Tuesday, 10 June 2014

உங்கள் ராசிக்கான குருபெயர்ச்சி பலன் 2014

குருப் பெயற்சி பலன்கள்
மேஷ இராசி அன்பர்களே… உங்களுக்கு குரு பாக்கிய-விரயாதிபதி ஆவார். அவர், 13.6.2014 வியாழன் அன்று மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு பிரவேசிக்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு செல்லும் குரு யோகத்தை வாரி வழங்க போகிறார். உங்கள் இராசிக்கு 8-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடங்களை குருபார்வை செய்வதால், தடைபட்ட திருமணம் நடக்கும். தொழில் உத்தியோகம் சிறப்பாக அமையும். விரயங்கள் தவிர்க்கப்படும். பொதுவாக குரு 4-ம் இடத்தில் அமர்ந்தால் உங்கள் இராசிக்கு யோகத்தை கொடுப்பார். எப்படியெனில், திரிகோணாதிபதி கேந்திரத்தில் அமர்ந்தால் வராத பணமும் கைக்கு டக்கென்று வந்து விடும். அதுமட்டுமல்ல, 4-ம் இடத்தை குறிக்கும் வீடு, வாகனம், கல்வி அத்தனையும் அவன் அருளால் உங்களை வந்தடையும். 8-ம் இடத்தை பார்வை செய்வதால், இதுவரையில் இழுத்துக்கொண்டு வந்த வழக்கு பிரச்னை தீர்வுக்கு வரும். உறவினர் வருகையால் நற்செய்தி, கேளிக்கை, ஆடம்பர செலவு அதிகமாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தாயாருக்கு உடல் நலக்குறைவு இருந்தாலும் பிணி நீங்கும். கடந்த ஆண்டு மூன்றாம் இடத்திலிருந்த குரு பகவான் அவ்வளவு திருப்தியான நன்மையை செய்யவில்லை என கவலையில் இருந்திருக்கலாம். தேவையில்லா பகை, விரயம், மனக்குழப்பத்தை கொடுத்து இருந்தாலும், தற்காலம் அவர் 4-ம் இடத்திற்கு வருவதால், இனி உங்களுக்கு நல்ல நேரமே. இருப்பினும் சிறு விஷயத்தை மட்டும் கவனத்தில் வைத்திருங்கள். அது என்னவெனில், வாகனத்தை ஓட்டும் போது மட்டும் சற்று நிதானம் தேவை. கடக குரு உச்சம் பெற்ற குரு. ஆகவே நன்மைகள் உங்களை தேடி, நாடி வரும். குரு பெயர்ச்சி அன்று விநாயகப்பெருமானையும், தட்சிணா மூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள். அன்று காலை முதலில் விநாயகரை வணங்கிவிட்டு, உற்சாகமாக உங்கள் வேலையை தொடங்குங்கள். சோதனைகள் பறந்துவிடும். சாதனைகள் உங்களை வந்தடையும். ஸ்ரீகஜலஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
2 ரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு 13
.6.2014 வியாழன் அன்று, குரு பகவான் பிரவேசிக்க போகிறார். 3-ம் இடம் கீர்த்தி ஸ்தானம் என அழைக்கப்படும் இடமாகும். தற்காலம் 2-ம் இடத்தில் இருக்கும் குரு, கீர்த்தி ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடத்திற்கு செல்வதால் நன்மையா, தீமையா? என்று பட்டிமன்றம் வைத்தால், 3-ஆம் இடம் நன்மை இல்லை என்று சிலர் கூறலாம், எழுதலாம். ஆனால் என்னை பொறுத்தவரையில் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்குரிய குரு பகவான், 3-ஆம் இடத்திற்கு செல்லுவது “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்” என்கிற ஜோதிட விதிப்படி யோகமே ஆகும். ஆகவே உங்கள் இராசிக்கு 8-க்கும், 11-க்கும் உரிய குரு பகவான், 3-ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் இராசிக்கு 7-ம் இடம், 9-ம் இடம், 11-ம் இடங்களை பொன்னான பார்வை செய்வதால், அவ்விடங்கள் மகா பலம் பெற்று வாரி வழங்க இருக்கிறது. 7-ம் இடம், திருமணத்தை குறிக்கும் இடம். 9-ம் இடம் பாக்கியம் கொடுக்கும் இடம். 11-ம் இடம் லாபத்தை கொடுக்கும் இடம். தடைபட்ட திருமணம் நடைபெறும். பழைய சொத்துக்கள் வந்தடையும். மேலதிகாரியின் உதவிகள் தேடி வரும். கடல் கடந்து செல்லும் பாக்கியம் வரும். அன்னியர்கள் நட்பும், அதனால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். அதுமட்டுமல்ல, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல திருப்பமும் வரும். பெற்றோர்களால் உங்களுக்கு சில நன்மைகள் வந்தடையும். திருமணம் ஆனவர்களுக்கு மனைவி மூலமாக ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதரர், சகோதரி இருப்பின் அவர்களால் சில நன்மைகளைப் பெறுவீர்கள். பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கினாலும் கூட, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், வாக்குறுதியை யாருக்கும் வாரி கொடுக்க வேண்டாம். தேவையில்லா செலவு வரும். அதனை கட் செய்யுங்கள். பிறகென்ன அன்பவர்களே… உங்களுக்கு யோகமோ யோகம்தான். ஆனைமுகனையும், தட்சிணாமூர்த்தி மற்றும் குருபகவானையும் வணங்குங்கள். தொட்டது துலங்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
3 மிதுன இராசி அன்பர்களே… 13.6.2014 வியாழன் அன்று உங்கள் ஜென்ம இராசியை விட்டு 2-ம் இடத்திற்கு குரு பகவான் பிரவேசிக்க போகிறார். குரு உங்கள் இராசிக்கு 7,10-க்குரியவன். அதாவது சப்தமாதிபதி, ஜீவனாதிபதி. உங்கள் இராசிக்கு 2-ல் அமரும் குரு, 6-ம் இடம், 8-ம் இடம், 10-ம் இடங்களை பார்வை செய்ய போகிறார். 6-ஆம் இடம் என்பது, கடன், நோய்நொடி அறியப்படும் இடமாகும். அவை தீரப்போகிறது. 8-ம் இடம் வழக்கு தொல்லைகள் அறியப்படும் இடமாகும். வீண் வழக்குகள் விலகப் போகிறது. 10-ம் இடம் தொழில்துறையை பற்றி அறியப்படும் இடமாகும். தொழில், வியபாரம் புத்துணர்ச்சி பெற்று பிரமாதமாக நடக்க இருக்கிறது. சொத்துக்கள் மீது வழக்கு இருந்தாலும் குருவின் பேரருளால் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக இருந்த பங்காளி சண்டைகளும் சுமுக தீர்வுக்கு வரும். தடைபட்ட கல்வி தொடரும். பயணங்கள், அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் அதனால் நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகம் செய்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் விரோதம் செய்யாமல் அனுசரித்து போவது நல்லது. சிலருக்கு உத்தியோக மாற்றம் ஏற்படலாம். 6-ம் இடத்தை குரு பார்வை செய்வதின் காரணமாக, யாருடைய ஜாமீனுக்கும் துணை போக வேண்டாம். தேவையில்லாமல் மற்றவர்களின் பிரச்னையில் தலையிடவும் வேண்டாம். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு 2-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், புத்திர-புத்திரிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பார். பாக்கிய ஸ்தானத்திற்கு விரயஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், பெற்றோரின் உடல்நலனுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டிய காலம் இது. சகோதரஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், அவர்களிடம் மனக்கசப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக 2-ம் இடத்தில் உள்ள குரு நன்மைகளையே செய்தாலும் கூட, அவசரமாக எதையும் சிந்திக்காமல் செய்ய வேண்டாம். அகலகால் வைக்க வேண்டாம். 10-ஆம் இடத்தை குரு பார்வை செய்வது நன்மைதான். ஆனால் பெரும் முதலீடு செய்யாமல் நிதானமாக செய்வது நன்மையை தரும். பிள்ளையாரை வணங்குங்கள். தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி வழிபட்டு முன்னேறுங்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
கடக இராசி அன்பர்களே… 13.6.2014 அன்று, குரு பகவான் உங்கள் இராசியில் வந்து அமரப்போகிறார். (ஜென்ம குரு). “பொதுவாக வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு” என்பார்கள். இதை கேள்விபட்டு பயந்துவிடாதீர்கள். உங்கள் இராசியில் குரு அமரப்போகிறார் என்றால், குரு பகவான் உங்கள் இராசிக்கு யார்?. 9-ஆம் அதிபதிக்குரியவர். அதாவது பாக்கியாதிபதி. கோடீஸ்வரன் உங்களுடன் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும். வணங்காதவர்களும் உங்களுக்கு வணக்கம் சொல்வார்கள். ஆகவே ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகள் வாரி வழங்குவார். காரணம் உச்சம் பெற்றவர், அச்சத்தை போக்குவார். உங்கள் இராசிக்கு 5-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் அதாவது புத்திரஸ்தானம், சப்தமஸ்தானம், பாக்கியஸ்தானம் இவைகள் அனைத்தும் FULL POWER பெற்றுவிட்டது. இழுபறியாக இருந்த பிள்ளைகளின் திருமணம் டக்கென்று நடக்கும். மனைவியால் நன்மைகள் நடக்கும். அல்லது திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் புது வீட்டில் குடிபுக குரு பகவான் அருள் செய்வார். பொதுவாக 5-ம் வீட்டை குரு பார்த்தால், பள்ளத்தில் விழுந்தவன் பல்லாக்கில் அமர்வான். பெரும் சோதனைகளை கண்ட நீங்கள் ஆனந்தமான வாழ்க்கை வாழப்போகிறீர்கள். சிலர் ஜென்ம குரு நன்மை செய்யாது என்று கூறினாலும் கவலைப்படாதீர்கள். அவர் (குரு) பார்வை சுபஸ்தானங்கள் மீது விழுகிறது ஆகவே அந்த ஸ்தானங்கள் உங்களுக்கு நன்மைகளையே செய்யும். பல காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். இந்த குருபெயர்ச்சி சில நேரங்களில் உடல்நலனில் தொல்லைகள் கொடுத்தாலும், கவலைப்படதீர்கள். காரணம் அவன் 6-க்குரியவன். சிறு பிரச்னைகள் கொடுத்தாலும் அவனே 9-க்குரியவனாகவும் இருப்பதால், உடல்நலனில் பெரும் தொல்லைகளை தர மாட்டார். ஸ்ரீதனலஷ்மியின் அருள்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் அத்துடன் குருபகவானையும் வணங்கி வேலையை தொடங்குங்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
சிம்ம இராசி அன்பர்களே… 13.6.2014 வியாழன் அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு வந்து அமர்கிறார். அதாவது கடகத்தில் பட்டா போட்டு அமரப் போகிறார். “அய்யய்யோ 12-ல் குரு இருக்கலாமோ” என்று சிலர்
+பயப்படுவர். பயமே வேண்டாம். அந்த குருபகவான் உங்கள் இராசிக்கு 5-ம் வீ, 8-வீட்டின் அதிபதி. ஆகவே 8-க்குரிய குரு, 12-ல் வந்தால்/ இராஜயோகத்தை கொடுப்பார். அதாவது 8-க்குரியவன் 12-ல் வந்தால்,
“விபரீத இராஜயோகம்”. இனி தொட்டது துலங்கும். உங்களை தூக்கி எறிந்தவர்கள், உங்கள் முன் தலை வணங்குவார்கள். குரு உங்கள் இராசிக்கு 4-ம் இடம், 6-ம் இடம், 8-ம் இடங்களை பார்வை செய்து, அந்த இடங்களை யோகம் பெறச் செய்கிறார். ஆகவே தடைபட்ட மேல் படிப்பு தொடரும். தகர டப்பா வண்டியை ஒரங்கட்டிவிட்டு, புதிய வாகனம் வாங்கும் யோகும் உண்டு. சொந்த வீடு இல்லையே என்ற புலம்பல் தீரும். கடன் தொல்லை பெரும் அளவில் தொலையும். தீராத ரோகம் தீரும். கோர்ட், கேஸ் இவைகளில் வெற்றி கொடுக்கும். இருப்பினும், பூர்வீக சொத்து