Sunday 20 July 2014

கோயிலின் வாஸ்து வேறு வீட்டின் வாஸ்து

இனி வாஸ்துவுக்கு வருவோம்.கிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து. 

கோயிலின் வாஸ்து வேறு வீட்டின் வாஸ்து வேறு என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அடிப்படை ஒன்றே!அவற்றை மட்டுமே சிற்ப சாஸ்திர சிந்தாமணி என்ற நூலில் 

பழங்கால கிழக்குப் பார்த்த சிவன் கோவிலுக்குச் சென்றால்,உள்ளே நுழைந்தவுடன் இடது கைப்பக்க மூலையில் மடப் பள்ளி உள்ளது.(அதுவே சமையலறை வைக்க உகந்த இடம். அக்னி மூலை என்றழைக்கப்படும் தென் கிழக்கு மூலையே அது),அதில் கிழக்கு நோக்கி நின்று சமையல்காரர்கள் சமைக்கிறார்கள்.வீட்டிலும் அது போலவே மனையாளும் கிழக்கு நோக்கி நின்று சமைக்கட்டும். 

பிறகு பிரகாரம் சுற்றி வரும் போது கன்னி மூலையில் கணபதி(தென் மேற்கு மூலையில்) உள்ளார்.அவர் கனமானவர்,கண நாதர்,பரிகார தேவதைகளில் உயரமான கோபுரம் கொண்டவர்(கனமான மேல்நிலைத் தொட்டி,மாடிப் படிக்கட்டு தென்மேற்கு மூலையில் அமையுங்கள்,வீட்டிலேயே மிக உயரமான இடமாக இது அமையட்டும்)

அடுத்து அமைந்துள்ளது முருகன் சன்னதி அமைந்துள்ள வாயு மூலை,சிவன் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தது வாயு பகவான்தான்.சம்பந்தம் புரிகிறதா!இந்த மூலை கன்னிமூலையை(தென்மேற்கை) அடுத்த உயரமாக அமையலாம்.கன்னி மூலை தோதாக அமையவில்லையானால் இங்கே மாடிப்படிக்கட்டு அமைக்கலாம்.


அடுத்து தீர்த்தத் தொட்டி,தண்ணீர் விழுவது கிழக்கானாலும் வெளியேறுவது வடகிழக்குத் திசையில்தான் வெளியேறுகிறது.அது போல வடகிழக்குத் திசை பள்ளமாக இருந்தால்தான் வடக்கு, கிழக்குத் திசையில் இருந்து வரும் காந்த சக்தியை தேக்க முடியும்.எனவே கிணறு,ஆழ்துளைக் கிணறு, கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, ஆகியவை அமைக்கலாம்.இந்தத் திசையே ஈசானியம் என்று அழைக்கப்படும் திசை.


மூலைகளில் கழிவறை அமைக்க வேண்டாம்.அவை தேவதைகளின் இருப்பிடம்.அது போல மனையின் நடுப்பகுதி பீஜ ஸ்தானம் என்று பெயர் அந்த இடத்தையும் முக்கியத்துவம் கொடுங்கள். கழிவறைகளை வீட்டின் கிழக்கு அல்லது மேற்குப் பகுதியில் அமையுங்கள்.வீட்டின் ஈசானியத்தை எவ்வளவுக்கெவ்வளவு திறப்பாக வைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சூரிய சக்தியும்,காந்த சக்தியும் உள்ளே வரும்.அது வீட்டின் மூன்றில் ஒரு பங்கு இருந்தால் நல்லது. அல்லது மூன்றில் ஒரு பங்கில்,மூன்றில் ஒரு பங்காவது காலியாக வைக்க வேண்டும்.


வீட்டின் ஈசானியத்தில் வாசல் வைப்பது, வடக்கு, கிழக்குத் திசைகளில்,சன்னல் வைப்பது போன்றவை சூரிய சக்தியும்,காந்த சக்தியும் உள்ளே வர ஏதுவாக இருக்கும்.தென்மேற்கு மூலையான,கன்னி மூலையில்(அல்லது தெற்கு,மேற்கு திசைகளில்),பரண் அமைப்பது,கனமான பொருட்களை வைப்பது,அந்தத் திசையை மூடுவது போன்றவை சூரிய சக்தியும்,காந்த சக்தியும் வீட்டின் உள்ளேயிருந்து வெளியே போகாமல் தடுக்கும்.


பீரோ,பணம் வைப்புப் பெட்டி ஆகியவற்றை தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி வைப்பது இந்தக் காரணத்துக்காகவே.வடக்கு குபேரன் திசை எனவும் அங்கிருந்து செல்வம் வடகிழக்காக உள்ளே வந்து வெளியேறும் திசையான தென்மேற்கில் பணப்பெட்டியை வைத்து பிடித்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.
பரமாணு என்பது உலகங்கள் எல்லாம் நிறைந்து இருக்கும் ஒன்று.இதையே ரெய்-கி ல் குணமளிக்க ரெய்-கி ஹீலர்கள் உபயோகிக்கின்றனர்.அது பற்றி மற்றொரு பதிவில் இடுகிறேன்.இந்த பரமாணுக்கள் நிலத்தில் வந்து குவியும் நேரமே வாஸ்து புருஷன் எழுந்திருக்கும் நேரமாக சித்த புருஷர்களும்,நம் தமிழர் விஞ்ஞானமான சிற்ப சாஸ்திர சிந்தாமணியில் குறிப்பிடுகின்றனர்.

இந்த பரமாணுவே இயங்கு சக்தியாகவும், இயக்க சக்தியாகவும்,(கிரியா சக்தி, KINETIC ENERGY ) , நிலைச் சக்தியாகவும்(இச்சா சக்தி,POTENTIAL ENERGY ), திகழ்கிறது. இவையிரண்டையும் உணர்வது ஞானசக்தி(WISDOM). முருகன் (ஞான சக்தி),வள்ளி (இச்சா சக்தி),தெய்வானை(கிரியா சக்தி).

மேற்கூறிய இவற்றை வடிவங்களில் கொடுத்தால் நம் மக்கள் புரிந்து ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்கள் என்றுதான் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.இது போலவேதான் ராசி மண்டலங்களையும் அந்தந்த வடிவங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

அஸ்வினி(முழுவதும்),பரணி(முழுவதும்),கார்த்திகை(முன் கால் பகுதி மட்டும்) சேர்ந்தது மேஷம்(ஆட்டின் தலை வடிவில் இருக்கும்) இது ஒரு நட்சத்திரக் கூட்டமே இந்த வடிவத்தில் இருப்பதால் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.இது 30 பாகை அளவில் இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பே.இது போல பனிரெண்டு ராசிகளுக்கும் சேர்த்து 30*12 = 360 பாகைகள் கொண்டது ஒரு வட்டம்.

ஒரு கதையை இங்கே கூற வேண்டும் அகத்தியர் என்று குறுமுனி இருந்தார் எனவும்(இவர் பதிணெண் சித்தர்களில் ஒருவர்) அவர் ஏழு கடல்களையும் ஒரு கையில் எடுத்துக் குடித்தார் எனவும்,அவர் மனைவி லோபா முத்திரை எனவும் கதையாக கூறியுள்ளனர்.

பெரியது என்ன என்று முருகன் ஔவையாரிடம் கேட்க அவர் கூறிய பாடல் இதோ

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ, நான் முகன் படைப்பு!
நான்முகனோ, கரிமாலுந்தியில் வந்தோன்!
கரிய மாலோ, அலைகடல் துயின்றோன்!
அலைகடல் குறுமுனி யங்கையில் அடக்கம்!  
குறுமுனியோ, கலசத்திற் பிறந்தோன்!
கலசமோ, புவியிற் சிறுமண்!
புவியோ, அரவினுக் கொருதலைப் பாரம்!
அரவோ, உமையவள் சிறுவிரன் மோதிரம்!
உமையோ, இறைவர் பாகத் தொடுக்கம்!
இறைவரோ, தொண்டர் உள்ளத் தொடுக்கம்!
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!
ஔவையார்

நீல நிறத்தில் கொடுத்துள்ளவைகள் அகத்தியரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள விடயங்கள்,கவனியுங்கள்.  
கதையில் உள்ளபடியே லோபாமுத்ரா நட்சத்திர மண்டலம் அகத்திய நட்சத்திர மண்டலத்தையே சுற்றிச் சுற்றி வருகிறது.கணவனைத்தானே மனைவி சுற்றுவாள்.அப்போது அகத்தியரின் மனைவி லோபாமுத்திரை.இப்படிச் சொன்னால் உங்களுக்கு மறக்காதுதானே!

மேலும் அகத்தியருக்கு கும்ப முனி என்றும் பெயர்.
அகத்திய மண்டலம்,கும்ப ராசியும்,சூரியனும் ஒரே நேர் கோட்டில் வரும்போது ஏழு கடல்களிலும் நீர் மட்டம் குறைகிறது என்று இப்போது புவியியல் நிபுணர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.எனவே தமிழர்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டார்கள், என்பதை நிரூபணம் செய்ய இதைக் கூறவில்லை.நம் முன்னோர்கள் கூறிய கதைகளின் மூலம் எதைக் கூற விரும்புகிறார்கள் என்று நாம் ஆராய்ச்சி செய்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு மக்களை சிந்திக்கத் தூண்டுவதே எனது பதிவுகளின் நோக்கம்.தவிர மூடத்தனமாக பழக்க வழக்கங்களை அப்படியே கடைப் பிடிக்காமல் ஆராய்ச்சி செய்து பொருள் புரிந்து பின் கடைப் பிடித்தால் அதில் தவறுகளும் நேராது.எதற்கு கவனம் கொடுக்க வேண்டும் என்பதும் புரியும்
வாஸ்து புருஷன் நித்திரை விட்டு எழுந்தருளும் காலங்கள்.


