Wednesday, 26 March 2014

தீராத நோய் யாரையெல்லாம் தாக்கும்?



ஒரு சில குடும்பங்களில் அனைவருக்கும் சர்க்கரை நோய் இருக்கும் அல்லது தோல் சம்பந்தமான வியாதிகள் காணப்படும். பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்தை குறிப்பிட்ட நோய் தாக்குவதற்கு ஜோதிட ரீதியான காரணங்கள் ஏதாவது உண்டா?

பதில்: ஜோதிடத்தைப் பொறுத்தவரை 6ஆம் இடம் சத்ரு ஸ்தானம். அதே இடம்தான் நோய், வழக்குகளுக்கு உரியது. எனவே, லக்னத்தில் இருந்து வரும் 6வது இடம் கொடிய ஸ்தானமாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. 

ஒருவருக்கு ஆறாம் அதிபதியானவர் லக்னாதிபதி அல்லது ராசியுடன் சேர்ந்தாலோ (சந்திரன்) அல்லது லக்னாதிபதி 6ஆம் இடத்தில் இருந்தாலோ அவருக்கு கொடிய நோய் ஏற்படும். லக்னாதிபதி, சந்திரன், பூர்வ புண்ணியாதிபதி ஆகிய மூவரும் கெட்டுப் போய் இருந்தால் தொழு நோய், சர்க்கரை நோய் ஏற்படும். 

ஆறாம் அதிபதி கெட்டுப் போய் இருந்தால்தான் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முடியும். மாறாக 6ஆம் அதிபதி வலுவாக இருந்தால் அவர் எப்போதும் மருந்து, மாத்திரையுடன் காலம் கழிக்க வேண்டும்.

சூரியன்+செவ்வாய் உடன் ராகு அல்லது கேது அல்லது சனி சேர்ந்திருந்து, சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. சுக்கிரன் 6இல் நின்று, அதனுடன் 6ஆம் அதிபதியும் இருந்தால் சிறுவயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படும். 

குறிப்பிட்ட ஜாதக அமைப்பிற்கு பரம்பரை நோய் தாக்குமா? என்பது பற்றிக் கூட ஆய்வு நோக்கில் சில கணிப்புகளை நடத்தியிருக்கிறோம். எப்போதும் மோசமான தசை துவங்கும் போது உணவுக்கட்டுப்பாடு, மருத்துவ கவனிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் போது நோயின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பிக்க முடியும்.

No comments:

Post a Comment