Sunday, 1 December 2013

திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான... காரணங்கள் ??

திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான... காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும் திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும் அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும். உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர் “முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”''' என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும் ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது. உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும். தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும். நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.

No comments:

Post a Comment