Sunday 1 December 2013

சிசுபாலன்

பொறுமையின் எல்லை ..

சிசுபாலன் என்பவன் சேதி நாட்டு இளவரசன். அவன் தாய் ஸ்ருததேவா. இவள், ஒருவகையில் கண்ணனுக்குச் சகோதரி முறை.

சிசுபாலன் பிறந்தபோது, அவனுடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், மூன்று கண்களுடனும் நான்கு கைகளுடனும் பிறந்திருந்தான். அவன் பிறந்த வேளையில் தீய சகுனங்களும் உண்டாயின. அவனை ஆற்றில் போட்டுவிடலாம் என்றுகூட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அப்போது ஓர் அசரீரி, கவலை வேண்டாம்! குறிப்பிட்ட ஒருவர் இந்தக் குழந்தையைத் தூக்கும்போது, இவனது அதிகப்படியான அவயவங்கள் மறைந்துவிடும். அந்த ஒருவரால்தான் இவனுக்கு மரணம் நிகழும் என்று ஒலித்தது....

நாட்கள் நகர்ந்தன. ஒரு முறை, கிருஷ்ண பரமாத்மா சேதி நாட்டுக்கு விஜயம் செய்தார். அவர் குழந்தை சிசுபாலனைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டதுமே, அவனது அதிகப்படியான அவயவங்கள் மறைந்தன. அதைக் கண்டு பெற்றோர் மகிழ்ந்தனர். அதேநேரம், அசரீரி வாக்கு நினைவுக்கு வர.. கிருஷ்ணனைக் கைதொழுது வேண்டினாள் சிசுபாலனின் தாய். அசரீரி குறித்து அவரிடம் விவரித்தவள், நீ இவனைக் கொல்லக் கூடாது என்று கேட்டுக்கொண்டாள்.

உடனே கிருஷ்ணர், அப்படி எதையும் என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், உனக்காக ஒரு வரம் அளிக்கிறேன். இவன் எனக்கு எதிராகச் செய்யும் நூறு குற்றங்கள் வரை பொறுத்துக் கொள்கிறேன் என்றார்.

காலம் கடந்தது. யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்தார்.

அப்போது கிருஷ்ணருக்கு முக்கிய மரியாதைகள் செய்யப்பட்டன. தான் விரும்பிய ருக்மிணியை கிருஷ்ணர் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதில், ஏற்கனவே அவர் மீது கோபம் கொண்டிருந்தான் சிசுபாலன். தருணம் வாய்க்கும்போதெல்லாம் கிருஷ்ணரை அவமதித்து வந்தான். இப்போது அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதைகள், அவனது கோபத்தை மேலும் கிளறின.

ஆடு-மாடு மேய்க்கும் இவனுக்கா இப்படி கவுரவம் அளிப்பது? என்று துவங்கி, அடுத்தடுத்துக் கடும் சொற்களால் கண்ணனைச் சாடினான்.

கிருஷ்ணரோ பொறுமையாக இருந்தார். சிசுபாலன் அத்தனை பேசியும் கிருஷ்ணர் மவுனம் காப்பது ஏன் என்று அங்கிருந்த எவருக்கும் புரியவில்லை. நூறாவது முறையாக சிசுபாலன் வசைபாடி முடித்த மறுகணம், கிருஷ்ணரின் சக்ராயுதம் சுழன்று சென்று சிசுபாலனின் தலையைக் கொய்தது...

3 comments:

  1. பொறுமைக்கும் எல்லை உண்டு, என்பதற்கு அழகான விளக்கம் அளித்
    துள்ளீர்கள்.

    ReplyDelete
  2. மிகவும் அமைதியாக இருப்பவர்களை என்றுமே நம்பக்கூடாது, என்பதனையும், இந்த கதை விளக்குகிறது.

    ReplyDelete
  3. சிசுபாலனின் அகம்பாவமும் முடிந்தது.....!

    ReplyDelete