Friday, 14 November 2014

குரு பகவானை எவ்வாறு வழிபட வேண்டும்?

தெட்சிணாமூர்த்தி வழிபாடு
தெட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.
தெட்சிணம் என்றால் என்ன?
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தெட்சிணாமூர்த்தி. ஞானமானது தெட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்றுகொண்டிருக்கிறது.
வியாக்யான தெட்சிணாமூர்த்தி
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தெட்சிணாமூர்த்தியே ஆவார். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.
குருவின் சின்முத்திரை
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.
பத்து தெட்சிணாமூர்த்திகள்
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்
தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)
சிற்ப அழகு - ஆலங்குடி
வீராசன நிலை - சென்னை திரிசூலம்
மிருதங்க தெட்சிணாமூர்த்தி - கழுகுமலை (தூத்துக்குடி)
யோகாசன மூர்த்தி - அனந்தபூர் (ஆந்திரா)
வீணா தெட்சிணாமூர்த்தி - நஞ்சன்கூடு (கர்நாடகா)
வியாக்யான தெட்சிணாமூர்த்தி - அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்)
நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி - மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
நின்ற நிலையில் வீணையுடன் - திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்
விசேஷமான கோலத்தில் தட்சிணாமூர்த்தி  திருத்தலங்கள் !
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் மிதித்து, சின்முத்திரை மூலம் ஞானத்தைப் போதித்து சாந்தி மற்றும் ஆனந்தத்தை அருள்பவர் தட்சிணாமூர்த்தி. விசேஷமான திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கும் திருத்தலங்கள் சிலவற்றைப் பார்ப்போம். மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட் அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவதட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து அருள் பாலிக்கிறார். புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபயமுத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல்கையில் நாகம், இடது மேல்கையில் அக்னி என சிவனே தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மன்னார்குடி - பெருகவாழ்ந்தான் வழியில் 15 கி.மீ. தொலைவிலுள்ள கழுகத்தூர் சௌந்தரநாயகி சமேத ஜடாயுபுரீஸ்வரர் கோயிலின் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி - பூம்புகார் வழியில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும். இங்கு உள்ள தட்சிணாமூர்த்திக்கு கீழ் சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு உபதேசம் செய்த இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.
சென்னை ரெட்ஹில்ஸ் - பெரியபாளையம் சாலையில் அமைந்திருக்கும் திருக்கண்டலத்தில், திருகன்னீஸ்வரர் கோயிலில் பிருகு முனிவரின் பூஜையில் மகிழ்ந்து, இங்குள்ள ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கி அருள்பாலிக்கிறார்.
சென்னையிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியில் 56 கி.மீ., தூரத்தில் ஆந்திரா சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்.
சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரி எனும் திருநெல்வாயை அடுத்துள்ள மேலை திருக்கழிப்பாலை திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக்கல்லால் <உருவானவர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் அருள்பாலிக்கிறார்.
தஞ்சை பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி அம்பிகை சமேதராக அருள்பாலிக்கிறார்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலம் மிகச் சிறப்பான ஒன்றாகும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே 8 கி.மீ., தொலைவில் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. பொதுவாக தெற்கு நோக்கி அருள்பாலிக்கும்
தட்சிணாமூர்த்தி இங்கு கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.
எல்லாக் கோயில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான்,திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள தென்திருபுவனம் புஷ்பவனநாதர் திருக்கோயிலில், வழக்கத்துக்கு மாறாக வலக்காலை மடித்து இடது தொடைமேல் வைத்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயிலில் இருந்து ஓமாப்புலியூருக்கு செல்லும் வழியில் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தட்சிணாமூர்த்தி
அம்மனுக்கு உபதேசம் செய்த காரணத்தினால் சேலை அணிந்திருப்பது சிறப்பு. குரு சன்னதி பொதுவாக கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால்