இருந்தால் அதனால் பிரச்னை வர வாய்ப்புள்ளது. குடும்ப ஸ்தானத்திற்கு லாபத்தில் குரு இருப்பதால், குடும்ப வாழ்க்கை அமையும். தெய்வ தரிசனம் அதிகரிக்கும். பிரயாணங்கள் அதிகரிக்கும். ஜீவனத்திற்கு 7-ம் இடம் பார்வை பெறுவதால், பங்கு வர்த்தகத்தில் யோகத்தை கொடுக்கும். கூட்டுதொழில் லாபம் உண்டு. புத்திரஸ்தானத்திற்கு 4-ம் இடம் குரு பார்வை பெறுவதால், புத்திர- புத்திரிகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். முக்கியமாக கஷ்டங்களை கொடுக்கும் அஷ்டம ஸ்தானம், குருவின் பார்வை பெறுவதால் வரும் கஷ்டங்கள் காற்றோடு ஓடி விடும். உறவினர் வருகையும், அவர்களால் ஆதாயமும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் நடக்கும். பொதுவாக 12-ல் அமர்ந்த குரு, வதைக்க மாட்டார். வாழ வழி வகுப்பார். இது என் கருத்து. ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது. விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி முன்னேறுங்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
கன்னி இராசி அன்பர்களே… 13.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்திற்கு வருகிறார். 11-ம் இடம் லாபஸ்தானம். இனி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். அப்படி ஒரு யோகம் அடிக்க போகிறது. உங்கள் இராசிக்கு 4-ம் வீடு, 7-ம் வீட்டின் அதிபதி குரு. அதாவது சுகாதிபதி, சப்தமாதிபதி குரு பகவான். அவர் உங்கள் இராசிக்கு லாபத்தில் அமர்வதால், தடைப்பட்ட காரியங்கள் கைகூடும். உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 5-ம் இடம், 7-ம் இடத்தை பார்வை செய்வதால், அந்த இடங்கள் சுபிக்ஷம் அடைந்து நன்மைகளை கொடுக்கப்போகிறது. 3-ம் இடம் கீர்த்தி ஸ்தானம். உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரையில் அபகீர்த்தி அனுபவித்த சிலர் பெருமைப்பட பேசப்படுவர். முடியாத காரியமும் முழு முயற்சியால் முடிப்பீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை செய்வதால், பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் இருந்தால் விலகி உங்கள் கைக்கு வரும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்ச்சி நடக்கும். திருமணம் ஆகுமா என்று ஏங்கி கொண்டு இருந்தவர்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். மனைவியால் நல்ல யோகம் உண்டு. பொதுவாக 11-ம் இடம் நல்ல யோகமான இடம். ஆகவே பல வழிகளில் நன்மைகள் நாடி வரும். கடல் கடந்து போகும் பாக்கியமும், வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் கிடைக்கும். இதுவரை தடைபட்ட கட்டட வேலை மட, மடவென எழும். இவ்வளவு நன்மைகள் செய்ய கூடிய குரு பகவான் சில விஷயங்களில் உங்களை கவனமாகவும் இருக்கச் சொல்கிறார். அதாவது வழக்கு இருந்தால் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். நீயா-நானா என ஈகோ பார்க்க கூடாது. உடல்நலனில் கவனம் தேவை. பெற்றோர் வசம் சுமுகமாக இருக்க வேண்டும். கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கிவிட்டு முன்னேற காலடி எடுத்து வையுங்கள். ஸ்ரீகஜலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது. குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
