Sunday, 25 January 2015

நவக்கிரக தோஷம் போக்கும் ரதசப்தமி வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியன்று ரத சப்தமி வருகிறது. 
 
ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட, புராண நூல்கள் சொல்கின்றன. 
ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். 
 
ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, மூடிய இரு கண்களில் கண் ஒன்றுக்கு ஒன்று வீதம் இரண்டு, அதுபோல தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.
 
இப்படிச் செய்வதால் நாம் 7 பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பதும் ஐதீகம். அன்றைய தினம் குளித்து முடித்த பின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும். மேலும் ஒருவர் நவக்கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடுவர்.
 
ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர் நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள்.
 
இந்நாள் தியானம் செய்ய உகந்தது. அன்றைய தினம் சூரிய உதயத்தின் போது இவ்வாறு எருக்க இலையைத் தலையில் வைத்துக் குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கிறது புராணம்.
 
இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது ;
 
காலவமுனிவர் என்பவர் தனக்கு தொழு நோய் வரப் போவதை தன் ஞான திருஷ்டி மூலம் அறிந்தார்.
உடனே அவர் நவக்கிரகங்களை வழிபட்டு தொழுநோய் பிடிக்காமல் இருக்கும் வரத்தை பெற்றார். இதை அறிந்த பிரம்மா, வரம் கொடுக்கும் அதிகாரம் நவக்கிரகங்களுக்கு இல்லை என்று கோபம் கொண்டார். பிறகு அவர் நவக்கிரகங்களுக்கு தொழு நோய் பிடிக்கட்டும் என்று சாபமிட்டார். இதனால் நவக்கிரகங்களை தொழுநோய் பிடித்தது. 
நவக்கிரகங்கள் சாப விமோசனம் பெறும் வழியை அகத்தியர் கூறினார். அதன்படி எருக்கம் இலையில் தயிர் சாதத்தை வைத்து சாப்பிட்டு தொழு நோயை நவக்கிரகங்கள் போக்கின. அன்று முதல் 7 எருக்கம் இலை, எள், அட்சதையை தலையில் வைத்து குளித்தால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
 
எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்றது அர்க்கியம் விடுவது. எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் உடையது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். 
 
பொங்கல் வைத்து அதை சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது பலரது வழக்கம். 
 
இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். 
 
அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆராக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சொல்கிறார்கள். ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது, 
சூரியனை நோக்கி,
 
 
"ஓம் நமோ ஆதித் யாய...
ஆயுள், ஆரோக்கியம்,
                                                                     புத்திர் பலம் தேஹிமே சதா''     -  என்று சொல்லி வணங்கலாம். 
 
 
நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட ரத சப்தமி தினத்தன்று சூரிய பகவானை வழிபடுவோம்.

No comments:

Post a Comment