Wednesday, 12 June 2013

சர்ப தோஷத்திற்கும், கால சர்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டா? இருக்கிறது என்றால் என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: சர்ப தோஷம் என்பது என்னவென்றால் லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது. இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. பிறகு 2இல் ராகு, 8இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது. அதாவது லக்னம், 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் இருந்தால் அதற்குப் பெயர் சர்ப தோஷம். ராசிக்கும் இதுபோல் இருந்தால் அதுவும் சர்ப தோஷம். ராகு, கேது தவிர எல்லா கிரகங்களும் அடங்கிவிடுகிறதென்றால் அதற்குப் பெயர் கால சர்ப தோஷம். 

சர்ப தோஷம் என்பது என்னவென்றால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும். இதனால் சர்ப தோஷயத்திற்கு சர்ப தோஷத்தையே நாம் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால்தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம். 

ஆனால், கால சர்ப தோஷத்திற்கு கால சர்ப தோஷத்தை சேர்க்கக்கூடாது. கால சர்ப தோஷம் என்பது என்னவென்றால், எல்லாவற்றையுமே காலம் கடத்திக் கொடுக்கும். உதாரணத்திற்கு, படிச்சாரு, வேலை கிடைக்கவில்லை. இல்லையென்றால் படித்ததற்கும், வேலை பார்ப்பதற்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரியெல்லாம் கொண்டு போகும். இதேபோல, கூடுதலா 2 மார்க் வந்திருந்தால் அவனுடைய வாழ்க்கை எங்கேயோ போயிருக்கும், இல்லையென்றால் ஐஐடியில் சேர்ந்திருப்பார் என்றெல்லாம் கூறுகிறார்களே இதெல்லாம்தான் கால சர்ப தோஷம். 

அதாவது வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்று கடைசி நேரத்தில் வெற்றியை குறைக்கக் கூடிய அம்சம் இந்த கால சர்ப தோஷத்திற்கு உண்டு. காலமெல்லாம் நினைத்து நினைத்து வருந்துவது என்று சொல்வார்களே, அதுதான் கால சர்ப தோஷம். இதேபோல எல்லாவற்றையுமே தாமதமாக்கும். படித்து முடித்தால் வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைத்தது பிறகு கல்யாணத்திற்கு எவ்வளவோ தேடினார்கள், கடைசியில் ஏதோ ஒன்று சிம்ப்பிளாக பார்த்து முடிக்க வேண்டியதா போய்விட்டது. சரி, குழந்தை அது அதைவிட தாமதம். பிறகு அதற்காக டாக்டர்களிடம் அலைந்து அதன்பிறகுதான் குழந்தை பிறந்தது. இந்த மாதிரியெல்லாம் நடக்கும். இப்படி கால, நேரத்தை விரயமாக்கி, காலத்தைக் கடத்தி தரக்கூடியது கால சர்ப தோஷம். 

இப்படி கால சர்ப தோஷத்தில் இருப்பவர்களுக்கு பிறக்கிற குழந்தைக்கும் கால சர்ப தோஷம் தொடரும். எனவே அந்தக் குழந்தையை வளர்க்கிற விதத்தில் பெற்றோர்கள் கொஞ்சம் வித்தியாசப்பட வேண்டும். குழந்தையை நெருக்குதல் கொடுக்காமல், கடினமாக நடந்துகொள்ளாமல் இயல்பாக திட்டமிட்டு வளர்க்க வேண்டும். இதுமாதிரி கொண்டு வந்தால் கொஞ்சம் தவிர்க்கலாம். இல்லை, கொஞ்சம் அவர்கள் மாறிப் போகிறார்கள் என்றால், அவர்களை விட்டுத்தான் பிடிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு அவர்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்தால் அது கொஞ்சம் சிக்கலாகும். இதுபோன்று சில விஷயங்களெல்லாம் உண்டு. கால சர்ப தோஷ அமைப்பில் பிறந்த குழந்தைகளை பெருந்தன்மையாக கொண்டு செல்ல வேண்டும். அப்பதான் அவர்கள் நன்றாக இருப்பார்கள். 

அதைவிட்டு விட்டு, ஆரம்பத்திலேயே நீ டாக்டராக வேண்டும், எஞ்ஜினியர் ஆக வேண்டும் என்றெல்லாம் அவர்களிடம் எதையும் விதைக்கக் கூடாது. நன்றாக படி, எஎன்ன கிடைக்கிறது என்று பார்க்கலாம். அந்த நேரத்தில் என்ன விருப்பமாக இருக்கிறதோ அதில் சேர்ந்துகொள் என்று பேசி வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு டாக்டராக்குகிறேன் என்று சொல்லி வளர்த்துவிட்டு, கடைசியில் 2 மார்க் சிக்கல் வந்தால், அந்தக் குழந்தைக்கு அப்பா, அம்மாவோட எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை அந்தப் பையனுக்கு வளர ஆரம்பித்துவிடும். கால சர்ப தோஷத்தில் பிறப்பவர்களுக்கு எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதை சந்திக்கிற அளவிற்கு பிள்ளைகளை முன்னெச்சரிக்கையோடு வளர்க்க வேண்டுமே தவிர, இப்படித்தான் ஆக வேண்டும், இதுதான் நல்லது, மற்றதெல்லாம் நல்லதில்லை என்றெல்லாம் வளர்க்கக் கூடாது. 

No comments:

Post a Comment