Wednesday, 26 March 2014

தங்க நகை அணிவது அவசியமா?



யாராக இருந்தாலும் உடம்பில் தங்கம் இருக்க வேண்டும் என்று சொ‌ல்‌‌கிறா‌ர்க‌ள். கொஞ்சமாக தங்கம் போட்டு வையுங்கள். குறிப்பாக பெண்கள் மொட்டைக் கழுத்தாக இருக்கக் கூடாது, ஏதாவது ஒரு சின்ன தங்கச் சங்கிலியாவது இருக்கணும்னு சொல்றாங்க. இதை எந்த அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள். அப்படி இல்லையென்றால் என்ன இழப்பு ஏற்படும். போட்டுக் கொள்வதால் என்ன ஆகிவிடும்?



ஆபரண மாலை என்று எங்களுடைய தாத்தா ஒரு நூலில் சொல்லியிருக்கிறார்கள். அதில் உடலில் எந்தெந்த பாகங்களில் என்னென்ன ஆபரணங்கள் அணிய வேண்டும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. காதுக்கு மட்டுமே 6 வகையான ஆபரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. மேல் காது, கீழ் காது, இடைக்காது இதிலெல்லாம் என்னென்ன அணிய வேண்டும் என்று கூட சொல்லப்பட்டிருக்கிறது. காதில் அணியக் கூடியதெல்லாம் அக்குபஞ்சர் முறையில் உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் உண்டு. 

சங்க காலத்தில் பார்த்தீர்களானால், ஆண்கள்தான் மெட்டி அணிந்திருந்தார்கள். ஆண்களுக்கும் மெட்டி அணிதல் உண்டு. வலது காலினுடைய பெரு விரலிற்கு அருகில் உள்ள இரண்டாம் விரலிலும், 3வது விரலிலும் திருமணம் முடிந்த ஆண்கள் மெட்டி அணிய வேண்டும் என்று சங்க காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கிறது. சான்றுகளும் இருக்கிறது. 

இதையெல்லாம் பார்க்கும்போது இயல்பாகவே அணிகலன்கள் மூலமாக உடலினுடைய இரத்த ஓட்டங்கள், எண்ண ஓட்டங்கள் இதெல்லாம் நெறிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ஆபரணங்களை தங்கத்தில் அணியும் போது மேலும் ஒரு புனிதத் தன்மை கிடைக்கிறது. 

தங்கம் சாஸ்திரத்தில் லட்சுமியோட உலோகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கால்களிலெல்லாம் தங்கம் அணியக்கூடாது. மெட்டியெல்லாம் வெள்ளியில்தான் செய்ய வேண்டும், கொலுசும் வெள்ளியில்தான் அணிய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் லட்சுமியின் அடையாளமாகச் சொல்லப்பட்டிருப்பதால் இடைப்பகுதிக்கு கீழ் தங்கத்தை கொண்டு போகக் கூடாது. இடைப்பகுதி வரைக்கும் தங்க ஆபரணங்கள் அணியலாம். 

பொதுவாக வெறும் உடம்போடு இல்லாமல், இப்பொழுது பூஜை செய்யும் போது கூட ஒற்றை வஸ்திரம் தரித்து பூஜை செய்யக் கூடாது. அதாவது இடுப்பில் வெறும் ஈரத் துணி மட்டும் கட்டிக்கொண்டு செய்யக்கூடாது. உள்ளாடை அணிந்து, அல்லது வேட்டி அணிந்து பிறகு துண்டு அணிந்து அந்த மாதிரி இருக்கலாம். ஒற்றை நாடல் எவ்வாறு கூடாதோ அந்த மாதிரி உலோகம் இல்லாமல் இருக்கும் உடம்பும் இல்லாமல் இருப்பது நலம். அதுவும் குறிப்பாக தங்கம் என்பது நாம் செய்யக் கூடிய பணிகளில் ஒரு உறுதித்தன்மை ஏற்படும். தங்கத்திற்கு உறுதித்தன்மை அதிகம், அதேபோல தங்கத்திற்கு மனோபலத்தை தரக்கூடிய சக்தியும் உண்டு. 

வெள்ளி வந்து எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடிய உணர்வைத் தரக்கூடியது. காப்பர் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் ஒரு பிடிவாதத்தைத் தரக்கூடிய உலோகம். தங்கம் தன்னம்பிக்கை தரக்கூடிய உலோகம். அதனால்தான் ஒரு சின்ன மோதிரமாவது விரலில் இருந்தால் நல்லது என்று சொல்வார்கள். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் தங்கத்தில் தாலியைச் செய்தார்கள். மற்ற உலோகங்களில் தாலி செய்யும் பழக்கம் இல்லவே இல்லை. அதனால்தான், ஒரு மஞ்சள் கயிற்றில் ஒரு கிராமோ, இரண்டு கிராமோ தாலியை தங்கத்தில் செய்து அணிந்தார்கள். இதற்கு என்று ஒரு தெய்வீகத் தன்மை உள்ளதாக வேதங்கள் சொல்கிறது. அதனால்தான் சொர்ணம் என்று சொல்கிறோம். அந்த சொர்ணம் இருந்தால் அதனுடைய தன்மையே வேறாக இருக்கும். எடுக்கிற காரியங்களில் வெற்றி, நன்மை இதெல்லாம் கிடைக்கிற தன்மையெல்லாம் அதற்கு உண்டு. 

இது ஆண்களுக்கும் பொருந்துமா?

ஆம், பொருந்தும்.

No comments:

Post a Comment