Saturday 2 May 2015

மெளனத்தின் குரல்

உண்மையில் ப்ரம்மம் இரகசியமானதா ? இல்லவே இல்லை. அது இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் தன்னை வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறது. அதை நுகர்ந்து உணர்ந்து கொள்ளும் திறன் நம் அறிவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. எனவே நாம் கிணற்றுத் தவளையைப் போல ப்ரம்மம் இரகசியமானது ப்ரம்மம் இரகசியமானது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். உண்மையில் அது வெட்ட வெளி மட்டுமல்ல, வெட்ட வெளிச்சமானதும் கூட. ஆனால், அதை யாரும் யாருக்கும் பிடித்துக் கொடுத்து விட முடியாது. நம் நுகர்வுத் திறனை மேம்படுத்தி அறிவால் அறிந்து, உணர்ந்து, அடைய வேண்டியது அது. அது முழுவதும் தன்னறிவு, தன்னுணர்வு, தன்முயற்சி சார்ந்த விஷயமாகும். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், ஞான நிலையில் நின்று தங்கள் அனுபவங்களை நம் முன்னோர்கள் கூறியிருப்பதே ஆதாரம்.
அப்படியானால் அவர்கள் ஒருவருக்கொருவர் முரண்படுவது எதனால் என்ற கேள்வி எழுகிறது. அதற்குக் காரணம் என்றால் ஞானம் என்பது அறிவால் தெளிவது. ஞானத்தில் நிலைத்துத் திளைத்த பிறகே உணர்வது என்பது சாத்தியமாகும். அறிவில் தெளிந்த ஞானிகள் முதலில் அதோ அந்த மலையில் புகை வருகிறது எனவே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிவால் அறிந்து அனுமானிக்கிறார்கள். எனவே அது பொய் இல்லை. நிஜம். நெருப்பில்லாமல் புகை கிளம்பாது. ஆனால் எந்த இடத்தில் முரண்படுகிறார்கள் என்றால், அந்தக் காடு தீப்பிடிக்கிறது எனவே புகைகிறது என்கிறார் ஒருவர். அங்கே மனிதர்கள் வசிக்கிறார்கள். எனவே அவர்கள் சமைப்பதினால் புகை வருகிறது என்கிறார் ஒருவர். இன்னொருவர் அங்கே மனிதர்கள் நெருப்பு மூட்டிக் குளிர்காய்கிறார்கள் எனவே புகை வருகிறது என்கிறார். இப்படி அவரவர் மனப்பாங்கின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அறிவால் தெளிந்த அளவு மனம் பக்குவமடையவில்லை. மனம் தெளிந்தவர்களே தன்னை(ஆன்மா) உணர முடியும். இதனால் அவர்கள் முட்டாள்கள் என்று பொருளல்ல. இந்த முரண்பாடுகளே அவர்களுக்கு உண்மையை அறியத் தூண்டுதலாக அமைகிறது. எனவே அந்த இடத்தை நோக்கி பயணித்து உண்மையை அறியத் தலைப்படுகிறார்கள். அடைகிறார்கள். அறிந்து, உணர்ந்து, அடைவதுதான் முக்தி. அதாவது ஞானம், சித்தி, முக்தி என்ற வரிசையில் இது அமைகின்றது.
பிரபஞ்சத்தின் காட்சிகள் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றன. இங்கே காணும் எதற்கும் உண்மையான சாட்சி மனதைத் தவிர வேறு எதுவும் கிடையாது. எல்லாவற்றிற்கும் மனமே சாட்சியாக இருக்கிறது. மனமெனும் மௌன சாட்சியாக எல்லோருக்குள்ளும், எல்லாவற்றிலும் விளங்கிக் கொண்டிருப்பது பரம்பொருளே. பிரபஞ்சத்திலும் அது பிரபஞ்ச மனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பரம்பொருளை உணராதவரை எல்லாம் மாயையே. அது வரை மாற்றங்கள் மட்டுமே நம் அறிவுக்குப் புலப்படும். உண்மையை உணர்ந்து விட்டால் மாயை மாயமாகி விடும். மனம் நிர்மூலமாகி விடும். மாற்றங்கள் எல்லாம் மறைந்து நிரந்தரம் மட்டுமே விளங்கும். அது அனுபவத்திற்கு வரும் வரை எல்லாம் அனுமானங்களே. அனுபவம் ஏற்பட்டு விட்டால் அனுமானமும் இல்லை, அனுபவம் குறித்த எந்த அடையாளமுமில்லை. எல்லாம் பரம்பொருளில் கரைந்து போகும். பரிசுத்தமாகிவிட்ட மனம் ஆன்மாவில் கரைந்து விட்ட பிறகு எதை அனுபவமாகத் தன்னிலிருந்து எடுத்தியம்ப முடியும். அதற்குப் பிறகு காட்சியுமில்லை, சாட்சியுமில்லை. இரவுமில்லை, பகலுமில்லை. சொல்லப் போனால் இந்த உலகில் இன்பமென்று ஒன்று இல்லவேயில்லை. இந்தப் பிரபஞ்ச வாழ்வில் நாம் அடையும் யாவும் துன்பமே. யோசித்துப் பாருங்கள், இன்பமென்றுநாம் கருதும் யாவும் துக்கமாகத், துயரமாக மாறிவிடக் கூடியவைகளே. எனவேதான் சம்ஸார சாஹரத்தைத் துக்க சாஹரம் என்கிறார்கள். இப்படிப்பட்ட துன்பங்களைக் கடந்து விட்ட நிலையையே இன்பமென்று சொல்கிறார்கள். உண்மையில் கடந்து விட்டவர்களுக்கு துன்பமென்றோ, இன்பமென்றோ எந்த அனுபவமும் கிடையாது. அது உணர்வு கடந்த நிலையல்லவா ?

1 comment: