Thursday, 13 November 2014

ஆபத்தும் தீர்வும்!

ஆபத்தும் தீர்வும்!
தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்தியா 2030-ஆம் ஆண்டு வரை சுமார் ரூ.275 லட்சம் கோடி செலவழிக்க வேண்டியிருக்கும் என்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் உலகப் பொருளாதார அமைப்பு (வேர்ல்டு எகனாமிக் ஃபோரம்) எச்சரித்துள்ளது.
இதில் ரூ.130 லட்சம் கோடி இதய நோய்களுக்காகவும், ரூ.60 லட்சம் கோடி மன நோய்களுக்காகவும் செலவிட வேண்டியிருக்கும் என உலகப் பொருளாதார அமைப்பும், ஹார்வர்டு பொது சுகாதாரத்துக்கான கல்வி நிறுவனமும் (ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்) இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இந்தியாவின் 2 ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் (ஜி.டி.பி.) விட 2 மடங்குக்கும் அதிகமாகும்.
உலகம் முழுவதும் உயிரிழப்பவர்களில் 63 சதவீதம் பேர் தொற்றா நோய்கள் காரணமாக இறக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் (வேர்ல்டு ஹெல்த் ஆர்கனைசேஷன்) அறிக்கைப்படி இந்தியாவில் உயிரிழப்பவர்களில் 60 சதவீதம் பேர் தொற்றா நோய்கள் காரணமாக இறக்கின்றனர்.
இந்தியாவில் 2014-இல் இதுவரை இறந்தவர்களில் இதய நோய்கள் காரணமாக 26 சதவீதம் பேரும், மூச்சுக் குழல் பிரச்னை காரணமாக 13 சதவீதம் பேரும், புற்றுநோய் காரணமாக 7 சதவீதம் பேரும், சர்க்கரை நோய் காரணமாக 2 சதவீதம் பேரும் இறந்துள்ளனர்.
சுகாதாரமற்ற உணவு உள்கொள்ளுதல், தேவையான சத்துள்ள உணவு சாப்பிடாமல் இருத்தல், உடற்பயிற்சி இன்மை, புகையிலை போடுதல், மது அருந்துதல், நகர வாழ்க்கை போன்றவையே இந்தத் தொற்றா நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே ஆண்டுதோறும் மது விற்பனை அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்போது ரூ.24,500 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகிறது.
கிராமங்களில் விவசாய விளை நிலங்கள் மனைகளாக்கப்பட்டு வருகின்றன. விவசாயம் மேற்கொள்ள அடுத்த தலைமுறைக்கு ஆர்வம் குறைந்து வருவதால் நகரத்தை நோக்கி படையெடுக்கின்றனர். நகர வாழ்க்கை மன அழுத்தத்தை அதிகமாக்கி நோயில் தள்ளுகிறது.
தொலைக்காட்சி விளம்பரங்கள் காரணமாக, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களின் விற்பனை கற்பனைக்கெட்டாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. நவநாகரிக உணவு வகைகளான பீட்சா, பர்கர் போன்றவை இளைஞர்களின் பிரதான உணவாக மாறியுள்ளன.
"ஒயிட் காலர் ஜாப்' என்ற அழைக்கப்படும் உடை களையாத அலுவலகப் பணிகள் காரணமாகவும், கிரிக்கெட், கால்பந்து போன்றவற்றையும்கூட கணினியிலேயே விளையாடிவிடுவதாலும் பெரும்பாலானோருக்கு உடற்பயிற்சி என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. நோய்க்கு ஆளாகி மருத்துவரிடம் செல்லும்போது, அவர் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும்போதுதான் நடைப் பயிற்சி மேற்கொள்கிறோம்.
இந்தத் தொற்றா நோய்களால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வயதினர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களது சிகிச்சைக்கு செலவாவது ஒருபுறம் இருக்க, அவர்களது வருவாய் ஈட்டும் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுவதால் அவர்களது குடும்பமே நிராதரவான நிலைக்குத் தள்ளப்படுகிறது. அந்த வீட்டின் பெண்கள், வீட்டுப் பணிகளைச் செய்வதுடன் குடும்பச் சுமையையும் சுமக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
தனிநபரின் வருவாயைப் பாதிப்பதுடன், வருவாய் ஈட்டும் திறன் குறைவதாலும், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான செலவு அதிகரிப்பதாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே அசைக்கக் கூடிய பிரச்னையாக தொற்றா நோய்கள் மாறிவிடும் அபாயம் உள்ளது.
இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? புகையிலை, மது போன்றவற்றின் விற்பனையைக் குறைக்க பெரிய அளவில் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசையே சார்ந்திராமல், நாடு முழுவதும் இயங்கி வரும் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்க வேண்டும். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்கள் உள்பட உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சத்தான உணவுப் பொருள்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றுக்கு என சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.
இப்படிச் செயல்படுவதன் மூலம் நம்மை நாமே காத்துக் கொள்வதுடன் தேசத்தின் பொருளாதாரத்தையும் காத்தவர்களாவோம்.

No comments:

Post a Comment