற்கு நான்கு முறை கொட்டாவி விடுவதாக தெரிவித்துள்ளனர். இப்படிக் கொட்டாவி விடுவதன் மூலம் குழந்தையின் தாடைப் பகுதி நன்கு விரிய வாய்ப்பு கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment