Monday, 16 March 2015

கடிகாரம்

கடிகாரம்
நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான “wrist” என்பது தமிழில் “மணிக்கட்டு” என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று.
கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் பணிக்குச் செல்ல இயலாது. பயணம் செய்ய வேண்டிய பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றைத் தவற விடுவோம். எனவே கடிகாரம் காட்டும் நேரத்தை நம்பியே மனித வாழ்க்கை முறையாகச் செல்கிறது என்பதில் மிகையேதுமில்லை.
நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. மிகப் பழங்காலத்தில் சூரியனின் இயக்கத்தையும், அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்றும் கூறப்படுகிறது.
காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.
அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர்.
கி.பி.1510-ம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும்.
தொடக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன. கி.பி.1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன.
அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.

No comments:

Post a Comment