ஐந்தாவது இடத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால்?
ஜோதிட சாஸ்திரப்படி ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. எனவே, அங்கு செவ்வாய், சனி சேர்க்கை நடைபெறாமல் இருப்பது நல்லது.
5இல் செவ்வாய் இருப்பதை பழங்கால ஜோதிட நூல்கள் அவ்வளவு சிறப்பாக குறிப்பிடவில்லை. “ஐந்தினில் இரவித் திங்கள் ஐங்காரகன் அமர்ந்திருக்க” என்ற பாடலில் 5ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் அல்லது சந்திரன் இருந்தால் அவ்வளவு நல்லதல்ல என்பதே அதன் பொருள், இதனால் குழந்தை பேறு பாதிக்கும்.
குறிப்பாக ஐந்தில் செவ்வாய் இருந்தால் தீவிரவாத எண்ணங்கள் மேலோங்கியிருக்கும். நான் இங்கு குறிப்பிடுவது நாட்டிற்கு எதிரான தீவிரவாதம் அல்ல. அதாவது எந்த ஒரு செயலையும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள், பொறுமையில்லாமல் இருப்பது போன்ற குணங்கள் அதிகம் காணப்படும். குழந்தைப்பேறு கிடைப்பதில் தடைகள் ஏற்படும்.
ஐந்தில் செவ்வாய், சனி இணைந்திருந்தால் கெடு பலன்களே அதிகம் ஏற்படும். தாய் மாமனுக்கு ஆகாது. அந்தக் குழந்தை பிறந்த உடனேயே தாய் மாமனுக்கு பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள் ஏற்படும். தாய்வழி உறவுகள் துண்டிக்கப்படுதல், மனத்தாங்கல்கள் ஏற்படும். பிறப்புறுப்பு தொடர்பான நோய்கள் அடிக்கடி ஏற்படும். ஆணாக இருந்தால் விதைப்பகுதி பாதிக்கப்படலாம். இதனால் குழந்தைபேறு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும்.
அதே நேரத்தில் சில லக்னங்களுக்கு 5இல் செவ்வாய் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும். உதாரணத்திற்கு கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 5இல் செவ்வாய், சனி அமர்ந்தால் பல வேதங்களை அறிந்தவராக அவர் திகழ்வார். வேத நூல்கள், உபநிடங்களுக்கு விரிவுரை, தெளிவுரை எழுதும் தகுதியைப் பெற்றிருப்பர்.
அவர்களுக்கு அனைத்து வகையிலும் திறமைமிக்க புதல்வர்கள் பிறப்பார்கள். அழகு, அறிவு, மதி நுட்பம் ஆகியவை அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அபரிமிதமாக இருக்கும். எனவே கன்னி லக்னத்திற்கு மட்டும் 5இல் செவ்வாய், சனி நற்பலன்களை அளிக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.
மற்ற ஜாதகர்களுக்கு 5இல் செவ்வாய், சனி இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நல்ல ஆதிபத்தியம் உள்ள குரு பார்த்தால் கெடு பலன்கள் குறையும்.
பரிகாரம்: செவ்வாய், சனி சேர்க்க பெற்றவர்கள் ரத்த தானம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும். அதேபோல் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு முதலுதவி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.உயிர்ப்பலியை எதிர்க்கும் பிரசாரங்கள், அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படலாம்.
No comments:
Post a Comment