Sunday, 1 December 2013

ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்ட பிறகு நேராக வீட்டுக்கு வரவேண்டும் வழியில் வேறெங்கும் செல்ல கூடாது என்று பெரியவர்கள் சொல்வது ஏன்?

ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்ட பிறகு நேராக வீட்டுக்கு வரவேண்டும் வழியில் வேறெங்கும் செல்ல கூடாது என்று பெரியவர்கள் சொல்வது ஏன்? 

கோயிலுக்கு போனபிறகு வீட்டுக்கு தான் வரவேண்டுமே தவிர மற்ற இடங்களுக்கு போகக்கூடாது என்று எந்த சாஸ்திரமும் தடை சொல்லவில்லை கோயிலுக்கு சென்று வரும் வழியில் யாரோ ஒருவர் சாலையில் நோய்வாய்பட்டு கிடக்கிறார் என்று வைத்து கொள்வோம் அவரை அப்படியே விட்டு விட்டு வீட்டுக்கு வரமுடியுமா? அப்படி வந்தால் அது மனிதாபிமானம் ஆகுமா? என்னை கேட்டால் கோவிலுக்கு போய் இறைவனை வழிபடுவதை விட திக்கற்றவருக்கு உதவி செய்வதையே கடவுள் சிறந்த வழிபாடாக எடுத்துகொள்வார் என்று சொல்வேன்

ஆனாலும் நமது பெரியவர்கள் இப்படி சொல்வதற்கு எந்த காரணமும் இல்லாமலா இருக்கும் எதையும் யோசித்து பேசுவதே நமது பெரியவர்களின் இயல்பாகும் அதனால் இதற்குள்ளும் நல்ல காரணம் மறைந்திருக்க வேண்டும் அதை ஆழமாக சிந்தித்தால் உண்மை தெரியவரும்...

ஆலய வழிபாடு முடித்தவுடன் நமது மனம் குழப்பங்கள் நீங்கி மிகவும் தெளிவாக இருக்கும் நான் படும் கஷ்டங்களுக்கெல்லாம் கடவுள் நிச்சயம் நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கை இதயம் முழுவதும் வியாபித்து இருக்கும் அந்த தெளிவோடும் நம்பிக்கையோடும் நேராக வீட்டிற்கு வந்தால் வீட்டில் காத்திருக்கும் பிரச்சனைகளை சிக்கல்களை மன தைரியத்தோடு எதிர்கொள்ளலாம் அல்லது நம் மனதில் இருக்கும் சாந்தி வீட்டில் உள்ளவர்களையும் பற்றிக்கொள்ளலாம் மாறாக வேறு எங்கோ செல்வோம் என்றால் ஆலயத்தில் பெற்ற நல்ல சிந்தனைகள் தடமாறி போக வாய்ப்புண்டு அதை தவிர்க்கவே நேராக வீட்டிற்கு வாருங்கள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கலாம்

எனவே சாதரணமான நேரங்களில் பெரியவர்கள் சொன்னப்படி வீட்டிற்கு வந்துவிடலாம் தவிர்க்க முடியாத காரியங்கள் நம் முன்னால் இருக்கும் போது வீட்டுக்கு தான் போவேன் என்று அடம்பிடிக்க வேண்டிய அவசியமில்லை சிலர் இந்த மாதிரி விஷயங்களில் வீண் பிடிவாதம் பிடித்து அவசியமான அவசரமான காரியங்களை செய்யாமல் இருப்பது தவறு மட்டுமல்ல அறியாமையும் ஆகும்.

1 comment: