Saturday, 23 May 2015

கடவுளை மனிதனாக வணங்குவது ஏன்?

கடவுளை மனிதனாக வணங்குவது ஏன்?
ஸ்வாமி விவேகாணந்தரின் விவேக மொழி!!
-------------------------------
எங்கும் நிறைந்தவர் என்பதற்கு என்ன பொருள்? ஆன்மாவைப் பற்றிய கருத்தே மனிதனுக்கு இல்லை. தன் முன்னால் உள்ள பொருட்களோடு இணைத்தே அதை அவன் நினைக்க வேண்டியிருக்கிறது.
நீல வானத்தையோ, பரந்த வயல்களையோ, கடலையோ அல்லது பெரிதாக உள்ள வேறு எதையோதான் அவன் நினைக்க வேண்டும். வேறு எப்படி அவனால் இறைவனை நினைக்க முடியும்? எனவே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எங்கும் நிறைந்தவர் என்று சொல்கிறீர்கள், கடலைப் பற்றி நினைக்கிறீர்கள். கடவுள் கடலா என்ன?
நாம் இப்போது மனித உடலமைப்பில் கட்டுண்டிருக்கிறோம். எனவே நம்மால் கடவுளை மனிதனாகத்தான் பார்க்க முடியும். எருமைகள் இறைவனை வழிபட முடியுமானால் அவை அவரை ஒரு பெரிய எருமையாக நினைக்கும். ஒரு மீன் கடவுளை வழிபட விரும்பினால், அது அவரை ஒரு பெரிய மீனாக எண்ணிக்கொள்ளும். மனிதன் ஆண்டவனை மனிதராகவே நினைக்க வேண்டும். இவை வெறும் கற்பனையல்ல.
நீங்கள், நான், எருமை, மீன் எல்லாம் பல்வேறு பாத்திரங்கள். இவை அனைத்தும் கடலுக்குச் செல்கின்றன. தங்கள் அளவுக்கேற்றவாறு தங்களுள் நீரை நிறைத்துக் கொள்கின்றன. மனிதனில் மனிதனுக்கேற்றபடி, எருமையில் எருமைக்கேற்றபடி, மீனில் மீனுக்கேற்றபடி, ஒவ்வொரு பாத்திரத்திலும் தண்ணீர்தான் உள்ளது.
அதேபோல்தான் எல்லோரிலும் உள்ள கடவுள் விஷயமும். மனிதன் அவரைப் பார்க்கும்போது மனிதனாகப் பார்க்கிறான். மிருகங்கள் அவரை மிருகமாகப் பார்க்கின்றன. எல்லோரும் தங்கள் எண்ணப்படியே பார்க்கின்றனர். அவரை இந்த ஒரு வழியில்தான் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் அவரை மனிதராகவே வழிபட வேண்டும். ஏனெனில் வேறு வழியில்லை.
எனவே இறைவனை மனிதனாக வழிபடுவது மிகவும் இன்றியமையாதது. எந்த இனத்துக்குத் தான் வழிபடுவதற்கு அத்தகைய இறை மனிதர் இருக்கிறாரோ, அந்த இனம் பேறு பெற்றது.

No comments:

Post a Comment