இந்தப் பதிவை படிக்கும் முன்னர் சித்தர் விஞ்ஞானம் பாகம்(4) பதிவை ஒரு பார்வை பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.அப்போதுதான் இந்தக் கணக்குகள் புரியும்.


சித்திரை மாதம் 10ந் தேதி (5 நாழிகை) காலை 8மணி முதல் 9 1/2 வரை (3 3/4 நாழிகை=ஒன்றரை மணி நேரம்=ஒரு முகூர்த்தம்),


வைகாசி மாதம் 21ந் தேதி (8 நாழிகை)காலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம்,


ஆடி மாதம் 11 ந் தேதி (2 நாழிகை) காலை 6 மணி 48 நிமிடம் முதல் 8 மணி 18 நிமிடம் வரை,


ஆவணி மாதம் 6 ந் தேதி (10 நாழிகை) காலை 10 மணி முதல் நண்பகல் 11 மணி 30 நிமிடம் வரை,


ஐப்பசி மாதம் 11 ந் தேதி (2 நாழிகை) காலை 6 மணி 48 நிமிடம் முதல் காலை 8 மணி 18 நிமிடம் வரை,


கார்த்திகை மாதம் 8 ந் தேதி (10 நாழிகை) காலை 10 மணி முதல் நண்பகல் 11 மணி 30 நிமிடம் வரை,


தை மாதம் 12 ந் தேதி (8 நாழிகை)காலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரை,


மாசி மாதம் 22 ந் தேதி (8 நாழிகைகாலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரை,


பங்குனி மாதம் 22 ந் தேதி (8 நாழிகைகாலை 9மணி 20 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரை,


வாஸ்து புருஷன் விழித்திருக்கும் காலம் ஆகும்.

வாஸ்து புருஷன் எழுந்திருந்து மீண்டும் உறங்கப் போகும் நேரமே வாஸ்து நேரம் என்றழைக்கப்படுகிறது. வாஸ்து புருஷன் எழுந்து மீண்டும் உறங்கப் போகும் நேரத்தை ஐந்தாகப் பிரித்துள்ளார்கள்.


வாஸ்து புருஷன் எழுந்தவுடன்

(1)தந்த சுத்தி(பல் விளக்குவது)(பாகம் 1)
(2)ஸ்நானம்(குளிப்பது)(பாகம் 2
(3)பூஜை புனஸ்கார இறைவழிபாடு(பாகம் 3)
(4)உணவுண்ணல்,ஊர் விசாரணை(பாகம் 4)
(5)தாம்பூலம் தரித்தல்(பாகம் 5)


இந்த வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள ஐந்து பிரிவினுள் கடைசி இரண்டும் வாஸ்து செய்ய உகந்தது. அவை இரண்டும் 
ஊர் விசாரணைபாகம் 4 ),

தாம்பூலம் தரித்தல் பாகம் 5 ).


அதாவது எழுந்து உறங்கப்போகும் கால அளவான 3 3/4 நாழிகையில் (அதாவது ஒன்றறை மணி நேரமான ஒரு முகூர்த்தம்,அதாவது 90 நிமிடம்,அல்லது 1 1/2 மணி நேரம்)கடைசி ஐந்தில் இரண்டு பாகமான



3.75 நாழிகை /5 பாகம் = 0.75 நாழிகை/ஒரு பாகத்துக்கு


எனில் இரண்டு பாகத்துக்கு =  0.75 * 2 = 1 1/2


1 1/2 நாழிகை,அதாவது 1.5 நாழிகை * 24 நிமிடங்கள் = 36 நிமிடங்கள்


அல்லது


மொத்த வாஸ்து கால அளவு 90 நிமிடங்கள்/5 பாகம் = 18 நிமிடங்கள் ஒரு பாகத்துக்கு எனில்


கடைசி இரு பாகம் ஊர் விசாரணை(பாகம் 4), தாம்பூலம் தரித்தல் பாகம் 5 )

 2 * 18 = 36 நிமிடங்கள்


இந்த கடைசி 36  நிமிடமே வாஸ்து செய்ய உகந்தது.அதாவது வாஸ்து நேரக் கடைசியில் இருந்து 36 நிமிடங்கள் முன்னால் ஆரம்பித்து வாஸ்து செய்ய வேண்டும்..

No comments:

Post a Comment