துலா இராசி அன்பர்களே… 13.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 6-ம் இடத்தின் அதிபதியான குரு பகவான், 10-ம் இடத்திற்கு வருவது நன்மையே. அதுவும் உச்சமாக அங்கு அமர்ந்து விடுகிறார். உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்னும் 2-ம் இடமும், சுகஸ்தானம் என்னும் 4-ம் இடமும், ரோகஸ்தானம் என்கிற 6-ஆம் இடத்தையும் குரு பார்வை செய்வதால், அந்த இடங்கள் தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்க வழி செய்ய காத்திருக்கிறது. உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், பெரும் உதவிகள் தேடி வரும். கைக்கு கை பணம் வரும். பொருளாதர வசதி பெருகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியத்தை பேசியே சாதித்துவிடுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். சொந்த வாகனம் வாங்கி அமர்க்களமாக நிறுத்துவீர்கள். கல்வி உயரும். மேற்படிப்பு, பட்டப்படிப்பு பிரமாதமாக தொடரும். 6-ம் இடத்தை பொறுத்தவரையில் கடன், வழக்கு, ரோகம் இவை அனைத்தும் காணாமல் போய்விடும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடக்கும். வீடு, மனை வாங்கும் யோகமும் அமையும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வர வாய்ப்புள்ளது. இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், புத்திர பாக்கியத்தை குருவின் அருளால் கிடைக்கப்பெறுவீர்கள். மனக்குழப்பம் தீரும். சண்டை, சச்சரவு தீரும். பொதுவாக, “பதவி போனவனுக்கு 10-ல் குரு” என்பார்கள். அதை பற்றி துளியளவும் கவலைக்கொள்ளவேண்டாம். காரணம், 3-ம் இடம், 6-ம் இடதின் அதிபதி, கேந்திரத்தில் இருந்தால் யோகத்தையே செய்வார். சோகத்தை கொடுக்க மாட்டார். சரி இவ்வளவு நன்மைகளை செய்யும் குரு பகவான், ஏதாவது பிரச்னையும் தருவாரா? எனக் கேட்டால், ஆம். கூட்டு தொழிலில் கவனமாக இருக்க சொல்கிறார். ஆவேசம், பரபரப்பு அடக்கி வையுங்கள். தேவையில்லா பேச்சு வேண்டாம். சாந்தமாக இருந்தால், சகலமும் உங்கள் வீடு தேடி வரும். ஸ்ரீமகாலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
விருச்சிக இராசி அன்பர்களே… 13.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு குடிபுக போகிறார். “ஓடியவனுக்கு ஒன்பதில் குரு” என்று சிலர் தவறாக கூறுவார்கள். ஓடினவனுக்கு அல்ல, ஓட்டினவனுக்கு என்பதே சரி. அதாவது பல விதமான பிரச்னைகளை ஓட்டிவிட்டவனுக்கு ஒன்பதில் குரு. ஆகவே இந்த குரு பெயர்ச்சியால் பல பிரச்னைகளை ஓட்டி வெற்றி பெற போகிறீர்கள். உங்கள் இராசிக்கு தன, பஞ்சமாதிபதி அதாவது 2-ம் வீடு, 5-ஆம் வீட்டின் அதிபதி, 9-ம் இடத்தில் அமர்வது பிரமாதமான யோகமே. உச்சத்தில் அமர்ந்த குரு உங்கள் ஜென்மத்தை பார்க்கிறார். 3-ம் இடமான கீர்த்தி ஸ்தானத்தை பார்வை செய்கிறார். 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். பொதுவாக நல்ல யோகத்தை ஜாதக கட்டத்தில் சில இடங்கள் கொடுக்கிறது. இந்த 5-ம் இடம் குருவின் பார்வை பெற்றதால், முன்னேற்றத்தில் இருந்த முட்டுகட்டை அகலும். தேவையான வசதி பெருகும். இதுவரை இருந்த அலைச்சல், விரயம், அவப்பெயர் அகலும். உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும். உயர்பதவியும், குடும்பத்திற்கு தேவையான எல்லா வசதிகளும் வந்தடையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். வாடகை வீட்டில் இருந்து, சொந்த வீடு செல்ல வழி வகுக்கும். விரோதிகளும் அடி பணிவர். பொதுவாக நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வசதிகள் பெருகும். பலநாட்கள் ஏன், பல மாதங்கள் கடன்காரர்களிடம் கைகட்டி கொண்டு இருந்த நீங்கள், கடனை தூக்கி எறிவீர்கள். வாகன வசதி உண்டாகும். தந்தை வழியில் சில உதவிகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வசதி பெருகும். புதிய கூட்டாளி வர வாய்ப்புள்ளது. மேல் படிப்பு, பட்டப்படிப்பு தொடரும். வேலை வாய்ப்பு தேடி வரும். சரி, குரு பகவான் என்ன எச்சரிக்கிறார் என்றால், “வரும் பணத்தை பிடித்து வையுங்கள். பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யாதீர்கள்.” இவைதான் 9-ம் இடதின் குரு பகவான் உங்களுக்கு சொல்லும் ஆலோசனை. விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள். ஐஸ்வரிய லஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
தனுசு இராசி அன்பர்களே… 13.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். “குரு அஷ்டமத்தில் வருகிறாரே அகப்பட்டோமடா சாமி” என்று அலற வேண்டாம். குரு உங்கள் ஜென்மாதிபதியும், சுகாதிபதியும் ஆவார். 8-ம் வீட்டில் அமர்ந்தாலும் அவர், 12-ம் இடம், 2-ம் இடம், 4-ம் இடத்தை பார்வை செய்வதால், இந்த இடங்கள் உங்களுக்கு நன்மைகளை வரங்களாக தர காத்திருக்கிறது. விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், “சுண்டைக்காய் கால், பணம் சுமைக்கூலி முக்கால் பணம்” கதையாக இருக்கும். அதாவது நாலணா சுண்டைக்காய் வாங்கி விட்டு, அதை சுமந்து கொண்டு வந்தவனுக்கு 4 ரூபாய் கூலி என்பார்கள். இப்படிபட்ட வீண் செலவு, ஆடம்பர செலவு குறையும். குடும்பத்தில் திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உங்கள் பேச்சு மதிப்பு பெற்று, அதனால் வருமானம் கிடைக்கவும் செய்யும். உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பால் நன்மைகள் தேடி வரும். பழைய இருப்பிடம் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். வாகன வசதி பெறும் பாக்கியம் உண்டு. சகோதர – சகோதரி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப கோர்ட்டில் பிரச்னை இருந்தால் தீரும். பல நாட்களாக இருந்த உறவினர் பகை அகலும். சிலருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. மனைவிக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. சிலர், “அஷ்டம குரு படாதபாடு படுத்திவிடும்” என்பார்கள். கவலையோ, பயமோ அடைய தேவையில்லை. 8-ல் குரு இருந்தாலும், 2-ம் இடம், 4-ம் இடம் ஆகியவை அருமையான பார்வை பெற்று, பவர் ஆகிவிட்டது. ஆகவே பிரச்னைகள் ஐஸ்கட்டி போல் கரைந்து விடும். சரி, 8-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் முன்னேச்சரிக்கைகாக சொல்லும் ஆலோசனை என்ன என கேட்டால், “பயணங்களில் கவனம் தேவை. உடல்நலனில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்பதே ஆலோசனை. விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி, வெற்றிபடியில் கால் வையுங்கள். ஸ்ரீதனலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது. குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
மகர இராசி அன்பர்களே… 13.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு சப்தம ஸ்தானமான 7-ம் இடத்திற்கு குடிபுக போகிறார். இதுவரையில் சப்தமே இல்லாமல் அடங்கி அமைதியாக இருந்த நீங்கள், சப்த நாடியும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியோடு இருக்கப்போகிறீர்கள். 7-ம் இடத்தில் உச்சமாக இருக்கும் குரு பகவான், உங்கள் இராசிக்கு 12-ம் இடம், 3-ம் இடம் ஆகியவற்றின் அதிபதி ஆவர். அதாவது விரயாதிபதி, கீர்த்தி ஸ்தானாதிபதி ஆவார். அவர் சப்தமத்தில் அமர்ந்து உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை செய்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஜென்ம இராசியையும் பார்வை செய்வதால், இந்த இடங்கள் எல்லாம் ரீசார்ஜ் ஆகிவிட்டது. இதுவரை இருட்டறையில் அடைப்பட்டிருந்த வண்டு, ஜன்னலை திறந்ததும் வெளியே பறந்தோடியது போல், பிரச்னைகள் எல்லாம் பஞ்சு போல் பறந்து விடும். உறவினர்களிடம் வாங்கிய கடன் சுமை தீரும். உறவினர் மனகசப்பு அகலும். திருமண வாய்ப்பு சிலருக்கு அமையும். பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பும், திருமணம் அமையவில்லையே என்று கவலைப்பட்ட பெற்றோர் மனதில் சுபச்செய்தி சங்கீதமாக இசைக்கும். வேலை வேலை என்று தேடி திரிந்து அலைந்து கொண்டு இருந்தவர்கள் நல்ல இடத்தில் வேலையில் அமர்வீர்கள். அலைச்சல் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கடன் தொல்லை சற்று குறைந்துவிடும். பெற்றோர் உதவி சிலருக்கு கிட்டும். சிலருக்கு நண்பர்களிடத்தில் விரோதம் ஏற்படலாம், எல்லாம் பணத்தால்தான் என்று சப்தம குரு சொல்லுகிறார். ஜென்மத்தை குருபார்வை செய்வதால், முக்கியமான திட்டங்கள் நிறைவேறும். சரி. 7-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் சொல்லும் ஆலோசனை என்னவெனில், “திருமணமானவர்கள் கருத்து வேறுபாடு இல்லாமல் இருங்கள். நண்பர்களோடும் பகை வேண்டாம். படிக்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட வேண்டாம்“ என்கிறார். கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்குங்கள். அஷ்டலஷ்மிகளின் அருட்பார்வை பெறுவீர்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
கும்ப இராசி அன்பர்களே… 13.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 6-ம் இடமான ரோக ஸ்தானத்திற்கு குடிபுக போகிறார். குரு உங்கள் இராசிக்கு தன, லாபாதிபதி. அதாவது, 2-ம் இடம், 11-ஆம் இடத்தின் அதிபதி ஆவர். 6-ஆம் இடத்தில் குரு அமரலாமா? என்று யோசித்து பயப்பட வேண்டாம். 6-ல் குரு அமர்ந்தாலும், அவர் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும், 2-ம் இடத்தையும் பார்வை செய்கிறார். இதனால் இந்த இடங்கள் பலம் பெற்று யோகத்தை செய்யப்போகிறது. இதுவரை உங்கள் பேச்சை துச்சமாக மதித்தவர்கள் இனி உங்கள் வாக்கை வேத வாக்காக எடுத்து கொள்வர். தன, தான்யம் உங்களை நாடிவரும். பேச்சால் எதையும் சமாளித்து பிரச்னைகளை ஓவர் டேக் செய்துக்கொண்டு போய்விடுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாடு தொடர்பால் நல்ல ஆதாயம் உண்டு. தொழில்துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுவர். இதுவரை காசு இல்லையே என்று கை பிசைந்து கொண்டு இருந்த நீங்கள், கரன்சி எண்ணப்போகிறீர்கள். விரயங்கள் தவிர்க்கப்படும். தேவையற்ற செலவு குறையும். மருத்துவ செலவும் குறைந்து விடும். வீடு, மனை வாங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். கூட்டு தொழில் நல்ல லாபமாக நடக்கும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். உங்களை பார்த்து கேலி பேசியவர்கள் ஆச்சரியம் அடையும் விதமாக உங்கள் வாழ்க்கை நிலை மேலோங்கும். பொதுவாக குரு 6-ல் இருந்தாலும், கவலையே படவேண்டாம். காரணம், குருவின் பார்வைதான் பவராக வேலை செய்யும். முக்கியமாக சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும். சரி. 6-ல் இருக்கும் குரு பகவான், என்ன ஆலோசனை சொல்கிறார்? என கேட்டால், “தேடி வரும் வீண் சண்டையை பெரிதுப்படுத்தாமல் விட்டு விடு. எதிரியே சோர்ந்து சமாதானமாக போய் விடுவான். வீண் வாக்குவாதம் வேண்டாம். உடல்நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்திலும் கவனம் தேவை.” என்பதே குருவின் ஆலோசனையாகும். ஆனைமுகனையும், தட்சிணாமூர்த்தியையும், குரு பகவானையும் வணங்கி வெற்றி நடைபோடுங்கள். ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக நிறைந்திருக்கிறது. குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
மீன இராசி அன்பர்களே… 13.6.2014 உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் அதாவது 5-ம் இடத்திற்கு வந்து குரு பகவான் அமர்க்களமாக அமர போகிறார். அடேங்கப்பா இனி தொட்டது எல்லாம் துலங்கும். திடீர் யோகங்கள் வந்து சேரும். வழி தெரியாமல் அடர்ந்த காட்டில் அல்லல்பட்டவர்களுக்கு ஒத்தையடி பாதை தென்படுவதுபோல, முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். இதுவரையில் தேவையில்லா மனக்குழப்பத்தை கொடுத்து வந்த குரு பகவான், உங்கள் இராசிக்கு 5-ஆம் வீட்டில் அமர்ந்ததும் இனி நீங்கள் யோகசாலிகள்தான். அதுமட்டுமல்ல, உடல்நிலையில் பலசாலியாகவும் திகழ்வீர்கள். ஆம். குரு பகவான், 5-ஆம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ஜென்ம இராசியை பார்க்கிறார். அத்துடன், 9-ஆம் இடத்தை, அதாவது பாக்கிய ஸ்தானத்தையும், 11-ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். இனி என்ன கவலை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நோய்நொடியிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல உடல்நலம் பெறுவீர்கள். வாடகை வீட்டில் படாதபாடுபட்ட நீங்கள், இனி சொந்த வீட்டில் மனமகிழ்ச்சியோடும், குடும்பத்தில் தன, தான்யத்தோடும் வாழ்வீர்கள். நல்லவை அனைத்தும் கிடைக்கும். எப்படி சொல்கிறேன் என்றால், 5-ம் இடம் யோகமான இடம். கார், பங்களா என்று வசதியாக கூட வாழ வழி செய்வார் குருபகவான். பிள்ளைகளின் திருமணத்தை உடனே நடத்தி கொடுப்பார். எதிர்காலம் பற்றி கவலை இல்லை. இனி எல்லாம் நல்ல காலம்தான் என்கிற மனஉறுதியும், தெளிவும் உங்களுக்கு வந்து விடும். தெய்வ அனுகிரகத்தால் பல பிரச்னைகள் தீரும். கவலை எல்லாம் பறந்தோடும். உத்தியோகம், வியபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பொன், பொருள் நன்றாக சேரும். அச்சத்தை போக்குவார் உச்ச குரு. சரி 5-ம் வீட்டில் இருக்கும் குரு, இப்போது உங்களுக்கு சொல்ல விரும்பும் ஆலோசனை என்னவெனில், “குருவாகிய நான் உங்களுக்கு எல்லாம் கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். குழப்பத்தையும், சஞ்சலத்தையும் விடுங்கள். “முடியும்” என்ற எண்ணத்தில் இருங்கள். நீங்கள் முடிசூடா மன்னர்தான்” என்கிறார். விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி நம்பிக்கையோடு வெற்றிபடியில் கால் வையுங்கள். ஸ்ரீஅஷ்டலஷ்மிகளும் உங்களை தேடி வருவார்கள். வளங்களை வரங்களாக தருவார்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment