ஆணவம் என்பது ஒருவித வித்தியாசமான வஸ்து. இறைவனின் படைப்பில் மிக விசித்திரமானது எது என்றால் ஆணவம் என்பேன்.
வடநாட்டு
இனிப்பு கடைகளில் இனிப்பு அனைத்தும் பால்கோவாவின் அடிப்படையாக இருக்கும்.
ஒன்றில் பாதம் போட்டிருப்பார்கள், மற்றதில் ஜீராவில் போட்டிருப்பார்கள்.
ஆனால் அடிப்படையில் எல்லாம் பாலல் செய்யப்பட்ட பொருட்கள்தான். அது போல
இறைவன்அனைத்து உயிர்களையும் ஒன்றாக படைத்துவிட்டு உயிர்களின் தேவைக்கு ஏற்ப
ஆணவம் என்பதை இணைக்கிறார். ஆணவத்தின் அளவை பொருத்து உயிரின் வாழ்க்கை நிலை
மாற்றம் அடைகிறது.
பள்ளி காலத்தில் நாம் பயின்ற கணக்கு சமன்பாடுகளை வைத்து இதை எளிமையாக விளக்கலாம்.
உயிர் + ஆணவம் = மனிதன்
உயிர் - ஆணவம் = தெய்வம்
உயிர் X ஆணவம் = அசுரன்
உயிர் / ஆணவம் = தேவர்கள்
மனிதனின்
ஆணவத்தை நிர்மூலமாக்கி அவனை தெய்வ நிலைக்கு உயர்த்துவது ஆன்மீகம் என்ற
கருவி மட்டும்தான். ஆன்மீகம் என்பது ஆணவத்தை ஒழித்தால் மட்டுமே உயர்நிலையை
அடைய முடியும் என்பது தெளிவு. அனைத்து உயிர்களையும் நாம் நேசிக்க
வேண்டுமானால் நம் ஆணவமில்லாத நிலையில் இருக்க வேண்டும். இறைவனின் அனுபூதி
என்பது மிகவும் மெல்லிய தென்றல் போன்றது, அத்தகைய அனுபூதியை உணர
வேண்டுமானால் ஆணவம் என்ற தடித்த தோல் நம்மை மூடி இருக்க கூடாது.
ஆன்மீகத்தில்
வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒருவன் ஆணவத்தை ஒழிக்க ஆன்மீகத்தை
பின்பற்றினால் ஆரம்ப நிலையில் ஆன்மீகமே ஆணவத்தை வளர்த்துவிடும்.
ஆன்மீகம்
என்ற மருந்து ஆணவம் என்ற நோயை வளர்த்து முற்றிய பிறகே ஒழிக்கும். ஆன்மீக
சாதகர்கள் தங்களை பிறரைவிட மேம்பட்டவர்கள் என ஆரம்பத்தில் நினைக்க
வைக்கும். நம்மை விட பிறர் அறியாமையில் இருக்கிறார்களே என
புலம்பத்தோன்றும்.
இறைவா
இவர்களுக்கு எப்பொழுது நல்வழிகாட்டுவாய் என கேட்கத்தோன்றும். இவையெல்லாம்
ஆணவத்தின் அடையாளங்களே. ஆனால் இதே ஆணவம் விரைவில் அடுத்த நிலைக்கு
கடந்துவிடும். குரு என்ற ஒருவரின் மூலம் இறைவன் ஆணவம் என்ற பெரும் மலைக்கு
வெடி வைத்துவிடுவார்.
அஹம்
பிரம்மாஸ்மி, தத்வமஸி, அயமத்ம பிரம்மா போன்ற மஹாவாக்கியங்கள் ஒருவன்
ஆணவத்தை ஒழித்திவிட்டு கூறினால் இறைவனாக தெரியும். வெறும் வாய்வார்த்தையாக
கூறினால் ஆணவத்தின் உச்சமாக தெரியும் அஹம் பிரம்மாஸ்மி என்பதை ஒரு
திரைப்படத்தில் ஹீரோ பிறரைவிட உயர்ந்தவன் என காண்பிக்கவே
பயன்படுத்தினார்கள்.
ஒரு
ஜென் குருவிடம் அவரின் பிரதான சிஷ்யன் கேட்டான், “ குருவே நான் அனைத்தும்
கற்றுவிட்டேன். வேறு என்ன நான் செய்ய வேண்டும்?” என்றான்.
ஜென் குரு கூறினார், “முதலில் கழிவறையை சுத்தம் செய். மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம்”.
இந்தியாவில்
எத்தனையோ ஆன்மீக ஸ்தாபனங்கள் இருந்தாலும் அவைகளை இணைந்து
செயல்படமாட்டார்கள். [சிலர் விதிவிலக்கு]. காரணம் தங்கள் சித்தாந்தம் தான்
சரி, தங்கள் குருவே மேன்மையானவர் என்ற எண்ணம் இதற்கு காரணம். ஆணவத்தை
ஒழிக்க சென்ற இடத்தில் அவர்களுக்கு கிடைத்தது என்ன என்று பார்த்தீர்களா?
பத்திரிகை
டீவி செய்திகளை பார்த்துவிட்டு பலர் ஒரு செய்தியை பற்றி பலவாறு
கூறினார்கள். அந்த நபரின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் காரணம், நடிகை
காரணம், மண் ஆசை காரணம், பெண் ஆசை காரணம் என பல்வேறு கருத்துக்கள்
கூறினார்கள். உண்மையில் தான் அனைத்தையும் அடைந்துவிட்டேன், எல்லோரும்
எனக்கு கீழேதான் என நினைத்த ஆணவமே காரணம் என பலர் மறந்துவிட்டார்கள்.
No comments:
Post a Comment