இந்த தலத்தில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தெட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார். இவர் காலடியின்கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோயிலிலும் காணமுடியாது.
மயிலாடுதுறை காவிரிக்கரை வள்ளலார் கோயிலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி. நந்திமீது அமர்ந்தவாறு அருள்பாலிக்கிறார். வேலூர் மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயிலிலோ, கோயிலின் கொடிமரத்தில் தென்திசையைப் பார்த்தவாறு அமர்ந்து அருட்காட்சி தருகிறார்.
மதுரையில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் 33 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது திடியன் மலை கைலாசநாதர் கோயில்.  தமிழகத்தில் எங்குமே இல்லாதபடி, இங்கு மட்டுமே காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட தட்சிணாமூர்த்தி பதிநான்கு சித்தர்களுடன். நந்தியின் மீது அமர்ந்த நிலையில் இரண்டரை அடி உயரத்தில் அருளாட்சி புரிகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலிலும், சென்னை திரிசூலம் கோயிலிலும், தட்சிணாமூர்த்தி வீராசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
திருவொற்றியூர் தியாகராஜர் - வடிவுடையம்மன் கோயில் வாசலுக்கு முன்புள்ள பக்க மண்டபத்தில் வடக்கு நோக்கி 9 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட பிரமாண்ட வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.
அரக்கோணத்துக்கு 16 கி.மீ. தொலைவிலிருக்கும் தக்கோலம் திருத்தலத்தில் இருக்கும் சாந்த தட்சிணாமூர்த்தி வலக்காலை தொங்கவிட்டுக்கொண்டும், இடக்காலை மேலே வைத்துக்கொண்டு உத்கடி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
பெரும்பாலும் சிவாலயங்களில் மட்டுமே இருக்கும் தட்சிணாமூர்த்தி, கல்லிடைக்குறிச்சி -மன்னார்கோயிலில் உள்ள வேதநாராயணர் கோயில் விமானத்திலும், மதுரை சோழவந்தானிலுள்ள பெருமாள் கோயிலிலும் அருள்பாலிக்கிறார்.
நாகலாபுரம் வேதநாராயணர் கோயில், திருப்பூந்துருத்தி, நஞ்சன்கூடு, காஞ்சிபுரம் கைலாசநாதர், தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயில்களில் வீணாதர தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.
தஞ்சை பாபநாசம் அருகிலுள்ள நல்லூர் கல்யாணசுந்த ரேஸ்வரர் திருக்கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசையில் உள்ள ஆத்மநாதசுவாமி கோயிலில் தட்சிணாமூர்த்தி யோகநிலையில் அருள்பாலிக்கிறார்.
ஆந்திரா அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள ஹேமாவதியில் ஐயப்பன் போல் ஆசனமிட்டு, யோக மூர்த்தியாகத் திருக்காட்சி தருகிறார். கேரளா மாநிலம் சுகபுரத்தில், தட்சிணாமூர்த்திக்கென்றே ஒரு தனி ஆலயம் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றியது இங்குதானாம்.
குரு - தெட்சிணாமூர்த்தி வித்தியாசம்
நவக்கிரக மண்டபத்தில் இருக்கும் குரு பகவான் வேறு. தெட்சிணாமூர்த்தி வேறு. ஆனால், இருவரும் தங்கள் தொழிலால் ஒன்றுபடுகிறார்கள். இதனால் தான் மக்கள் தெட்சிணாமூர்த்தியை குருவாகக் கருதி, குருவுக்குரிய வழிபாடுகளை தெட்சிணாமூர்த்திக்கு செய்து கொண்டிருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் திசை தெற்கு, குருவின் திசை நவக்கிரக சன்னதியில் வடக்கு. தேவர்களின் குருவே பிரகஸ்பதி. இவரே நவக்கிரக அந்தஸ்தைப் பெற்றவர். தெட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம். இவர் அம்பிகைக்கும், சனக, சனாதனர் உள்ளிட்ட நால்வருக்கும் வேதம் கற்பித்தவர். ஆனால், இருவருக்கும் மஞ்சள் ஆடை அணிவதில் ஒற்றுமை இருக்கிறது.
தெட்சிணாமூர்த்தியை குருவாக வழிபடுவது ஏன்?
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது. மேலும் கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார்.
சாப்பிட்ட கோலத்தில் தெட்சிணாமூர்த்தி
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர். விவசாய தம்பதியருக்கு அருள் செய்வதற்காக, முதியவர் வேடத்தில் வந்த சிவன் அவர்கள் படைத்த உணவை வயலில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டுச் சென்றார். இதன் அடிப்படையில் இக்கோயிலில் தெட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இவரை தவ தெட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

1 comment:

  1. தெட்சினம் என்ற சொல்லுக்கு *தெற்கு* என பொருளாகியதால் தான், அவர்தெற்குநோக்கி அமர்ந்திருக்கிறாரா. Very nice. நெல்லையப்பர் கோவிலில், இரண்டு இடத்தில் தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். ஒன்று அம்பாள் சன்னதியில், மற்றொன்று, நெல்லையப்பர் சன்னதியில் வீற்றிருக்கிறார்.

    ReplyDelete