Friday, 22 May 2015

காலில் விழும் கலாச்சாரம்

காலில் விழும் கலாச்சாரம்

நம்ம ஊரில் காலில் விழும் கலாச்சாரம் என்பது பெருகி வருகிறது. சென்ற மே மாதம் முதல் நாட்டில் காலில் விழுந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

உலகில் இருக்கும் மிக மோசமான பழக்கங்களில் ஒன்று காலில் விழுவது. மிக காட்டுமிராண்டித்தனமான செயல் காலில் விழுவது என்பதை மறுக்க முடியாது. ஏன் என இந்த கட்டுரை முடிவில் தெரிந்து கொள்வீர்கள்...!

எந்த விலங்கும் மற்றொரு விலங்கின் காலில் விழுவதில்லை. பூச்சிகள் கூட மற்றொரு பூச்சியின் காலில் விழுவதில்லை. சிலந்திக்கு எட்டு கால்கள் இருந்தும் அதன் காலில் எந்த ஒரு பூச்சியும் விழுவதில்லை என்பதன் மூலம் பூச்சிகள் எப்படிபட்ட விழிப்புணர்வு நிலையில் இருக்கிறது என்பது உணர முடியும். சரி சரி... நீங்கள் பொறுமை இழக்கும் முன் விஷயத்திற்கு வருகிறேன் :)

அனைத்து மனிதர்களும் சமமாக பாவிக்க வேண்டும் எனும் பொழுது எதற்கு மற்றொருவன் காலில் விழ வேண்டும்? விலங்குகளும் பிற உயிரினமும் ஆணவம் மிகுந்து திரிவதில்லை. நானே உலகை காக்கிறேன் என சொல்லி இயற்கை வளங்களை அழிப்பதில்லை. அதனால் விலங்குகளுக்கு காலில் விழும் அவசியம் இல்லை..!

வணங்குதல் என்ற செயல் ஒரு மனிதனை இறைவனாக்குகிறது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள் வணங்கப்படுபவன் இறைவனாவதில்லை. வணங்குபவனே இறைவனாகிறான்..!

எப்பொழுது நாம் பிற விஷயத்தை வணங்குகிறோமோ அப்பொழுது நாம் நம் அகந்தை நீங்கி நான் வணங்கப்படும் பொருளை விட எளியவன் என்ற எண்ணம் வருகிறது. நான் முற்றிலும் சரணாகதி அடைகிறேன் என்பதே வணங்குதலின் அடிப்படை செயல். ஒருவர் தன் அகந்தையை சரணாகதி செய்துவிட்டால் மீதம் இருப்பது இறைநிலை என்ற சுத்த ஆன்ம உணர்வு தானே? அதனால் தான் கூறினேன் வணங்குபவன் இறைவனாகிறான் என்று.. இப்பொழுது புரிந்ததா?

மஹாபாரதத்தில் ஒரு காட்சி. மிகவும் சோகமான தருணம் அது. திரெளபதியை மானபங்கம் செய்ய துச்சாதனன் தூக்கிவந்து அவளின் துகிலை உரிக்க துவங்குகிறான். பலர் முன் அவமானப்படாமல் இருக்க தன் கையை உடல் மேல் வைத்து தன் மானத்தை காக்கிறாள் திரெளபதி. கணவர்கள் கூடி இருக்க, பெரியோர்கள் முன்னிலையில் இந்த அவச்செயல் நடைபெறுகிறது, தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து முடியாத நிலையில் திரெளபதி பரமாத்மாவை அழைக்கிறாள். இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ‘க்ருஷ்ணா...!” என்ற ஒரு குரல் எழுப்புகிறாள். நடந்த மற்றவை உங்களுக்கே தெரியுமே?

தான் என்ற அகந்தை இருக்கும் வரை அவளை யாரும் காக்க முடியவில்லை. தன் கையை உயர்த்தி சரணடைந்ததும் அவள் காக்கப்பட்டாள். அதுபோல உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுகிறேன் என நீங்கள் நினைக்கும் வரை உங்களை நீங்கள் தான் காத்துக்கொள்ள வேண்டும். இறைவனிடம் சரணாகதி அடைந்தால் அனைத்தையும் இறைநிலை பார்த்துக்கொள்ளும்.

