Friday, 14 June 2013

கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ என்ன செய்யணும்?

கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ என்ன செய்யணும்?

படித்தவர்கள் மத்தியில் இருக்கும் பரவலான கேள்வியே இதுதான்.  

என்ன?

பொருத்தம் பார்க்கனுமா?

சரி... பொருத்தம் என்பது என்ன?

இன்னாருக்கு இன்னாரை சேர்த்து வைத்தால், வம்சம் தழைக்கும், வாழ்வு செழிக்கும்,  பாலும் தண்ணீரும் போல் பாகுபாடில்லாமல் ஒன்றிணைந்து வாழ்வார்கள் என்று கண்டுபிடித்து சொல்வதுதான் பொருத்தம்.  இப்போ சொல்லுங்க பொருத்தம் பார்க்கனுமா, இல்லையா?

இதுக்கு சுற்றி வளைத்து ஏங்க முக்கை தொடணும். பையன் படிப்பு என்ன...உத்தியோகம் என்ன....குடும்ப பின்னணி என்ன... வருமான வாய்ப்புகள் என்ன...பையன் நல்ல  குணவானா... பொண்ணை கடைசி வரை வச்சு காப்பாத்துவானா இது தெரியனும் முதல்ல.

பொண்ணு சைடுல பின்புலம் என்னன்னு பார்த்தா போதாதா.  விட்டுக்கு அடங்கின பொண்ணா, வெளியே சுத்துற பொண்ணான்னு பார்த்தா போதும்.  அதுவும் பட்டதாரியா இருக்கணும், அதோட காசு பணம் இருந்தா, கணவன் மனைவிக்குள்ள ஏன் கருத்து வேறுபாடு வருது.

அப்படின்னா... நீங்க சொல்றததை பார்த்தால் ..... ஒன்னு சேர வேண்டியது ரெண்டு   பட்டதாரிகள்,  ஒன்னு சேரப்போவது ரெண்டு பணக்கார குடும்பங்கள்,  ஒன்னு சேரப்போவது ரெண்டு அந்தஸ்துக்கள் அப்படிதானே.

தப்பு பண்றீங்க ராசா.... தப்பு பண்றீங்க. ஒன்னு சேர வேண்டியது  படிப்போ, அந்தஸ்தோ, கவுரவமோ இல்லை.

மனசு.

இருமனம் கலந்த உறவுதானே திருமணம். அந்த வாழ்க்கையை தீர்மானிக்கிற கிரகங்கள் வலுவிழந்து காணப்பட்டால், குடும்ப வாழ்க்கையில் கொந்தளிப்பு வருமா இல்லையா.

காசும் பணமும், கௌரவமும் செல்வாக்கும் உடைந்த மனசுக்கு ஒத்தடம் போடுமா. எத்தனை நாளைக்கு போடும்.

ஒரு ஜாதகத்தில் தின பொருத்தம் இல்லாவிட்டால் மன வருத்தம் வருவதை தவிர்க்க முடியாது.  காம்போடு பூவு கருத்து வேறுபாடு கொண்ட மாதிரி ஒரு நிலைதான் வரும்.

அதை விடுங்க.  கண பொருத்தம் என்பது என்ன?

அவர்களின் குண நலன்களை குறிக்கும் வார்த்தை.  ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள்.  கணவன் மனைவி உறவில் உரசல் இல்லாமல் இருக்க வேண்டுமானால், அனுசரித்து போகும் அமைப்பும், கடும் சொல் பேசாத நிலையும் வேண்டும்.

இந்த கண பொருத்தம் காலை வாரினால், அன்பு நிலை குறைந்து அதிகார தோரணை அல்லவா வந்துவிடும்.  அவ்வாறு அதிகார தோரணை வந்து விட்டால்,  பணம் ஒன்றிணைக்குமா,  அல்லது பட்டதாரி படிப்பு ஒன்றிணைக்குமா? சொல்லுங்க.

சரி... மகேந்திர பொருத்தம் என்பது என்ன?

சௌபாக்கியங்களை விருத்தி செய்வது. பொன்னும் பொருளும், ஆடை ஆபரணம் மட்டுமல்ல, குடும்பத்தில் சந்தோசம், மகிழ்ச்சியை தழைக்க செய்வது, நிம்மதியை நிலைக்க செய்வது.  இந்த பொருத்தம் வேண்டுமா வேண்டாமா?

அதுதான் போகட்டும்.  ஸ்திரி தீர்க்கம் என்பது என்ன?

ஒரு பொண்ணு புகுந்த வீட்டில் தீர்க்க சுமங்கலியாக இருப்பாளா என்பதை எடுத்துரைப்பது. அவள் தன கணவனுக்கு இனியவளாய், கணவனின் குடும்பத்தோடு ஒற்றுமையாய் வாழ வைப்பது.

அதை விடுத்து பெட்டி படுக்கையோடும், கட்டிய கணவனோடும் தனி குடித்தனம் போவது அல்ல.  போய்... கொஞ்ச நாளில எதிரும் புதிருமா வாழ்வது இல்ல.

அப்பறம் யோனி பொருத்தம்.

காசு பணமும், கௌரவமும் அந்தஸ்த்தும் தராத சந்தோசத்தை தருவது.  அதாவது தேக சாந்தி இருந்தால் தானே மன சாந்தியே வரும்.

புரியலையா?

ஒப்பனா ஒடைச்சு சொல்லவா.  கட்டில் சுகம்ங்க.  ஒரு ஆணையும் பெண்ணையும் உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக ஒன்றிணைப்பது தாம்பத்திய உறவு தான்.

இங்கே கசப்பு வாராமல் காபதுதான் யோனி பொருத்தம்.  ADM  மிஷுனே வீட்டுல இருக்கு, ஆனால் கட்டில் சுகம் கசக்குது சந்தோசம் வருமா? பணம் பாதாளம் வரைக்கும் பாயும்தான் மறுக்கலை. பணத்தால் சாதிக்க முடியாததை இது சாதிக்குமா இல்லையா?  யோசிச்சு பாருங்க.

அடுத்தது ராசி பொருத்தம்.

ஒருவரின் சிந்தனை, செயல்பாடு, இவற்றை குறிப்பது.  ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றிணைந்து வாழ்கையை நடத்தும் போது, எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம்.  அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கூட அடக்கம்.

இந்த ராசி பொருத்தம் சரியாக அமைந்து விட்டால், விட்டு கொடுக்கும் மனோபாவம், புரிந்து கொள்ளும் மனோநிலை தானாகவே வந்துவிடும்.

சரி அதுதான் போகட்டும்.  ராசி அதிபதி பொருத்தம் தெரியுமா?

சந்திரன் இருக்கும் வீட்டுக்கு உரிய கிரகம் நட்பு கிரகமாய் இருப்பது.  பொதுவா வாழ்க்கை என்பது என்ன?

யாரும் யார் பக்கமும் வளைந்து போவது இல்லை.  யாரும் யார் பக்கமும் வளைப்பதும் இல்லை.  பரஸ்பர புரிந்துணர்வு.  இதை சொல்வதுதான் ராசி அதிபதி பொருத்தம். இல்லேன்னா ஒருவர் மீது ஒருவர் குற்ற பத்திரிக்கை வாசிச்சு கிட்டு இருப்பாங்க.

வசிய பொருத்தம்.

அதா... வீட்டுக்கு வீடு வாசல்படியாம். வாசல் படி மட்டும் இல்லை, நிலைப்படி, கதவு, ஜன்னல், எல்லாமே இருக்கு. ஒரு குடும்பம்னா பிரச்சனை எழவே செய்யும்.  குடும்ப அரசியலில் இது எல்லாம் சகசம்தானே சுவாமி.

ஆனால்.... காலையில் எழும் பிரச்சனை மாலையில் வரும் மல்லிகை பூவு அல்வாவோடு மறைந்து போவதுதான் வசிய பொருத்தம்.

ஒன்னு சொல்லவா?

கண்ணு ரெண்டுதாங்க.  பார்க்கிற காட்சி ஒன்னுதானே.  அந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் சிம்மாடு கட்டி தூக்காம விடுறதுதான் வசிய பொருத்தம்.

இன்னொரு பொருத்தம் இருக்கு.  ரஜ்ஜு பொருத்தம். இதைதான் மாங்கல்ய பொருத்தம்னு சொல்வாங்க.

பொதுவா பொண்ணுங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பூண்டு ரசத்திற்கும் புளிக்கிற மாங்காய்க்கும் மட்டும் ஆசை வர்றது இல்லை.  நிறைந்த மாங்கல்ய பலத்தோடு,  பூவும் போட்டுமா கடைசி வரைக்கும் தீர்க்க சுமங்கலியா இருக்கணும்னு ஆசை.

இந்த பாக்கியத்தை தருவதுதான் ரஜ்ஜு பொருத்தம்.

கடைசியா வேதை பொருத்தம்.

கிட்ட தட்ட ராசி பொருத்தத்திற்கு சமம்.  இது எல்லாத்தையும் விட கிரக பொருத்தம் முக்கியம்.  ஜாதக அமைப்பு எப்படி  இருக்கு?  மாங்கல்ய பலம் என்ன? புத்திர பாக்கியம் எப்படி?

ஒருவர் ஜாதகம் மேலே தூக்கும் போது மற்றவர் ஜாதகம் காலை பிடித்து இழுக்காமல் இருக்குமா, என்பதை எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியாய் சொல்வதுதான் ஜாதக பொருத்தம்.

இந்த நச்சத்திர பொருத்தம் 20 % னா,  ஜாதக பொருத்தம் 80 %.  இப்ப சொல்லுங்க பொருத்தம் பார்க்கணுமா இல்லையா?  ஆக கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ என்ன செய்யணும் பொருத்தம் பார்க்கணும்.

No comments:

Post a Comment