Tuesday, 18 June 2013

பிரசவத்திற்கு பின் குமட்டல் ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

கர்ப்பமாக இருக்கும் போது குமட்டல் ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால் சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னரும் குமட்டலானது ஏற்படும். மேலும் சில பெண்களுக்கு அத்துடன் சோர்வும் இருக்கும். இவ்வாறு இருந்தால், கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் இன்னும் சரியாகவில்லை என்று அர்த்தம். இதனால் தான் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட அறிகுறிகள் எல்லாம், பிரசவத்திற்கு பின்னரும் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் மாற்றங்களும் குமட்டலுக்கு ஒரு காரணமாக உள்ளன. அதிலும் இத்தகைய குமட்டல் பிரசவத்திற்கு பின், எட்டு வாரத்திற்கு இருக்குமே தவிர, அதற்கு மேல் நீடித்தால், அது வேறு ஏதேனும் நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே இந்த நிலையில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. சரி, இப்போது குழந்தை பிறப்பிற்கு பின் குமட்டல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!! * தாய்ப்பால் கொடுக்கும் போது குமட்டல் ஏற்படுவதற்கு காரணம், ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோனின் வெளியீட்டினால் தான். பொதுவாக இந்த மாதிரியான குமட்டல், குழந்தை பிறப்பிற்கு பின் எட்டு வாரங்களில் குணமாகிவிடும். * பொதுவாக தாய்ப்பால் கொடுத்தால், உடலில் நீர்வறட்சி ஏற்படும். எனவே நீர்வறட்சியை தவிர்க்க அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. இதனால் உடல் வறட்சி நீங்குவதோடு, குமட்டலும் தடுக்கப்படும். * கர்ப்பமாக இருக்கும் போது உடல் மற்றும் ஹார்மோனில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். சில பெண்களுக்கு இத்தகைய மாற்றங்கள், பிரசவத்திற்கு பின்னும் சில நாட்கள் தொடரும். இதனால் தான் பிரசவத்திற்கு பின் குமட்டல் ஏற்படுகிறது. * பிரசவத்திற்கு பின்னர், குழந்தை அதிகப்படியான தாய்ப்பாலை குடிப்பதால், ஹார்மோன்களின் அளவு அதிகரித்து, குமட்டலை ஏற்படுத்துகிறது. எனவே இதனை போக்குவதற்கு பெண்கள், சரியான உணவு மற்றும் அதிக அளவு தண்ணீர் குடிப்பது இன்றியமையாதது. * பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்கு பின் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். எனவே அத்தகைய மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மருந்துகளை உட்கொள்வார்கள். ஆனால் அத்தகைய மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகளை உட்கொள்வதாலும், சிலருக்கு குமட்டல் ஏற்படும். * பிரவசத்தின் போது நிறைய இரத்தமானது வெளியேறி, உடலில் இரத்த சோகை ஏற்படும். இவ்வாறு உடலில் இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைவாக இருந்தாலும், குமட்டலானது ஏற்படும். எனவே இத்தகையவற்றை போக்குவதற்கு, இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். * கர்ப்பமாக இருக்கும் போதும், பிரசவத்திற்கு பின் சில வாரங்களுக்கும், பெண்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருக்கும். இதனால் சிறுநீரகப் பாதையில் நோய்தொற்று ஏற்படுத்துவதோடு, காய்ச்சலுடன் கூடிய குமட்டலை ஏற்படுத்தும். இந்த நிலையில் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இவையே பிரசவத்திற்கு பின் குமட்டல் ஏற்படுவதற்கான காரணங்கள்.

No comments:

Post a Comment