Friday, 26 December 2014

இராகு கால பூசைகள் ஏன்?

இராகு கால பூசைகள் ஏன்?
செவ்வாய், வெள்ளி ராகுகாலம் இரண்டும் ஏன் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?
நவகிரங்களுக்குள் புதன் கிரகம் வலிமையானது. புதனைவிடச் செவ்வாயும், செவ்வாயைவிட சனியும், அதைவிட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சூரியனும் பலம் பெற்றது. சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலமுள்ள கிரகங்கள் என்கிறது ஜோதிஷ சாஸ்திரம். ஆகவே, ராகு கிரகமும் அதனால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் மற்ற கிரகங்களைக் காட்டிலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பன்னிரண்டு ராசிகளில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்தமாக வீடு என்று உண்டு. ராகு கேதுகளுக்கு தனியாக வீடு என்பது இல்லை (இதில் கருத்து வேறுபாடு உண்டு). இதேபோல் கிழமை விஷயமும். ஒவ்வொரு கிரகத்துக்கும் தலா ஒவ்வொரு கிழமை வீதம், மொத்தம் ஏழு கிழமைகள்தான். ராகு கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்.
அதாவது ஒவ்வொரு நாளும் முப்பது நாழிகையுடைய பகலின் (12 மணி நேரத்தின்) எட்டில் ஒரு பகுதியான மூன்றே முக்கால் நாழிகை (1.30 மணி நேரம்) ராகு காலம் என்று அழைக்கப்படுகிறது. இது பகல் பொழுதின் அளவான 12 மணி நேரத்துக்கு கணக்கிடப்பட்டுள்ளது. பகல் பொழுதின் அளவில் நிகழும் ஏற்ற இறக்கங்களையொட்டி, ராகு காலத்தில் சிற்சில நிமிடங்கள் வேறுபடலாம்.
ராகு கிரகத்துக்கு அதிதேவதையாக துர்கை கூறப்பட்டுள்ளாள். மேலும் குஜவத் ராகு: சனிவத் கேது: (இதை மாற்றிச் சொல்வோரும் உண்டு) என்னும் வசனப்படி, செவ்வாயைப் போலவே ராகுவுக்கு பலனைச் சொல்ல வேண்டும் என்றும், சனியைப் போலவே கேதுவின் பலன் அமையும் என்றும் கூறுகிறது ஜோதிஷம். இதை கவனிக்கும்போது செவ்வாய் கிரகத்துக்கும் ராகு கிரகத்துக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பது நன்கு புலப்படும், ஆகவேதான் செவ்வாய்க்கிழமையன்று ராகு கிரகத்துக்கான ப்ரீதிகள் (துர்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுதல், நாகத்துக்கு (பாம்பு புற்றுக்கு) பால் வார்த்தல், அம்மனுக்கு நெய்தீபம் போடுதல் போன்றவை நடத்தப்படுகின்றன.
ஸ்வர் பானு என்னும் அசுரன்தான் ராகு என்று பெயர்மாற்றமடைந்துள்ளான் என்கிறது புராணம். அனைத்து அசுரர்களுக்கும் தலைவராக குருவாக இருந்து அசுரர்களை வழி நடத்தியவர் சுக்கிரன் என்னும் கிரகம். ஆகவே, ராகுவும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் நட்புடன் கூடியவர்கள். தனது நண்பரான - குருவான - சுக்கிரனின் ஆதிக்கத்துக்குட்பட்ட வெள்ளிக்கிழமையில் தனக்கான பரிகாரத்தை செய்தால், ராகு அதிகமான மகிழ்ச்சியடைகிறார். ஆகவே தான், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் ராகு காலம், மற்ற நாட்களை விட அதிகமான பலம் வாய்ந்தவை.
----௦---------------------------௦--------------------------------------௦----------------------------------------------
ராகு பகவான் - கருமையானவர்; தென்மேற்கு திசைக்கு அதிபதி; கிரகங்களில் பெண் கிரகம்; இனத்தில் சங்கிரமன்; வடிவில் உயரம்; தொடை, பாதம் மற்றும் கணுக்காலுக்கு உரியவர். பஞ்ச பூதத்தில் ஆகாயமான இவர்... சரக்கிரகமும்கூட (மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சரராசிகள் என்பர்). இவரின் அதிதேவதைகள்- ஸ்ரீகாளி, ஸ்ரீதுர்கை மற்றும் ஸ்ரீகருமாரி! இவரது நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம். இவரது திசை, 18 வருடங்கள்.
'ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை' என்பர். சாயாகிரகமான ராகு லக்னத்தில் இருக்க... அந்த ஜாதகர் பலவானாகவும் பிடிவாத குணம் கொண்டவராகவும் இருப்பார். மர்மமான மனதுக்குச் சொந்தக்காரராக விளங்குவர். ராகு பகவான் 2-ஆம் இடத்தில் இருக்கும் ஜாதகர்கள், முன்கோபியாக, செலவாளிகளாக, மனம் போல் வாழ்பவராக இருப்பர். ராகு 3-ல் இருந்தால், அடிக்கடி பயணம் மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டு. 4-ல் இருந்தால் வேளை தவறிய உணவு, தாயாருக்கு உடல் நலக்குறைபாடு ஆகிய பலன்கள் கிடைக்கும். 5-ல் ராகு இருந்தால் திருமணம் மற்றும் புத்திரத் தடைகள் உண்டாகும். பூர்வ ஜன்ம புண்ணியம் பாதிக்கும்; கடும் நாக தோஷம் விளையும்!
6-ல் இருந்தால் திருமண பாக்கியம், நீண்ட ஆயுள், திடீர் பணவரவு மற்றும் சொத்து சேர்க்கை உண்டு. ஸ்ரீஅஷ்டலட்சுமியின் அருள் கிட்டும். 7-ல் இருக்க திருமணம் தடைபடும். அல்லது கலப்பு மணம் புரிவர். 8-ல் இருந்தால் இரக்கம் அற்றவராகவும், பாலாரிஷ்ட தோஷம் உள்ளவராகவும் திகழ்வர். 9-ஆம் இடத்தில் ராகு இருந்தால் தந்தைக்கு நஷ்டம்; மூதாதையரது சொத்துகளில் வில்லங்கம் ஏற்படும். பூமியும் பொருளும் சேரும்.
10-ஆம் இடத்தில் இருந்தால், விதவையால் ஆதாயம் கிடைக்கும்; நவரத்தினங்கள் சேரும்; யோக வாழ்வு வாழ்வர். ராகு 12- இல் இருந்தால் பிதுர் அரிஷ்டமும் திடீர் யோகமும் உண்டு. 12-ல் இருந்தால், சிந்தனாவாதி; சயன சுகமற்றவர்; சர்ப்ப தோஷம் இருக்கும். கன்னியில் ஆட்சியும் விருச்சிகத்தில் உச்சமும் பெறும் ராகு பகவான் எப்போதுமே சந்தோஷங்களைத் தருவார்!
zczczczzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzczczczczczczczczcz
ஞானயோகம் தரும் கேது!
கேது பகவான்- செந்நிறம் கொண்டவர். வடமேற்கு திசைக்கு அதிபதி; அலி கிரகம்; இனத்தில் சங்கிரமன்; மர்ம உறுப்புக்கு அதிபதி. பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரம் இவருக்குப் பிடிக்கும். பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர்; நாடியில் பித்தநாடி. ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீசண்டிகேஸ்வரரும் கேதுவின் அதிதேவதைகள்.
வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும் கிரகம் இவர். வேத- வேதாந்த அறிவு; மோட்சம், விஞ்ஞான- மெய் ஞானத் தேடல் ஆகியவற்றின் காரகனும் இவர்தான்! சிவப் பிரியரான இவர், தவம் செய்யும் வலிமையையும் தருவார். எளிமைக்கும் கடுமைக்கும் நடுவே இருக்கும் கேது, சகல சௌபாக்கியங்களை அருள்வதுடன், வியாதிகளில் இருந்து நிவாரணமும் தர வல்லவர். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதியான கேதுவின் திசை- 7 வருடங்கள்!
சாயா கிரகமான கேது, அவரவர் லக்னப்படி... சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் சாதாரணமா கவும் பலன் தருவார். ஜாதகத்தில் கேது லக்னத்தில் இருந்தால், குணவானாகவும் பலசாலியாகவும் திகழலாம். 2-ல் இருந்தால் வாக்கு, ஸித்தி, யோகம், சத்ரு ஜெயம், தான-தர்மம், சாஸ்திர ஞானம் மற்றும் புண்ணிய பலன்கள் கிடைக்கும். 3-ல் இருந்தால் சத்ருக்கள் அழிவர்.
4-ல் இருந்தால் கலைஞானம் தருவார். 5-ல் இருந்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். 6-ல் இருந்தால் யோகம் கிடைக்கும்; பகை ஒழியும். 7-ல் இருந்தால் களத்திர அரிஷ்டம்; பெண்பித்தராக இருப்பர். 8-ல் இருந்தால் மனைவிக்கு தோஷம். 9-ல் இருந்தால், தந்தை பாக்கியக் குறைவு; தரித்திரம், புண்ணியத்தில் தடை உண்டு. 10-ல் இருந்தால் விவேகி; ராஜாங்க சேவை; தான-தர்மத்தில் ஈடுபாடு உண்டாகும். 11-ல் இருந்தால் புண்ணியவானாக திகழலாம். 12-ல் இருந்தால் செல்வ போகமும் மோட்சமும் கிடைக்கும். அந்தஸ்து- அதிகாரத்துடன் வாழ்வர்!
ராகு-கேதுவின் அருள் பெற விரும்புவோர், திருநாகேஸ் வரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களுக்குச் சென்று முறையே ராகு- கேதுவை வழிபட்டு வரலாம்.
இயலாதவர்கள் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில்- ராகு காலத்தில், துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று மனமுருகி அம்பாளை வழிபடுவதால் ராகுவின் அனுக்கிரகத்தைப் பெறலாம். கேதுவின் அருள்பெற வேண்டுமெனில், எமகண்ட வேளையில் சித்ரகுப்தரை தியானிப்பது நல்லது. தவிர, அருகில் இருக்கும் ஆலயங்களில் அருளும் நவக்கிரகங்களை வலம் வந்து வழிபட்டும் பலன் பெறலாம்.

No comments:

Post a Comment