Monday, 22 July 2013

திருமணம் பொருத்தங்கள்

திருமணம் என்றாலே உடல் மட்டும் அல்ல. மனங்கள் இரண்டும் இரண்டறக் கலப்பதே ஆகும். மனங்கள் கலப்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. நாம் வேலை பார்க்கும் இடத்தில் நமது சக ஊழியர்களில் சிலர் ஒத்துப்போகாவிட்டாலே எவ்வளவு சிரமம் உள்ளது என எல்லோரும் அறிந்ததே. கணவன் மனைவி உறவு என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அதாவது பயிரை வளர்க்க தேறிய விதைகள் மற்றும் சத்துள்ள நிலமும் இருந்தால் தான் அமோக அறுவடையை எதிர்பார்க்க முடியும். அதேபோலத்தான் இல்லறம் என்கிற பயிரை வளர்க்க ஆணும் பெண்ணும் உண்மையில் தகுதிதானா என அறிய வேண்டும்.

"சம்சாரம் கெட்டால் சன்யாசம்","மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" ஆகிய பழமொழிகள் எந்த அளவு உண்மையானது என்பது மனைவியுடன் வாழும் கணவன்மார்களுக்கு புரியும். ஒருவனுக்கு நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை. அதே பொருத்தம் இல்லாத மனைவியானால் அவன் ஒரு தத்துவ ஞானியாகிறான்.

பெற்றோரும் மாப்பிள்ளையும் பெண்ணைப் பார்த்த உடன் அவள் பணக்காரி, அழகுள்ளவள், படித்தவள், பதவி வகிப்பவள் என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவள் பண்புள்ளவளா? அன்புள்ளவளா? என அறிவது எப்படி? அவளுடன் வெகு நாட்கள் பழகிப் பார்த்தால் தான் தெரியும் அல்லவா? இதை நமக்கு தெளிவாக தெரிவிப்பதுதான் அவளது ஜென்ம ஜாதகம்.

ஒருவர் உண்மையான அன்புள்ளவரா என அறிய அவரது ஜாதகத்தை பார்த்தாலொழிய உடனடியாக தெரியாது. திருமணம் நல்ல முறையில் சிறந்து விளங்க ஜாதகப் பொருத்தம் மிக மிக அவசியமாகிறது. சரி, ஜாதகத்தின் மூலம் எப்படி அறிவது என பார்ப்போமா.

ஒருவரது ஜாதகத்தில் 1.2.4.5.7.9.10 இடங்கள் நல்ல முறையில் அமைந்தால் அவர் ஒரு யோகக்காரகர் ஆகிறார்.

ஆணின் ஜாதகத்தில் சூரியன் 3.6.10.11 ம் இடங்களில் இருந்தால் அவனை நம்பி பெண் கொடுக்கலாம். அந்த ஆண் ஆண்மை பொருந்தியவனாகவும், எதிரிகளை வெல்பவனாகவும், நல்ல தொழில் செய்பவனாகவும், லாபம் பெற்ற செல்வ சேர்க்கை உள்ளவனாகவும் இருப்பான்.

ஆண் ஜாதகத்தில் லக்னமும், வீர்ய ஸ்தானமான 3 ம் இடமும் கெடாமல் இருப்பின் அவனது ஆண் தன்மை உடனடியாக நிரூபணமாகிவிடும்.

ஒரு பெண்ணின் லக்னம் மற்றும் ராசி இரட்டைப்படி ராசியான பெண் ராசிகளில் அமைந்தால், அந்தப் பெண் மிகுந்த அன்பும் பண்பும் நிறைந்தவளாக இருப்பாள். ஒரு பெண்ணின் 4ம் ராசியும், 7ம் ராசியும் நன்றாக அமையப்பெற்றால், அவள் கற்புக்கரசியாக விளங்குவாள். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ம் இடத்தில் சுபகிரகம் இருந்தால் அவள் தீர்க்க சுமங்கலி, அதாவது அவளது கணவருக்கு ஆயுள் பலம் அதிகமாக இருக்கும்.

ஆண் பெண் இருவரின் லக்னங்களும், ஜென்மராசிகளும் சஷ்டாஷ்டகம் பெறக்கூடாது. இருவரின் லக்னங்களும், ஜென்மராசிகளும் நட்பாக அமைந்தால் தம்பதிகள் வள்ளுவர் வாசுகி போல கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

ஜாதகத்தில் 7ம் அதிபதி, 6ல் இருப்பது நோயுள்ள களத்திரம் அமையும். 8ல் இருந்தால் தொடர் வியாதியுள்ள களத்திரம் எனலாம்.

7ல் ராகு இருப்பின் மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை பாதிப்புள்ள மனைவி அமைவாள். 7ம் அதிபதி தீய கிரகங்களுடன் இருந்தாலும், சம்பந்தம் பெற்றாலும், 11ம் அதிபதி வர்க்கோத்தமம் அடைந்தாலும் இரு தார வாய்ப்பை தந்துவிடும்.

ஒருவர் ஜாதகத்தில் சுக்ரன் அதிகமாக வலுக்கவோ கெடவோ கூடாது.

2ம் மற்றும் 7ம் அதிபதிகள் தொடர்புகளும், 7 மற்றும் 9ம் அதிபதிகளின் தொடர்புகளும், சுக்ரன் மற்றும் 9ம் அதிபதிகளின் தொடர்புகளும் அதிர்ஷ்டம் உள்ள கணவன் அல்லது மனைவி வாய்க்கும் அமைப்பாகும்.

7ம் அதிபதி நீச்சம், 7ல் ராகு/கேது, 7ம் அதிபதி 6,8 ல் இருப்பது வரப்போகிற கணவன் அல்லது மனைவியால் பிரயோசனம் அதிகம் இல்லை எனலாம்.

மேற்கண்ட அமைப்புகளை ஜாதகத்தினைப் பார்த்து தெரிந்துக் கொண்ட பின்னர் மணமக்களின் நட்சத்திரங்களைப் பார்த்து பத்து வித பொருத்தங்களை முடிவு செய்தல் வேண்டும்.

No comments:

Post a Comment