ஆனால் சரணாகதி அடைதல் என்பது அவ்வளவு எளிதான காரியம் என நினைத்துவிடாதீர்கள். உலகில் மிகக்கடினமான காரியம் சரணாகதி அடைதல். ஆன்மீக பயிற்சிகளும் தியானமும் முடிவில் இந்த நிலைக்கே நம்மை இட்டுச்செல்லுகிறது. சரணாகதி அடைய நம்மை படிப்படியாக தயார் செய்வதே அனைத்து ஆன்மீக பயிற்சிக்கும் அடிப்படை என்பது உங்களுக்கு தெரியுமா?

சரணாகதி கடினம் என்கிறேன் அல்லவா? அதை பயிற்சி செய்து பார்ப்போம். இறைவன் நம் அனைவருக்கும் உணவு அளிக்கிறான். நம் உணவு என்பது இறைவன் நமக்கு அளிக்கும் பிச்சை என்பதை நீங்கள் நம்பினால் இப்பயிற்சிக்கு நீங்கள் சரியானவர். வாருங்கள் முயற்சிப்போம். நீங்கள் முன் பின் போகாத ஊருக்கு செல்லுங்கள். அவ்வூர் பாஷை உங்களுக்கு தெரியாமல் இருந்தால் உத்தமம். அங்கே சென்று ஓர் இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் சென்ற இடம் வழிபாட்டு ஸ்தலமாக இருக்க வேண்டும் என்பதில்லை. யாரிடமும் நீங்கள் பேசவேண்டாம். அமைதியாக உங்களை கவனித்துக்கொண்டு இருங்கள். தினமும் படியளக்கும் இறைவன் நமக்கு ஏதேனும் செய்வாரா என பார்ப்போம்...! முழு சரணாகதி நிலையில் இருந்தாலே இதை உங்களால் பயிற்சி செய்ய முடியும். இது சவால்..

புராண கதை கொண்ட சினிமாவில் இறைவன் அனைவருக்கும் படியளப்பவன் என கூறி ஒரு பெட்டியில் எறும்பை அடைத்து வைத்திருப்பார்கள். முடிவில் அப்பெட்டியை திறந்தால் அதன் வாயில் ஒரு சிறு பருக்கு இருப்பதை காட்டுவார்கள். பார்த்ததுண்டா? எறும்புக்கு பதில் நம்மை அவ்விடத்தில் வைத்துப்பாருங்கள். உங்களின் ஆணவ அளவு என்ன சரணாகதிக்கு நீங்கள் எவ்வளவு தயார் என புரியும். ஒரு பைத்தியக்காரன் இச்செயலை செய்ததை ஸ்ரீசக்ர புரி தொடரில் முன்பு படித்திருப்பீர்கள்.

இறைவனை உணர வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தால் தான் ஒருவனால் சரணாகதி அடைய முடியும். சரணாகதி அடையாமல் ஆன்மீகத்தில் எதையும் சாதிக்க முடியாது.

புகழ்பெற்ற ஜென் கதை ஒன்று கேள்விபட்டிருப்பீர்கள். ஒருவர் ஜென் குருவிடம் வந்து நான் இதை கற்றேன், இதில் புலமை பெற்றேன் என கூறிக் கொண்டு தனக்கு ஜென் தன்மையை போதிக்கும் படி கேட்பார். அவருக்கு தேனீர் வழங்கும் ஜென் குரு அந்த கோப்பை நிறைந்து வழிய வழிய தேனீர் ஊற்றுவார். முதலில் உன் கோப்பையை காலி செய்தாலேயே நான் புதிதாக நிரப்ப முடியும் என்பது அதன் அர்த்தம். அதுபோல இறை அனுபூதி உணர ஆணவத்தை காலி செய்தால் போதுமானது.


கோவையில் உள்ள வெள்ளிங்கிரி மலை 1800 அடி உயரத்தில் இருக்கும் ஏழு மலைகளின் தொகுப்பு. சாதாரணமாக இம்மலைக்கு சென்று வர முடியாது. உடல் நன்றாக இருப்பவர்களே தடுமாறி விடுவார்கள். அதனால் மலைக்கு மேல் செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த மலைக்கு வந்து வழிபடுபவர்களுக்கு ஓர் விசித்திர பழக்கம் உண்டு.

மலைக்கு மேல் சென்று திரும்பி வரும் ஆண்களின் கால்களில் அடிவாரத்தில் இருக்கும் பெண்கள் விழுந்து வணங்குவார்கள். அதுவும் முன் பின் தெரியாத ஆண்களின் கால்களில் பெண்கள் விழுந்து வணங்குவார்கள். தங்கள் காலில் விழுந்தால் தான் கஷ்டப்பட்டு மலை ஏறிய புண்ணியம் அவர்களுக்கு போய்விடும் என ஆண்கள் ஓடுவார்கள். இது வெள்ளிங்கிரியில் பங்குனி முதல் வைகாசி வரை இயல்பாக நடக்கும் காட்சி.

ஒரு முறை நான் வெள்ளிங்கிரி சென்று திரும்பும் பொழுது என்னுடன் வந்தவர் இந்த செயலை கண்டு மிகவும் கோபம் கொண்டார். பெண்களுக்கு சம உரிமை இல்லையா? அவர்கள் ஏன் மலை ஏறக்கூடாது? பெண்கள் விமானமே ஓட்டும் காலம் இது என தன் பெண் உரிமை பிரச்சாரத்தை துவங்கினார்.

அப்பொழுது நான் கூறினேன், “ ஆண்களுக்கு ஆணவம் அதிகமையா... அதனால் தான் அதை அடித்து நொறுக்க ஏழுமலைக்கு மேல் சென்று திரும்ப வேண்டி இருக்கிறது. ஆனால் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் நின்ற இடத்தில் வணங்குவதாலேயே தங்களின் ஆணவத்தை தொலைத்துவிடுகிறார்கள். இப்பொழுது சொல் யாருக்கு அதிக உரிமை கொடுத்திருக்கிறார்கள் என்று” என கேட்டேன்.

வெள்ளிங்கிரி மலை ஏறி உடல் நொந்து போயிருக்கும் பொழுதும் தன் ஆணவம் கரையாமல் பெண் உரிமை பேசியவரின் ஆணவம் என் விளக்கத்தால் நொந்து போனது.

ஆன்மீக சூழலில் இருப்பதால் பலர் என் கால்களில் விழுவதுண்டு. அவர்களை நான் தடுப்பதில்லை. ஒரு மனிதன் தான் சரணாகதி அடைய முயற்சி செய்யும் பொழுது அதை நாம் தடுக்கலாமா? தூண்டத்தானே வேண்டும்?

ஒருவர் என்னை வணங்குகிறார் என்றால் என் உடலையோ என் தோற்றத்தையோ வணங்குவதில்லை. மாறாக இறையாற்றல் கொண்ட ஆன்மாவை வணங்குகிறார். ஆன்மா என்பது ஆளுக்கு ஆள் வேறுபடாது. உங்களுக்குள் இருப்பதே என்னுள்ளும் இருக்கிறது. அதனால் என்னை வணங்குபவர்களை தன்னையே வணங்குகிறார்கள்.

சில ஆன்மீகவாதிகள் பிறர் காலில் விழுந்து வணங்க அனுமதிப்பதில்லை. இதற்கு பல காரணம் இருந்தாலும் அடிப்படையாக இருக்கும் காரணம் விசித்திரமானது. வணங்கும் பொழுது அனைத்தையும் உன்னிடம் கொடுத்து சரணாகதி அடைகிறேன் என் ஒருவர் சொல்லும் பொழுது அவரின் கர்மவினையும் அதனுள் அடக்கம் அல்லவா? அதனால் ஆன்மீகவாதிகள் பிறரின் கர்மா தனக்கு வந்துவிடும் என நினைத்துகாலில் விழ அனுமதிப்பதில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் காலில் விழுந்து வணங்கினால் தன் கர்ம வினைகளை அதிகரித்து தான் கர்மவால் பாதிக்கப்படுவோம் என்பதே அவர்களின் சோசியலிஷத்திற்கு காரணம் என்பதை அவர்களுடன் பழகும் பொழுது புரிந்து கொண்டேன்.

பல்லாயிரக்கணக்கானவர் கர்மவினை முதல்கொண்டு அனைத்தையும் கொடுத்து சரணாகதி அடைகிறார்கள் என்றால் அவர்கள் அனைவரையும் இறைநிலை பெறச்செய்யும் இச்செயலால் எனக்கு பல்லாயிரக்கணக்கான பாவங்களும் கர்மவினைகளும் வந்தால் அதைபற்றி எனக்கு கவலை இல்லை..!

இறைவன் தன்னை பிறர் அடைய என்னை படிக்கட்டாக படைத்திருக்கிறான் என நினைத்து பெருமை கொள்வேன். அதைவிடுத்து என் காலில் விழுந்து வணங்காதீர்கள் என என்னை காத்துக்கொள்ள மாட்டேன்.

அதேபோல என்னை சிலர் வணங்கினாலும் , அவர்கள் அருகில் இருப்பவர்கள் வணங்கமாட்டார்கள். அவர்களை நான் நிர்பந்திப்பதில்லை. சரணாகதி என்பது அனைவருக்கும் ஒரே இடத்தில் நடப்பதில்லை..!

கிருஷ்ணனை காண சென்ற அர்ஜுனனும் துரியோதனனும் என்ன செய்தார்கள்? அர்ஜுனன் காலின் அருகே அமர்ந்தான், துரியோதனனன் தலைக்கு அருகே அமர்ந்தான். காலின் அருகே இருந்தவனுக்கு உபதேசம் கொடுக்கப்பட்டது.

நான் யாருக்கும் ஆசிர்வாதம் கொடுக்கிறேன் என களம் இறங்குவதில்லை. ஒருவர் என்னை வணங்கினால் அவர் சரணாகதி அடைய நான் கருவியாக இருக்கிறேன். அவ்வளவே..!

மற்றபடி நான் வரம் தருவதோ அல்லது அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைப்பதோ இல்லை.
தன் அகந்தையை என் காலில் இட்டு சென்றவனுக்கு என்ன வரம் தருவது? அவனே இறைவனாகிவிட்டானே...! இறைவனுக்கே யாரேனும் வரம் தருவார்களா?

பாருங்கள் காலில் விழும் கலாச்சாரம் என்ற காட்டுமிராண்டித்தனத்தை பேசத்துவங்கி என்ன என்னவோ உளறிக் கொண்டிருக்கிறேன்.

நாகரீகம் என்ற பெயரில் இயற்கை வளங்களையும் சக மனித நேயத்தையும் அழித்த நம்மைவிட காட்டை நேசித்து வாழ்ந்த் காட்டுமிராண்டிகள் மேலானவர்கள் தானே?

நான் உயர்ந்தவன் பிறர் காட்டுமிராண்டிகள் என கூற உங்களை தூண்டுவது எது என பாருங்கள் அதை யாரிடமாவது கொடுத்து உங்களை காலியான கோப்பை ஆக்கிக்கொள்ளுங்கள்.

இத்தனை சொல்லியும் நான் யார் காலிலாவது விழுவேன் என நீங்கள் அடம் பிடித்தால் , ஒருவர் காலில் விழும் முன் சிந்தியுங்கள். உங்களை தாழ்ந்தவர் என்றோ அல்லது உங்களை தன்மானமற்ற அடிமையாக எண்ணுபவர்கள் காலில் விழாதீர்கள். அது வணங்குதல் என்ற சரணாகதி தத்துவத்தை நீங்கள் அசிங்கப்படுத்தும் செயல்.
உங்களை தாழ்வாக நினைக்காதவர்கள் காலில் விழலாம் என கூறினேன் அல்லவா? யார் அவர்கள்? நம் பெற்றோர்கள் தம் குழந்தையை குறைவாக எண்ண மாட்டார்கள். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? நம் ஆசிரியர்கள் நம்மை என்றும் தாழ்வாக எண்ண மாட்டார்கள். ஆன்மீக உயர்வு கொண்டவர்கள். அனைத்தையும் ஆன்மாவாக பார்க்கக் கூடியவர்கள் என்பதால் இவர்களையும் நாம் வணங்கலாம்

சுருங்கச்சொன்னால் மாதா,பிதா, குரு தெய்வம் இவற்றை வணங்குகள். இவர்களை வணங்காமல் எதை வணங்கினாலும் நீங்கள் ஆன்மீக உயர்வு பெறப்போவதில்லை.

வேறு ஒருவரை நீங்கள் வணங்கினால் ஆன்மீகத்தில் உயர்வு பெற முடியாது.

No comments:

Post a Comment