Monday, 28 April 2014

பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ?பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை என்ன ?

ம் பிறந்த நாளின் முக்கியத்துவத்தையும், நட்சத்திரப்படி ஒருவர் தன் பிறந்தநாளை கொண்டாடுவதன் அவசியத்தையும் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஒருவர் பிறந்தநாளன்று செய்யவேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் பார்ப்போம்.
ஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும். எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும்.
பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ?
1) காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
2) புத்தாடைகள் இருப்பின் அவற்றை பெரியோரிடம் தந்து குங்குமம் வைத்து வாங்கி அணியலாம். (ஆடைகளில் தோஷம் ஏதேனும் இருந்தால் குங்குமம் வைப்பது மூலம் அவை நீங்கிவிடும்).
3) பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.
4) அவர்கள் கையால் இனிப்புக்களை பெற்று அதை உண்ணவேண்டும்
5) குல தெய்வத்தின் கோவிலுக்கு செல்லவேண்டும்.
6) ஆலயத்தில் உங்கள் பெயர் ராசி நட்சத்திரப்படி அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் செய்யவேண்டும்
7) வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றவேண்டும்.
8) ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யலாம். (தவிர ரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற மிகுந்த புண்ணியம் தரக்கூடிய தானங்களை கூட செய்யலாம்.)
9) அன்று ஆயுஷ் ஹோமம் செய்வது நன்று.
10) கோ-பூஜை செய்வது சாலச் சிறந்தது. கோ-பூஜை செய்ய இயலாதவர்கள் பசுவுக்கு உணவளிக்கலாம்.
11) புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது புதிய வகுப்பில் சேர விரும்பினாலோ அன்று அதை செய்யலாம்.
12) அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம்.
13) புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
14) வாகனங்கள் வாங்கலாம்
15) புதுமனைப் புகு விழா (கிரஹப் பிரவேசம்) செய்யலாம்.
16) உபநயனம் செய்துகொள்ளலாம்
17) பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அளிக்கும் பரிசுகளை ஏற்றுக்கொள்ளலாம். நல்ல எண்ணத்துடன் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அந்த பரிசு கொடுக்கப்படவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
18) இராமாயண, மகாபாரத, இதிகாசங்களை படிக்கலாம். பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.
பரபரப்பான வாழ்க்கையில் உழல்பவர்கள் அன்றைக்கு அலுவலகத்திற்கு ஒரு நாளோ அறைநாளோ விடுப்பு எடுத்துக்கொண்டால் மேற்கூறியவைகளை பதட்டமின்றி செய்யமுடியும்.
பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை :
1) புதிய மருந்து உட்கொள்வது கூடாது.
2) திருமணம் செய்துகொள்வது கூடாது
3) சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது
4) சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது
5) அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.
6) கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. (அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.)
7) வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
8) முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.
9) தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.
மொத்தத்தில் இறைவன் நம்முள் நுழையும் நாளான நம் பிறந்தநாளன்று கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு அன்றைய தினத்தை ஆத்ம சுத்திக்காக ஒதுக்கிடவேண்டும். இப்படி செய்தால் இறையருளுக்கு பரிபூரணமாக பாத்திரமாவதுடன் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நல்லோர் நட்பையும் ஒருவர் பெறலாம்.
- See more at: http://rightmantra.com/?p=7702#sthash.a1CFQE8k.dpuf

No comments:

Post a Comment