Friday, 27 June 2014

ப்ரம்ம(பரம) இரகசியம்.

ப்ரம்ம(பரம) இரகசியம்.

எது இரகசியம் ? பிறரிடத்தில் பகரப்படாதது இரகசியம். பேசாமலேயே இருந்தால் ஒன்றும் பகரப்படுவதில்லை. ஆக மௌனம் இரகசியத்தை நன்கு காக்கிறது என்பது புலனாகிறது. மௌனம் எத்தன்மையுடையது ? சப்தம் செய்யாமல் இருப்பது மௌனம். பூரண அமைதியே அதன் தன்மை. எது அசைகிறதோ அது சப்தம் செய்கிறது. பிரகிருதி முழுவதும் அசைகிறது. எனவே பிரகிருதியினிடத்தில் அமைதியில்லை. அதனால் அதனிடம் மௌனமில்லை. ஆனால் மனம் அடங்க அடங்க அது மௌனத்தில் நிலை பெறுகிறது. முற்றிலும் மனம் அடங்கி, ஒடுங்கினால் என்ன நடக்கும் ? ஆன்ம சொரூபம் மட்டுமே எஞ்சி நிற்கும். இந்த ஆன்மா அசையாதது. அதில் சப்தமில்லை. எனவே ஆன்மா மௌன சொரூபமாகும். மேலும் இந்த ஆன்மாவை இன்னதென்று வாய்விட்டுப் பேசி விளக்கிவிட முடியாது. எது விளக்கத்துக்கு வரவில்லையோ அது இரகசியமாகும். ஆகையால் இரகசியங்களுள் முடிவானது மௌனம் அல்லது ஆன்மாவாகும். அதனால் தான் எனது முக நூல் பக்கங்களுக்கு மௌனத்தின்(ஆத்மாவின்) நாதம், மௌனத்தின்(ஆத்மாவின்) குரல், மௌனத்தின் (ஆத்மாவின்) அலைகள் என்று பெயர் சூட்டினேன்.

இந்த ஆன்மா பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். நமக்கு ஐந்து வகையான சரீரங்கள் உண்டு. அவை 1. அன்னமய கோசம், 2. பிராணமய கோசம், 3. மனோமய கோசம், 4. விஞ்ஞானமய கோசம், 5. ஆனந்தமய கோசம் என்பனவாம். அதைப் போல ஐந்து அவஸ்தைகளும் உண்டு. அவற்றை உபாதிகள் என்றும் கூறுவார்கள். அவை 1. நனவு, 2. கனவு, 3. உறக்கம், 4. பேருறக்கம், 5. உயிர்படக்கம் என்பவைகளாம். இந்த ஐந்து அவத்தைகளும் நம் உடலில் அன்றாடம் ஏறியும், இறங்கியும் வருவதை நாம் உள் முகமாக கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

நம் உயிரானது அன்னமய கோசம் என்ற பரு உடம்பைப் பற்றித் தொழிற்பட்டு வினைப்பயனை நுகரும் நிலையே நனவு அல்லது சாக்கிரம் எனப்படும். அதைவிட்டுப் பிராணமய கோசம் என்கிற சூக்கும சரீரத்தைப் பற்றி நினைவுணர்வுகளோடு கூடி, சூக்கும வினைப் பயன்களை நுகரும் நிலை கனவு அல்லது சொப்பனம் எனப்படும். அவ்விரண்டையும் விட்டு மனோமய கோசம் என்கிற சித்தத்தைப் பற்றி நின்று முந்தைய வியாபாரங்களிலிருந்து நீங்கி ஒடுக்கமுறும் நிலை உறக்கம் அல்லது சுழுத்தி எனப்படும். இந்த மூன்றையும் விட்டு விஞ்ஞானமய கோசம் எனப்படும் கஞ்சுக சரீரத்தைப் பற்றி, அறிவு நிகழ்ச்சி சிறிதும் இன்றி உயிர்ப்பு முதலிய செயல்களை மாத்திரம் உடையதாய் நிற்கும் நிலை பேருறக்கம் அல்லது துரியம் எனப்படும். இனிக் கஞ்சுக சரீரத்தின் தொழிற்பாடும் நிகழாமல்ஆனந்தமய கோசம் எனப்படும் காரிய மாயையின் செயல் ஒன்றே நிகழப் பெற்று உயிர்ப்பும் அடங்கி நிற்கும் நிலை உயிர்ப்படக்கம் அல்லது துரியாதீதம் எனப்படும்.

இப்படி அசுத்த மாயை காரியங்களாகிய ஐங்கோசங்களை பற்றி, அவ்வவற்றால் விளங்கும் உணர்வுகளையே தன் இயல்பாகக் கொண்டு விளங்கி, அவத்தை வேறுபாடு அடைவதாய், இவ்வைங் கோசங்களுக்கும் அப்பாற்பட்டதாய் உள்ள தன்னோக்கு உணர்வே ''ஆன்மா'' எனப்பட்டது. எனவே ஆன்ம தத்துவங்கள் இருபத்தி நான்கும், வித்யா தத்துவங்கள் ஏழும் கூடிய ஐங்கோசங்களையும் கடந்து, சிவ தத்துவம் ஐந்தையும் உணர்ந்து, கடந்தால் மட்டுமே ஆன்மாவை உணர முடியும். இதுவே தன்னை உணர்தல் ஆகும்.

தத் என்றால் அது. துவம் என்றால் தன்மை. அதாவது தன் தன்மை மாறாதது தத்துவம். அதாவது படைப்பு காலம் முதல் ஊழிக்காலம் வரை தன் தன்மை மாறாது நிலைத்து நிற்கும் பொருள்கள் தத்துவங்கள். மேலே கூறிய மூவகை தத்துவங்களின் செயலே உயிர்களை உலக போகத்தில் அழுந்துப்படி செய்வது. எனவே இந்தத் தத்துவங்களை உணர்ந்தவன் அதைக் கடந்து ஆன்மாவைக் கண்டு கொள்வான்.

1 comment:

  1. ஆன்மதரிசன விளக்கம் மிகவும் அற்புதம்..

    ReplyDelete