Wednesday, 20 May 2015

பத்து சிறுநீரகம் கேள்விகள் பளிச் பதில்கள்

1சிறுநீரகத்தின் பணி என்ன?
உடலுக்குத் தேவையான குளூக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கி வைத்துக் கொண்டு, ரத்தத்தில் உள்ள யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருட்களைப் பிரித்தெடுத்து, வெளியேற்றும் முக்கியமான பணியை செய்கிறது. வீட்டுக்கு எப்படி கழிப்பறை முக்கியமோ, அதுபோல் நம் உடலுக்கு சிறுநீரகம் முக்கியம்.

2சிறுநீரகம் பாதிப்படைவது எதனால்?
கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் வலி நிவாரண மாத்திரைகளின் பக்க விளைவுகள், உணவு நச்சுகள், உடற் பருமன் உயிரணுக்கள் உற்பத்தியாகும் பையில் வீக்கம் போன்ற காரணங்களால், சிறுநீரகம் பாதிக்கப்படைகிறது.

3சிறுநீரகம் செயலிழந்ததற்கான அறிகுறிகள்?
திடீர் சிறுநீரக செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என, இருவகை உண்டு. உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்து போனால் அல்லது மருந்து ஒவ்வாமையினால், திடீரென சிறுநீரகம் செயலிழக்கும். முகம் வீங்குவது, உடலில் நீர்க்கோர்த்து உடல் பருமன் ஆவது போன்றவையே, திடீர் செயலிழப்பின் அறிகுறிகள்.

4நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்?
சிறிது சிறிதாக, சிறுநீர்ப் பிரிவதில் சிரமம், குறைந்த அளவில் சிறுநீர் பிரிவது. பசியின்மை, தூக்கமின்மை, சோர்வு, உடல் அரிப்பு, முகம் மற்றும் கை, கால்களில் வீக்கம் தோன்றுவது போன்றவையே, நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள்.

5சிறுநீரில் ரத்தம் வருவதற்கான காரணம்?
சிறுநீர் வெளியேறும் குழாய் மற்றும் சிறுநீர் பையில் கற்கள் அடைத்திருந்தால், சிறுநீரில் ரத்தம் வரும்; அது ஆபத்தான அறிகுறி.

6சிறுநீரக பாதிப்பை கண்டறிய எப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்?
நாற்பது வயதை கடந்தோர், நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர், பரம்பரை ரீதியாக சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பத்தை சேர்ந்தோர், சிறுநீரகத்தில் கல் உள்ளோர், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ளோர், ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பான, 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' செய்து கொள்வது நல்லது.

7உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துமா?
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. தொடர்ந்து ரத்த அழுத்தம், 140/ 90 மி.மீ., பாதரச அளவு இருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

8சிறுநீரக பாதிப்பு ஏற்படாமலிருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்?
ஒருவருக்கு தினமும், 5 கிராம் உப்பே போதுமான அளவு. ஆனால் தென்னிந்தியாவில், 20 கிராம் உப்பை தினம் எடுத்துக் கொள்கிறோம். இதை குறைக்க வேண்டும். உப்பு நிறைந்த பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், சமையல் சோடா, சிப்ஸ், ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.

9 சிறுநீரக பாதிப்பு உள்ளோர் புரத உணவுகளை தவிர்க்க வேண்டுமாமே?
சிறுநீரக செயலிழப்பு உள்ளோர், தாங்கள் உட்கொள்ளும் புரத உணவுகளில், கவனமாக இருக்க வேண்டும். புரத உணவின் வகையிலும், அளவிலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக விலங்கின் இறைச்சிகள், மீன், கோழி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும், புரதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

10 புகைப்பிடிப்போருக்கு, சிறுநீரக பாதிப்பு இருக்குமாமே?
சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் பழக்கத்தால், உடலுக்குள் நுழையும் நிகோட்டின் ரத்தக்குழாய்களை சுருக்கிவிடும். இதனால், ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். இவ்வாறு அதிகரித்த ரத்த அழுத்தம், சிறுநீரகத்தையும் பாதிக்கும்.

No comments:

Post a Comment