Saturday, 15 June 2013

இறந்த பின் எரிப்பது, புதைப்பது எது சரி?

இறந்த பின் எரிப்பது, புதைப்பது எது சரி?


இறப்பு வீட்டுக்கு ஒருவர் புதிதாக போனால் இடுகாடா, சுடுகாடா என்று கேட்கிற பழக்கம் கிராமபுரங்களில் உண்டு. இடுகாடு என்பது புதைப்பது, சுடுகாடு என்பது எரிப்பது.

இறந்தவர்களை தகனம் செய்வதே சரியான முறை என்று கிருபானந்த   வாரியார் சொன்னதாக ஞாபகம்.

ஞானிகள், மகான்கள் போன்றவர்களைதான் அடக்கம் செய்ய வேண்டும். மற்றவர்களை தகனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.

தசரதரை ராமர் தகனம் செய்து, அவரது அஸ்தியை கங்கை கரையில் கரைத்தார் என்றும், ஆதி சங்கரர் அவரது அன்னையை தகனம் செய்தார், பட்டினத்தாரும் அவரது அன்னையை தகனமே செய்தார் என்றும் படித்திருக்கிறோம்.

தேகம் என்ற சொல்லுக்கு தகிக்கப்படுதல் என்று பொருள்.

எறிதனில் இடும் வாழ்வே என்கிறார் அருணகிரி நாதர்.

அக்னியில் வாழ்ந்த (உள்ளிருக்கும் அக்னி சூட்டில்) உடம்பை அக்னியிடமே   தந்து விடுவதே அந்தியேஷ்டிக் கிரியை எனப்படுகிறது.

ஆழமாக இதை பார்த்தோமானால், இந்த உடம்பு ஐம்பூதங்களால் ஆனது. பிறப்பெடுக்கும் ஆன்மா, இந்த உடலை ஐம்பூதங்களிடம் இரவல் வாங்கி வருகிறது.

இந்த பிறவி முடிந்ததும், ஐம்பூதங்களிடமே திருப்பி ஒப்படைத்து விட்டு  தன் பயணத்தை தொடர்கிறது ஆன்மா.

உயிர் உடலை விட்டு பிரிந்தவுடன் காற்றுடன் கலந்து விடுகிறது.

கபாலம் வெடித்தவுடன் மனம் ஈதர் என்னும் வெட்ட வெளியில் கலந்து விடுகிறது.

உடலை இயக்கி, உணவுகளை ஜீரணம் செய்யும் ஜடாக்கினி அக்னியோடு ஒன்றி விடுகிறது.

அஸ்தியை கங்க்கையில் கரைக்கிறோம். மண் மற்றும் நீர் தத்துவங்களை கொண்ட உடல் எரிந்தவுடன், எஞ்சியிருக்கும் சாம்பல் நீரில் கரைந்து நிலத்தில்உறைகிறது.

உடலை எரிப்பத்தின் தத்துவமே இதுதான்.



ஆனால் யோக நெறியில் நின்றவர்களையும், பிறப்பு இறப்பு நிலையை கடந்த ஞானிகளையும் அடக்கம் செய்து அச்சமாதியை வழிபடும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது.

சூச்சும உடலில் இருந்து கொண்டு ஞானிகள் அருளுவார்கள் என்பது நம் நம்பிக்கை.

சிங்கப்பூரில் இறந்தவர்களை எரிக்க வேண்டும் என்பதே அந்நாட்டு சட்டம். காரணம் அங்கே சமாதிக்கு இடம் பற்றாக்குறை.

நம் நாட்டை பொருத்தவரை விபத்தில் அகால மரணம் அடைந்தவர்களையும், அற்பாயுளில் மடிந்தவர்களையும், நோய் வந்து இறந்தவர்களையும், வாழும் வயதில் இறந்தவர்களையும், ஒரு சில கெட்ட திதிகளில் இறந்தவர்களையும் எரித்து விடுகிறோம்.

காரணம் இந்த உலக வாழ்க்கையில் கொண்ட பற்றினால் இறந்த பின்னும் அவர்கள் ஆவிஉடலில் அலைவார்கள்.

அவர்கள் ஆவி உடல் புதைக்கப் பட்டிருக்கும் சமாதியை சுற்றி அலையும். எரித்து விட்டால் அவர்கள் ஆன்மா மேலுலகம் சென்று விடும் என்பது ஒரு நம்பிக்கை.

நன்றாக வாழ்ந்து மறைந்த பெரியோர்களுக்கு இன்னும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காது. அவர்கள் ஆன்ம பக்குவ பட்டிருக்கும். அவர்களால் நமக்கு தொல்லைகளும் இருக்காது. அவர்களை சமாதி வைப்பதில் தவறில்லை.

இது நாம் கடை பிடிக்கும் இம்முறையே இருந்துவிட்டு போகட்டுமே. இதில் என்ன பிரச்சனை.

No comments:

Post a Comment