Monday, 10 November 2014

வீடு கட்டும் ஜாதகர்

வீடு கட்டும் ஜாதகர்



       வீடு கட்டும் ஜாதகர்களுக்கான பதிவு இது.  [ பாரம்பரிய முறை ], இது ஜாதக ரீதியான வழிகாட்டுதலையும், திருக்கோயில் வழிபாடுகளையும், கிரக தோஷம் பற்றிய விபரங்களையும் கொண்டதாகும்.  ' வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்,' என்பது  பழமொழி.  பார்த்துக்கொண்டே இருக்கமுடியுமா பயன்படுத்துவது எப்போது? என்ற துணைக்கேள்வி எழாமல் இருக்காது.  உண்மையிலேயே வீடு கட்டுவதும், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதும் ப்ரம்மபிரய்த்தனமாகும்.  முடிந்தவரை வீடு கட்டும் முயற்சியில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க ஜாதகம் பார்ப்பதும், இறைவன் துணையை நாடுவதும் தவறில்லை.

     1.  முதலில் வீடு கட்டும் யோகம் ஜாதகப்படி தனக்குள்ளதா? என்று பார்க்க வேண்டும்.  இல்லையெனில் யோகமுள்ள குடும்ப உறுப்பினர் பெயரில் வீடு கட்டலாம்.  சிலருக்கு கடன் வாங்கி வீடு கட்டும் யோகம் இருக்கும்.  அவ்வாறு உள்ளவர்கள், கையில் தொகை வைத்திருந்தாலும், வீடு கட்டக்கூடிய முதல் செலவுக்கு கடன் வாங்கிவிடுவது நல்லது. இல்லையென்றால் தொகையெல்லாம் தீர்ந்த பின் ஜாதகமானது பெரிய கடனாக வாங்க வைத்துவிடும்.  இன்னும் சிலருக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கும் யோகம் இருக்கும்.  ஆகவே முதலில் எந்த வகைப்படி செலவிடலாம் என்று ஜாதகப்படி திட்டமிடுவது நல்லது. 

     இனி சில திருக்கோவில் வழிபாடுகளையும், ஸ்தலங்களையும் சுருக்கமாக பார்க்கலாம்.

     1.  முதலில் வாங்கிய நிலத்தில் எந்த வித தோஷமும் இருக்கக்கூடாது.  தெரிந்தும், தெரியாமலும் இருந்தால், திருச்சிக்கு அருகே உள்ள மணச்சனல்லூர் { மண் அரக்க நல்லூர் }  ஸ்ரீ பூமினாதஸ்வாமி கோவிலில் முறைப்படி மண் வழிபாடு செய்ய வேண்டும்.  இதனால் நாம் வாங்கிய நிலத்தில் அரக்கத்தன்மை உடைய துஷ்ட சக்தி இருந்தால் ஒழிந்துவிடும். 

     2.  அடுத்து நமக்கு தடையின்றி, சிறந்த கட்டுமான பொருட்கள் கிடைக்க வேண்டும்.  இதற்கு திருப்புகலூர் ஸ்ரீ சரண்யேஸ்வரஸ்வாமி திருக்கோவிலில் மூன்று செங்கல் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.  இந்த கற்கள் கொண்டு வீடு கட்டும் பணியை துவங்கினால், நான் கூறியவாறு கட்டுமான பொருட்கள் கிடைப்பதோடு, வாஸ்து தோஷம் இருப்பினும் நீங்கி விடும். இக்கோவிலுக்கு வாஸ்து கோவில் என்று செல்லப் பெயர் உண்டு. 

     3.  இனி கட்டிடத்தை நிர்மாணிக்க வாஸ்து நிபுணத்துவம் பெற்ற நல்ல பொறியாளர் தேவை.  இதற்கு திருவாரூர், ஸ்ரீ தியாகராஜஸ்வாமி திருக்கோவிலில் தனி சன்னிதி கொண்டுள்ள ஸ்ரீ விஸ்வகர்மா தேவரை அபிஷேக, ஆராதனை செய்து வணங்க வேண்டும்.  இவர் தேவலோக சிற்பி ஆவார்.  இவையெல்லாம் பொதுவான வழிபாட்டு முறைகளாகும்.

     இனி ஜாதகப்படி உள்ள தோஷ விபரங்களை பார்க்கலாம்.  நிலம் வாங்கி வீடு கட்டுவது போல, சிலர் பழைய கட்டிடம் வாங்கி இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதுண்டு.  அப்படிப்பட்டவர்கள் வாங்கிய கட்டிடத்திற்கு, ஜாதகப்படி " மனைதோஷம் ", உள்ளதா? என்று பார்த்துக்கொள்வது அவசியம்.  மனை தோஷம் பலவகை அதில் கடுமையானது ப்ரேத தோஷம்  அதாவது வாழ்க்கை ஆயுள் முடியுமுன்பே, பாதியில் தானாகவே முடித்துக் கொண்டவர்கள் இருந்த இடமாக அது இருக்கலாம்.    எனவே ஜாதகப்படி ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்து கொண்டு, இறைவன் திருவருள் துணை கொண்டு, ஜோதிடர்களின் வழிகாட்டுதலுடன் புதிய வீடு கட்டினால் அது இல்லறம் நல்லறமாக செழிக்கும் இனிய மாளிகையாக திகழும் என்பதில் ஐயமில்லை. 

No comments:

Post a Comment